ஒருவர் நமக்கு தீங்கு செய்திருக்கிறார் என்றால் நம்மில் பலருக்கும் நமக்கு தீங்கு செய்தவருக்கு எப்பொழுது அந்த தண்டனை வந்து சேரும் என்கின்ற ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியாக, அதற்கு ஒரு தீர்வாக ஒரு கதை ஒன்று இருக்கிறது, அதை பற்றி பார்ப்போம்.
ஒரு நாள் ஒரு சீடன் அவருடைய குருவிடம் சென்று குருவே என்னை ஒருவர் மிகவும் காயப்படுத்தி விட்டார். அவர் எனக்கு செய்த இந்த தீமை அவருக்கு கட்டாயமாக திரும்பி செல்ல வேண்டும். அதற்குரிய தண்டனை கர்மபலன் அனுபவிக்க வேண்டும் என்று அவர் கோபமாக சொல்கிறார். குரு அமைதியாக அந்த சீடன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிறகு குரு அருகில் இருக்கக்கூடிய ஒரு நெருப்பிலிருந்து ஒரு கரித்துத்துண்டை எடுத்து சீடனிடம் கொடுக்கிறார். சீடன் குரு கொடுத்த அந்த கரித்துத்துண்டை கையில் பிடிக்கிறார். சில நொடிகளில் அவருடைய கை சுடத்துவங்குகிறது.

அந்த சூடு தாங்க முடியாமல் குருவே இது ரொம்ப சூடாக இருக்கிறது என்று கையை உதறிவிட்டார். அப்பொழுது குரு சொல்கிறார், இப்பொழுது இந்த இடத்தை நன்றாக ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.
"நெருப்பு உன்னை சுட வேண்டும் என்று நினைத்து தான் நீ அதை கையில் பிடித்தாயா? கட்டாயமாக இல்லை. நீ அதை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதால் தான் அந்த நெருப்பு உன்னை சுடுகிறது.
இதை போல் தான் யாராவது நமக்கு தீங்கு செய்கின்ற வேளையில் அவர்களுக்கு அதற்கான தண்டனை கிடைக்க வேண்டும் நாம் அனுபவித்த வலி அவர்களுக்கு சென்று சேர வேண்டும், அவர் செய்த கர்ம வினைக்கான பலன் அனுபவிக்க வேண்டும் என்று அந்த சம்பவத்தையும் நடந்த நிகழ்வுகளையும் கோபத்தையும் நம் மனதில் பிடித்துக் கொண்டே இருக்கின்றோம்.

அவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் செய்த தவறின் நெருப்பை நாம் தான் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறோம். அது அவர்களுக்கு சுடுகிறதா என்று தெரியாது. ஆனால், நெருப்பு நம்மை மட்டும் தான் தொடர்ந்து எரித்துக் கொண்டே இருக்கும்.
ஆக, ஒருவர் செய்வதற்குரிய கர்ம பலனை அவர்கள் அனுபவித்துக் கொள்வார்கள். அது நம்முடைய வேலை அல்ல. நம்முடைய வேலை இந்த நெருப்பை மட்டும் கீழே போட்டுவிட்டு அவர்களை மன்னித்து பழக வேண்டும்.
அது அவர்களுக்காக இல்லை. நம்முடைய மன அமைதிக்காக. சில நேரங்களில் காயத்திற்கான மருந்து நாம் நடந்த நிகழ்வுகளை அப்படியே விட்டுவிடுவதில் இருந்து தான் கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |