குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க செல்ல வேண்டிய கோயில்
விருப்பம் நிறைவேறவும்,குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும் , தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகவும் வேண்டுமா... கேரள மாநிலம் கொல்லம் அருகிலுள்ள ஓச்சிரா பரப்பிரம்மம் கோயிலுக்கு வாருங்கள்.
கடவுள் என்ற சொல்லுக்கு எல்லா பொருளையும் கடந்தவர், எல்லா பொருளிலும் உள்ளவர் என பொருள். இதற்கு 'தெய்வம், பரப்பிரம்மம்' என வேறு பெயர்களும் உண்டு.
கோயில் கருவறை, விமானம், தலவிருட்சம், கொடிமரம், ராஜகோபுரம் ஆகிய ஐந்திலும் குடியிருப்பவர் கடவுள். ஆனால் அவர் எங்கும் நிறைந்தவர் என்பதை விளக்கும் விதத்தில் வெட்ட வெளியில் உள்ள இரண்டு மரங்கள் இங்கு கடவுளாக வழிபடப்படுகின்றன.
மரங்களே இங்கு மூலவர்கள். இதை 'ஓம்காரக்கோயில்' என்றும் சொல்கின்றனர். கருவறையோ, கல்மண்டபங்களோ இங்கு இல்லை. பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோயிலின் கோபுர நுழைவாயிலைக் கடந்து சென்றால் இரு மரங்களை சுற்றியுள்ள மேடையில் விநாயகர், சிவலிங்கங்கள், நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் விருப்பம் நிறைவேற இவற்றுக்கு அபிேஷகம் செய்து பிரார்த்தனை செய்கின்றனர். மரத்தின் முன்பு மண்டபங்களில் உள்ள கல் விளக்குகள் கார்த்திகை தீபங்களை நினைவூட்டுகின்றன.
சிவனின் வாகனமான காளை இக்கோயிலில் மிக புனிதமானதாக போற்றப்படுகிறது. இதனிடம் ஆசி பெற்றால் நினைத்தது நடக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
திருவிதாங்கூர் மன்னர் ராம வர்மாவால் இங்கு திருப்பணி செய்யப்பட்டுள்ளன. புரட்டாசி ஓணம் அன்று திருவிழா கொண்டாடப்படுகிறது. இங்கு பொங்கலன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இக்கோயிலின் அருகில் கணபதி, மகாலட்சுமி, ஐயப்பன் கோயில்கள் உள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |