திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா: இன்று பிடாரி அம்மன் உற்சவம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த திருவிழா காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று இரவு தொடங்கியது. இன்று பிடாரி அம்மன் உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடைபெறவுள்ளன.
3 நாட்கள் நடைபெறும் எல்லை தெய்வ வழிபாட்டுக்குப் பிறகு மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் 4ஆம் திகதி காலை கொடியேற்றம் நடக்கிறது.
6ஆம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று இரவு தங்கத் தேரோட்டமும் நடைபெறும்.
7ஆம் நாள் உற்சவத்தில் பஞ்ச ரத மகா தேரோட்டம் 10ஆம் திகதி நடைபெறும். அன்று ஒரே நாளில் 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபத் திருவிழா 13ஆம் திகதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தைக் காணலாம்.
முன்னதாக அருணாசலேவரர் கோவில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளத் தங்க கொடிமரம் முன்பு அர்த்த நாரீஸ்வரர் காட்சி தருவார்.
இதையடுத்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெற்றதும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |