விஷ்ணுவிற்கும் லக்ஷ்மிதேவிக்கும் திருமண நடந்த இடம் எங்கு தெரியுமா?
சுற்றுலாத் தலமாகவும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழும் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை பெருமாள் கோயில் குறித்து கேள்விப்பட்டுள்ளீர்களா? சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிரிநாதர் கோயில் குறித்தும் அதன் சிறப்புகளைக் குறித்தும் நாம் இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
தல அமைவிடம்:
முதலில் இந்தக் கோயிலுக்கு எப்படிச் செல்வது என்பது குறித்துத் தெரிந்துகொள்ளலாம். சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேலம் கோட்டை அருள்மிகு அழகிரிநாத சுவாமி கோயில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து பஸ் போக்குவரத்து வசதியும் உள்ளது.
தல வரலாறு:
இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள படி பார்க்கையில், காக்கும் கடவுள் விஷ்ணுவின் வடிவமான அழகிரிநாதர் திருமணிமுத்தாரின் கரையில் தவம் செய்த பிருகு முனிவருக்குக் காட்சியளித்தார். விஷ்ணு பகவான் முனிவரின் கவனத்தை ஈர்க்காததால், கோபத்தில் விஷ்ணுவின் மார்பில் உதைத்தார்.
விஷ்ணுவின் மார்பில் வசிக்கும் அவரது மனைவி லட்சுமி, முனிவரின் இந்தச் செயலுக்கு விஷ்ணு பகவான் கண்டிக்காததால் கோபமடைந்தார். அதனால் வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூமியை அடைந்து பத்மாவதி வடிவம் எடுத்தார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற விஷ்ணு பத்மாவதி தாயாரை மணந்தார். இருப்பினும் விஷ்ணு பகவான் மீது லட்சுமி தேவி கோபத்துடனே இருந்தார்.
தவற்றை உணர்ந்த பிருகு முனிவர் லட்சுமி தேவியிடம் மன்னிப்பு கேட்டு, அடுத்த பிறவியில் லட்சுமியை சுந்தரவல்லியாகப் பிறக்குமாறு கோரினார். முனிவர் மீண்டும் பிருகுவாகப் பிறந்து, தனது மகளாக லட்சுமியை அடைய தவம் செய்தார். தவத்தால் மகிழ்ந்த விஷ்ணு அவரது விருப்பத்தை நிறைவேற்றினார்.
ஒரு நாள், தனது ஆசிரமத்தின் தோட்டத்தில் இருந்த துளசிச் செடியின் கீழ் ஒரு பெண் குழந்தையைக் கண்டார், அவளுடைய அழகால் ஈர்க்கப்பட்டு அவருக்கு சுந்தரவல்லி (அழகான பெண்) எனப் பெயரிட்டு பிருகு முனிவர் வளர்த்து வந்தார்.
விஷ்ணு அழகிரிநாதராக பூமியில் தோன்றினார். இறுதியில் அழகிரிநாதரும் சுந்தரவல்லி தாயாரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்து கொண்ட தலமே கோட்டை பெருமாள் அழகிரிநாதர் கோயிலாகும்.
தல அமைப்பு:
பண்டைக் காலத்தில் அழகிரிநாதர் கோயிலுக்கு முன்பாக திருமணிமுத்தாறு கரைபுரண்டு ஓடியதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோயிலானது அதன் சிற்பக்கலைக்காகப் பெரிதும் அறியப்படுகிறது. திருமணி முத்தாற்றில் நீராடி திருமாலைத் துதித்தால் துயரங்கள் தூர விலகி ஓடும் என்பது ஐதீகம்.
அதியர்கள் காலத்தில் கொங்கு மண்டலத்தில் சமஸ்கிருத மொழி ஆதிக்கம் செலுத்திய காலகட்டம் அது. சௌந்திரராஜன் என்ற சமஸ்கிருத சொல்லுக்குத் தமிழில் அழகுராஜன் எனப் பொருள். மலைசூழ் நகரமான சேலத்தில் அருள்பாலித்த இறைவன் சௌந்திரராஜன் தான், பிற்காலத்தில் அழகிரிநாதர் எனத் தமிழில் அழைக்கப்படுகிறார்.
அழகிரிநாதருக்குப் பின்புறத்தில் சுந்தரவல்லி தாயார் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென்மேற்கு மூலையில் சோழர்களை வீழ்த்திய மதுரை மன்னர் சுந்தரபாண்டியன் வெற்றி குறித்த கல்வெட்டு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மூலவரான அழகிரி நாதர், அருகில் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தவிர மூலவரைச் சுற்றி சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர், வேணுகோபாலசுவாமி சன்னதிகளும் உள்ளன.
திருத்தேரோட்டம்:
வைகாசி மாதத்தில் இங்கு நடைபெறும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. தேரோட்டத்தின்போது சேலம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வார்கள்.
சிறப்பு அலங்காரம்:
ஐப்பசியில் பவித்ர உற்சவமும், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவும், பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி உற்சவமும் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மூலவர் அழகிரி நாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர். இவை தவிர முக்கிய திருவிழா நாட்களில் உற்சவர் சுந்தரராஜர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
தல சிறப்புகள்:
கோட்டை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு இத்தலத்தில் வைத்தே திருமணம் நடைபெற்றுள்ளது. இங்கு கோட்டை பெருமாள் அழகிரிநாதர் திருமணக் கோலத்தில் காட்சியளிப்பதால் திருமணமாகாத ஆண், பெண் யாராக இருப்பினும் கோட்டை அழகிரிநாதரை மனமுருகி வேண்டிக் கொண்டால் திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கைகூடும்.
அதோடு குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதோடு எல்லாவிதமான நோய் நொடிகளும் அழகிரிநாதரிடம் வேண்டினால் விலகி விடும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
திருவிழாக்கள்:
வைகுண்ட ஏகாதசி இத்தலத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகச் சிறப்பான திருவிழாவாகும். வைகுண்ட ஏகாதசியின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வதற்கு வருகை புரிகின்றனர். பிரமோத்ஸவம், நவராத்திரி, பவித்ரோத்ஸவம, புரட்டாசி மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
வழிபாட்டு நேரம்:
கோயில் சடங்குகள் ஒரு நாளைக்கு ஆறு முறை செய்யப்படுகின்றன. காலை 7 மணிக்கு உஷத்காலம், காலை 8:00 மணிக்கு கலசாந்தி, மதியம் 12:00 மணிக்கு உச்சிகாலம், மாலை 6:00 மணிக்கு சாயரக்ஷை, மாலை 7:00 மணிக்கு இரண்டாம் காலம் மற்றும் இரவு 10:00 மணிக்கு அர்த்த ஜாமம்.
ஒவ்வொரு சடங்கிலும் மூன்று படிகள் உள்ளன:
1. அழகிரிநாதர் மற்றும் சுந்தரவல்லி தாயார் இருவருக்கும் அலங்காரம், 2. நெய்வேத்தியம், 3. தீப ஆராதனை போன்றவை. காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |