ஜோதிடம்: எந்த காலங்களில் சனி பகவானிடம் கவனமாக இருக்கவேண்டும்
ஜோதிட கணக்கின் படி சந்திரன் எங்கு பயணிக்கிறாரோ அதுவே அவர்களின் ஜென்ம ராசி ஆகும். ஒருவருக்கு ஜென்ம ராசியின் அடிப்படையில் தான் கோட்சார ரீதியாக பலன் சொல்லுவோம். அந்த வகையில் ஒரு ராசியில் அதிக காலம் தாங்கக்கூடிய கிரகமாக சனிபகவான் இருக்கிறார்.
ஆக, அந்த சனியை போல் ஒருவர் வாழ்க்கையை கெடுப்பவரும் இல்லை, கொடுப்பவரும் இல்லை. அந்த வகையில் சனி பகவான் ஒருவருக்கு கொடுப்பாரா? கெடுப்பாரா? என்று பார்ப்போம். சனி பகவான் 12 ராசிகளை சுற்றி வர சுமார் 30 வருடம் எடுத்துக்கொள்கிறார்.
அதனால் தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை. 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி சொல்வார்கள். பொதுவாக ஒரு ஜாதகருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் சொல்வார்கள்.
குறிப்பாக சனிபகவான் 3, 6, 11-ல் சஞ்சரிக்கும் பொழுது அந்த ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எதை செய்தாலும் வெற்றிகள் கிடைக்கும், துன்பம் வந்தாலும் அதை கடந்து செல்லும் வலிமை பிறக்கும்.
ஆனால், அதே சனி பகவான்1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான கஷ்டங்களை கொடுப்பார். குறிப்பாக 12, 1, 2-ல் சஞ்சரிக்கும் காலங்கள் ஏழரை சனி காலம் ஆகும்.
மேலும், ஜென்மராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலத்தை விரையச் சனி என்றும் 1-ல் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி என்றும் கூறுவார்கள்.
இந்த காலத்தில் அந்த ராசியினருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை உண்டாக்கும். வீண் உடல் உபாதைகள், அலுவலகத்தில் அவ பெயர், குடும்பத்தில் சண்டை, நெருங்கியவர்கள் பிரிந்து போற சூழல் உண்டாகிவிடும்.
அதே, சனி 4-ல் சஞ்சரிக்கும் காலங்களை அர்த்தாஷ்டம சனி என்பார்கள். இந்த காலத்தில் மனம் எப்பொழுதும் பதட்டமான சூழ்நிலையில் இருக்கும். அதே, சனி 7-ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்கிறோம். இந்த காலகட்டமும் ஒரு இறுக்கமான காலகட்டம் தான். சன்டைகள் சந்திக்கும் காலகட்டம்.
மேலும், அதே சனி 8-ல் சஞ்சரிக்கும்போது, அஷ்டமச் சனி உண்டாகிறது. அஷ்டம சனியில் பலரும் மிக மோசமான நிலையை சந்திப்பார்கள்.
அதே போல் சனி ஒருவர் பிறந்த காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும் அஷ்டமச் சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும். தொழில் ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல.
ஆக, பெரும்பாலும் சனி பகவான் சாதகமான பலனை கொடுக்கவில்லை என்றாலும் ஜனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய துலாம், மகரம், கும்பத்தில், அமைந்திருந்தாலும் சனியின் நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சனியால் மிக பெரிய பாதிப்புகள் எப்பொழுதும் ஏற்பட போவதில்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |