முருக பெருமானுக்கு பல பெயர்கள் உண்டு.முருகனை வேலவன் கந்தன் ஆறுமுகன் என்று பல பெயர்கள் கொண்டு நாம் அழைத்து வணங்குவதுண்டு.அப்படியாக முருகப்பெருமான் பெயர் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.
அதில் முருகனுக்கு ஆறுமுகன் என்று பெயர் வர அவர் ஆறுமுகம் கொண்டதால் வந்த பெயர் காரணமாகும்.நாமும் பல கோயில்களில் முருகனை ஆறுமுகத்தோடு தரிசனம் செய்தது உண்டு.ஆனால் இங்கு ஐந்து முகம் கொண்டு முருகன் அருள்பலிக்கிறார்.அதை பற்றி பார்ப்போம்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகிலுள்ள இரும்பொறையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஓதிமலை . இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் ஒன்று இருக்கிறது.முருகன் கோயில்களிலேயே ஓதிமலை கோயில்தான் மிக உயரமான கோயிலாகும்.
இந்த மலை 3000 அடி உயரமும் 1800 படிக்கட்டுகளும் கொண்டது. இக்கோயில் பழநி மலையை விடவும் பழைமையான கோயிலாகும். முருகப்பெருமான் படைத்தல் தொழிலை செய்தபொழுது அனைத்து ஆத்மாவும் பூமியில் புண்ணிய ஆத்மாவாகவே பிறந்தது.
அதனால் அவற்றிற்கு இறப்பு ஒன்று ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் ஏற்பட்டது. பூமா தேவி சிரமப்பட்டதால், தேவர்கள் அனைவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். முருகனிடமிருந்து படைக்கும் தொழிலை பெற்று திரும்பவும் பிரம்மனிடமே தரும்படி கேட்டுக்கொண்டார்.
இதனால் சிவபெருமானும் முருகனை சந்தித்து பிம்மனிடமே படைக்கும் தொழிலை தரும்படி கேட்டுக்கொண்டார். சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளைச் சொன்ன முருகப்பெருமான், இந்த ஓதிமலையில் வேத ஆகம விதிகளை சிவபெருமானுக்கு ஓதியதால் இது ஓதிமலை என்ற பெயர் பெற்றது.
இப்பொழுது ஓதி மலை முருகன் கோயில் பற்றி பார்ப்போம்.
இக்கோயிலின் மலையடிவாரத்திலிருக்கும் சுயம்பு விநாயகரை முதலில் வழிபட்டு விட்டு பின்னர் முருகப்பெருமானை காணச் செல்ல வேண்டும். முருகனைக் காண ஈசன் மட்டுமே தனியாக ஓதிமலைக்கு வந்திருக்கிறார். அதனால் ஈசனுக்கு மட்டுமே சிலையிருக்கிறது.
அம்பாளுக்கு தனியாக சன்னிதி கிடையாது. ஆனால், இம்மலையின் மேல் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி என்ற பெயரில் இருவரும் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார்கள்.
இக்கோயிலின் வடமேற்கு பகுதியில் போகர் வேள்வி நடத்திய இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் என்ன அதிசயம் என்றால் இங்கு உள்ள மண் வெண்மையான நிறத்தில் இருக்கும்.
ஆதியில் இந்த மண்ணைத்தான் திருநீறு பிரசாதமாய் கொடுத்து இருக்கின்றனர். ஒரு முறை பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலை செய்ய போகர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு கட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு அவருக்கு பழநிக்கு செல்ல வழி தெரியவில்லை.
உடனே ஓதிமலையில் வீற்றி இருக்கும் முருகன் நினைவுக்கு வர, முருகப்பெருமானை நினைத்து வேள்வி ஒன்றை நடத்தினார் போகர். தனது பக்தன் போகருக்கு, பழநி திருத்தலம் செல்ல வழிகாட்ட அதிசயத்தை நிகழ்த்தினார் முருகப்பெருமான்.
தனது ஆறு தலையிலிருந்து ஒரு தலையைப் பிரித்து, நான்கு கரங்களையும் கொண்டு முருகப்பெருமான் போகர் முன்பு காட்சியளித்து அவரை குமாரப்பாளையம் வரை அழைத்துச்சென்று பின்பு பழநிக்கு வழிகாட்டி விட்டு அங்கேயே குமாரப்பாளையம் முருகனாக அமர்ந்துவிட்டார்.
இதனால்தான் ஓதிமலை முருகன் 5 தலையுடனும் 8 கைகளுடனும் காட்சி தருகிறார் என்று தல வரலாறு கூறுகிறது. எனவே, பழநி மலைக்கு முன்னரே உருவானதுதான் இந்த இரும்பொறை ஓதிஆண்டவர் திருக்கோயில். பொதுவாக, அனைத்துக் கோயில்களிலும் மூலவர் சிலை பீடத்தின் மீதே நிறுவப்பட்டிருக்கும்.
ஆனால், இக்கோயில் மூலவர் முருகன் சிலை பாறையின் மீது நிறுவப்பட்டிருருப்பது விசேஷம். இந்த அமைப்பிற்கு ‘திரிகூடபீடம்’ என்று பெயர். திங்கள்,வெள்ளி, சஷ்டி, கார்த்திகை, அமாவாசை தினங்களில் மட்டுமே இத்தல முருகப்பெருமானை தரிசிக்க முடியும்.
போகருக்கு வழிகாட்டிய இந்த ஓதிமலை முருகப்பெருமானை வணங்கி வர நம் வாழ்க்கையிலும் நல் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |