நினைத்தது நிறைவேற 9 நாள் முருகபெருமான் வழிபாடு
சில நாட்கள் முன்பு தான் கந்த சஷ்டி விரதம் முடிந்தது.முருகன் வழிபாடுகளில் இந்த கந்த சஷ்டி விரதம் சிறப்பு வாய்ந்த வழிபாடாக கொண்டாடப்படுகிறது.அப்படியாக பல முருக பக்தர்களுக்கு இந்த விரதம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும்.
சில முருக பக்தருக்கு சில கால சூழ்நிலையால் அந்த வாய்ப்புகள் கிடைக்காமல் போயிருக்கும்.அப்படியாக அந்த வாய்ப்புகள் தவற விட்ட முருக பக்தர்கள் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
இந்த சஷ்டி விரதம் மேற்கொள்ள ஒரு நல்ல நாள் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.அது முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.இந்த வழிபாட்டை மேற்கொள்ள முதலில் பூஜையறையில் ஒரு மனப்பலகையை போட்டு, அந்த மனப்பலகையில் அரிசியால் அறுங்கோண சக்கரம் வரைய வேண்டும்.
அதாவது ஸ்டார் கோலம் வரைந்து விட்டு, அதற்கு நடுவே சரவணபவ என்று எழுத்திடவேண்டும். 6 முனைகளிலும் ஆறு விளக்குகளை வைத்து, நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். இது சரவணபவ மந்திரத்திற்கான 6 விளக்கு. கோலத்தில் நடுவில் ஒரு இடம் இந்தக் கோலத்தில் காலியாக இருக்கும்.
அந்த இடத்தில் ஒரு அகல் விளக்கு வையுங்கள்.அந்த விளக்கு ஏற்றும் பொழுது மனதார முருகப்பெருமானை நினைத்து ஏற்ற வேண்டும். வீட்டில் முருகர் படம் அல்லது வேல் இருந்தால் அதற்கான அலங்காரங்கள் அபிஷேகங்களை செய்து முடிக்க வேண்டும்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து 9 நாள், 11 நாள் நம்முடைய வசதிக்கு ஏற்ப தொடரலாம்.எத்தனை நாள் வழிபாட்டை வேண்டும் என்றாலும் மேற்கொள்ளலாம். ஆனால் தினமும் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக வீட்டில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு நாள் அந்த மனப்பலகையில் அரிசியில் நட்சத்திர கோலம் போட்டு விட்டால் போதும். அதை தினமும் கலைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. மேலும்,விரதம் இருக்கக் கூடிய 9 நாட்களும் அதே கோலத்தில் அதே மண் அகல் விளக்கில் புதுசாக நெய்விட்டு, புதுசாக பஞ்ச திரி போட்டு, விளக்கு ஏற்றலாம்.
இந்த நாட்களில் முருகனுக்கு ஒரு நெய்வேத்தியம் வைத்து,முருகன் மந்திரத்தை சொல்லுவது சிறந்த பலனை கொடுக்கும்.இல்லை என்றால் ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
இந்த வழிபாட்டை சூரிய உதயத்திற்கு முன்பு செய்து விட்டு வழக்கம் போல் நாம் எடுத்து கொள்ளும் சைவ உணவு எடுத்து கொள்ளலாம்.கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ள முடியவில்லை என்று வருத்தம் கொண்டவர்கள் கட்டாயம் இந்த வழிபாட்டை மனதார செய்ய நிச்சயம் விரதம் இருந்த பலன் கிடைப்பதோடு முருகனின் பரிபூர்ண அருளும் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |