2026 கார்த்திகை தீபம் : வழிபாட்டு நேரம், விரத விதிமுறைகள் மற்றும் தீபம் ஏற்றும் முறை
இந்து மத வழிபாடுகளில் கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் விமர்சையாக கொண்டாட கூடிய ஒரு பண்டிகையாகும். அப்படியாக, கார்த்திகை தீபத்திருநாள் அன்று வீடுகளில் விரதம் இருக்கும் முறை? தீபம் ஏற்ற சரியான முறை? நேரம் போன்றவற்றைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் சிறப்பு :
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் இணையக்கூடிய அந்த திரு நாளையே நாம் திருக்கார்த்திகை அல்லது கார்த்திகை தீபத்திருநாள் என்று கொண்டாடி வருகின்றோம்.
இந்த கார்த்திகை தீபத்திருநாள் திருவண்ணாமலை திருத்தலத்துடன் தொடர்புடைய ஒரு அற்புதமான நாளாகவே கருதப்படுகிறது. அடிமுடி காண முடியாத ஈசன் உலகிற்கு காட்சி அளித்த திருநாள் இதுவாகும். அதாவது இறைவன் அக்னி பிளம்பான ஜோதி வடிவமானவர் என்பது எல்லோருக்கும் உணர்த்தக்கூடிய திருநாளாக விளங்குகிறது.

இறைவன் ஜோதி வடிவமாக காட்சியளித்த திருவண்ணாமலை ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வடிவமாக காத்திருந்து தற்பொழுது நடக்கக்கூடிய கலியுகத்தில் கல் மலையாக காட்சி தருவதாக புராணங்கள் சொல்கிறது.
கார்த்திகை தீபத் திருநாள் 2026 வழிபாட்டு தேதி நேரம் :
கார்த்திகை தீபத் திருநாள் 2026 தேதி - நவம்பர் 24 செவ்வாய்
பெளர்ணமி திதி துவக்கம்: நவம்பர் 23 இரவு 11.20 பெளர்ணமி திதி: நிறைவு - நவம்பர் 24 இரவு 09.24.
கார்த்திகை நட்சத்திரம் துவக்கம்: நவம்பர் 24 அதிகாலை 02.22கார்த்திகை நட்சத்திரம்: நிறைவு - நவம்பர் 25 அதிகாலை 01.05.
கார்த்திகை தீப வழிபாட்டு நேரம் :
நவம்பர் 24 மாலை 6 மணிக்கு மேல் கார்த்திகை தீபத்தன்று என்ன செய்ய வேண்டும்? இந்த அற்புதமான கார்த்திகை தீபத் திருநாள் அன்று சிவபெருமானையும் முருகப்பெருமானையும் வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு மிகவும் முக்கியமான விசேஷம் என்னவென்றால் முருகப்பெருமானுக்குரிய செவ்வாய்க்கிழமையில் கார்த்திகை பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வரக்கூடியதாக அமைகிறது. இது இன்னும் பல மடங்கு நற்பலன்களை வழங்குகிறது.
ஆக, இந்த நாளில் முருகப்பெருமானையும் சிவபெருமானையும் மனதார நினைத்து வழிபாடு செய்வது என்பது நமக்கு அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்று கொடுக்கும்.

கார்த்திகை தீபம் அன்று விரதம் இருக்கும் முறை :
திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்று அதிகாலைகளில் இருந்து விரதத்தை துவங்க வேண்டும். உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் முக்கியமாக பட்டினி விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் எளிமையான உணவு, பால், பழம், சாப்பிட்டு விரதம் கடைபிடிக்கலாம்.
இந்த நாள் முழுவதும் மௌன விரதம் இருப்பது சிறந்தது. முடியாதவர்கள் குறிப்பிட்ட சில நேரமாவது மௌன விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். இந்த காலகட்டங்களில் இறை நாமத்தை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
பிறகு மாலை வீடு முழுவதும் விளக்கேற்றிய பிறகு சிவபுராணம், கந்த அலங்காரம், திருப்புகழ், கந்தர் அனுபூதி போன்றவற்றை படிக்கலாம். அதன் பிறகு இறைவனை மனதார நினைத்து வழிபாடு செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றும் சரியான முறை :
திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த அடுத்த நொடியே மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்த காலகட்டங்களில் வீடுகள் எல்லோரும் விளக்கேற்றுவதற்கு தயாராக எடுத்து வைத்திருப்பார்கள். மலையில் மகா தீபம் ஏற்றிய பிறகு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு முதலில் வீட்டு வாசலில் இருக்கும் விளக்குகளை ஏற்ற வேண்டும். பிறகு அதிலிருந்து ஒரு அகல் விளக்கை எடுத்து வந்து அதை வைத்து பூஜை அறையில் ஏற்ற வேண்டும்.
அதன் பிறகு வீட்டில் இருக்கக் கூடிய எல்லா பகுதிகளிலும் விளக்கேற்ற வேண்டும். மாதவிடாய் ஆன பெண்கள் பூஜை அறையில் மற்றொருவரை விளக்கேற்ற சொல்லிவிட்டு மற்ற இடங்களில் அவர்கள் விளக்கேற்றலாம்.
பிறப்பு இறப்பு தீட்டு இருப்பவர்கள் வீட்டு வாசலில் மட்டும் இரண்டு தீபங்கள் ஏற்றலாம். இந்த நாளில் குறைந்தபட்சம் ஒருவருடைய வீடுகளில் 27 தீபங்கள் ஏற்றுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
Disclaimer:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |