ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை
ஐயப்ப பக்தர்கள் அனைவரும் காத்திருக்கும் மாதம் கார்த்திகை மாதம்.இந்த மாதத்தில் பலரும் ஐயப்பனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து மலைக்கு செல்வார்கள்.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து வழிபாடு செய்வது உண்டு.
சாஸ்தா, தர்மசாஸ்தா, ஹரிஹரன், மணிகண்டன் போன்ற பல பெயர்களால் ஐயப்பன் அழைக்கப்படுகிறார். ஐயப்ப சுவாமியின் பரிபூர்ண அருள் இருந்தால் அந்த சனிபகவானும் நம்மிடம் நெருங்க முடியாது என்று சொல்லுவார்கள்.
இவ்வளவு சக்தி வாய்ந்த ஐயப்பனுக்கு மாலை போடும் பொழுது நாம் சில விஷயங்களை கண்ணும் கருத்துமாக பின்பற்ற வேண்டும்.இல்லை என்றால் ஐயப்ப சுவாமியின் கோபத்திற்கு ஆளாகக்கூடும் என்பது ஐதீகம். பலரும் வாரம், 3 நாட்கள் விரதமிருந்து மாலை அணிந்து சபரிமலைக்கு செல்கிறார்கள்.
ஆனால் அப்படி செல்லக்கூடாது. ஐயப்பனின் பரிபூர்ண அருளைப் பெற வேண்டுமானால், கன்னி சாமியாக இருந்தாலும், குரு சாமியாக இருந்தாலும் ஒரு மண்டலத்திற்கு விரதமிருந்து சுவாமி ஐயப்பனை தரிசிக்க வேண்டும். நாம் மாலை அணிய போகின்றோம் என்று முடிவு எடுத்து விட்டால் தாய் தந்தை மற்றும் குருவிடம் தகவலை தெரிவித்து அவர்களின் அனுமதி பெற்ற பின்பே மாலை அணிய வேண்டும்.
மேலும் மாலை அணியும் போது, அதை கோவிலிலோ, தாயார் முன்னிலையிலோ அணிவதே நல்லது.ஐயப்பனுக்கு மாலை அணிய நினைப்போர் துளசி மாலையை அணிவது நல்லது. அதுவும் அவரவர் வசதிக்கேற்ப வெள்ளி அல்லது செம்பு கம்பியால் கட்டிய துளசி மாலைகளை அணிந்தால், அதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிலர் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மாலை அணிவார்கள்.அப்படியானவர்கள் ஒரே மாலையை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொண்டால், அந்த மாலை ஒரு தெய்வீக சக்தியைப் பெறும். ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து தினமும் ஐயப்பன் கோயிலுக்கு ஐயனை தரிசனம் செய்வதோடு தினமும் 108 ஐயப்ப சரணம் சொல்லி வழிபடுவது அவசியம்.
முதல்முறையாக ஐயப்பனுக்கு மாலை அணிபவர்களை கன்னி சாமி என்று அழைப்பர். இவர்கள் கட்டாயம் கருப்பு நிற ஆடைகளையே அணிய வேண்டும். மேலும் காலில் காலணிகள் எதுவும் அணியக்கூடாது. எப்போதும் மனதில் ஐயப்பனை நினைத்தவாறு இருக்க வேண்டும்.
அனைவரிடமும் பணிவாக கனவாக நடந்து கொள்ள வேண்டும். கோபம் கொள்வதையோ, கெட்ட வார்த்தைகளை பேசுவதையோ தவிர்க்க வேண்டும். இவ்வாறு சில குறிப்பிட்ட சில விஷயங்களை பின்பற்றி மாலை அணிந்து ஐயப்பன் கோயிலுக்கு செல்ல ஐயப்பனின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |