நாளை கார்த்திகை முதல் நாள் தோஷங்கள் விலக செய்ய வேண்டிய முக்கியமான வழிபாடுகள்
தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கிறது. கார்த்திகை மாதத்தில் தான் திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மேலும், இந்த கார்த்திகை மாதம் முழுவதும் எல்லா வீடுகளும் ஒளி நிறைந்து காணப்படும்.
அதோடு ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை சென்று வழிபாடு மேற்கொள்வார்கள் . இவ்வாறு பல்வேறு சிறப்புகள் இந்த கார்த்திகை மாதத்தில் இருக்கிறது. அப்படியாக நாளை நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறக்க இருக்கிறது. அன்றைய தினம் நம்முடைய பாவங்களும் தோஷங்களும் விலகி நன்மைகள் செய்ய வேண்டிய வழிபாடுகளை பற்றி பார்ப்போம்.

1. கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியை முடவன் முழுக்க என்று சொல்வார்கள். அதாவது அன்றைய தினத்தில் காவிரியில் நீராடினால் நம்முடைய சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. மேலும் இது கார்த்திகை முதல் நாளில் காவிரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானப் செய்த முழு பலனை இந்த நாளில் பெறலாம்.
2. மேலும், நாளை கார்த்திகை முதல் நாள் அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் எழுந்து சுத்தமாக குளித்து வீடு வாசல்களை எல்லாம் கூட்டி கோலம் போட்டு நிலை வாசலுக்கு வெளியில் முதலில் இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
இந்த மண் அகல் விளக்குகளை தரையில் வைக்காமல் ஒரு சிறிய தட்டின் மேல் வைத்து விளக்கேற்ற வேண்டும். இவ்வாறு கார்த்திகை முதல் நாளில் தீப ஒளியில் அந்த தினத்தை நாம் வரவேற்க வேண்டும்.
3. முடிந்தவரை கார்த்திகை மாதத்தில் அசைவ உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லதாகும். காரணம் கார்த்திகை மாதத்தில் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்பவர்கள் மறு ஜென்மத்தில் புழு பூச்சிகளாக பிறவி எடுப்பார்கள் என்று ஒரு கருத்துக்கள் பத்ம புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

4. கார்த்திகை மாதம் நாள்தோறும் சூரிய உதயத்தின் பொழுது நீராடினால் நமக்கு சகல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனை பெறலாம் என்று சொல்கிறார்கள்.
5. கார்த்திகை மாதம் ஒளி நிறைந்த மாதமாகும். ஆக இந்த மாதத்தில் விளக்கு தானம் செய்தால் நமக்கு பிரம்மஹத்தி முதலான தோஷங்கள் இருந்தால் விலகும்.
ஆக இவ்வளவு சிறப்பான கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று நாம் கட்டாயமாக அதிகாலை வீடுகளில் தீபம் ஏற்றி கார்த்திகை திருநாளை வரவேற்று நம்முடைய வீடுகளில் சூழ்ந்துள்ள இருள் விலகி நன்மை பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |