கும்பகர்ணனின் செஞ்சோற்றுக்கடன் பற்றி தெரியுமா?
மனதை நெகிழச் செய்யும் கும்பகர்ணனின் செஞ்சோற்றுக்கடன் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கும்பகர்ணனின் தம்பி வீடணன், "அண்ணா! நீயும் என்னுடன் வந்து ராமருடன் சேர்ந்துகொள். மாபாதக செயலைச் செய்யும் அண்ணன் இராவணனுடன் இருப்பதை விட அறத்தில் சிறந்த ராமருடன் இருப்பதுதான் நம்மை நல்வழிப்படுத்தும் செயலாகும்.
நம்முடன் பிறந்த அண்ணன் ராவணனே ஆனாலும் அவன் செய்யும் இழிச்செயலுக்கு நாம் துணை போகலாமா?
என்னதான் அண்ணன் ராவணன் நம் உடன் பிறப்பாக இருந்தாலும் தகாத செயலை செய்யும் அவனோடு சேர்ந்து இருப்பதை விட்டு நல்லதே செய்யும் ராமபிரானிடம் வந்து சேர்வதுதான் நாம் சிறக்க, செய்த பாவங்கள் எல்லாம் அழிய, சிறந்த வழி.
ஆதலால், அண்ணன் ராவணனை விட்டு விலகி ராமனுடன் வந்து சேர்" என்று அழைத்தான். அதற்கு கும்பகர்ணன், "தம்பி! நான் ஆறு மாதம் உறங்குபவன்.
ஆறு மாதம் உண்பவன். ஆறு மாத காலத்திற்கு வேண்டிய உணவுகளை வண்டி வண்டியாக அனுப்புபவன் அண்ணன் ராவணன்.
இவ்வளவு உணவு வகைகளை ஒருவனுக்காக அனுப்புகிறோமே என்று எந்தவிதமான மன வருத்தமும் படாமல் என்னை காப்பாற்றி வருபவன் அண்ணன் ராவணன்தான். ஆதலால் நான் அண்ணனுக்கு செஞ்சோற்று கடன் அடைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதனால் அண்ணன் தீய வழியில் செல்கிறான் என்பதை அறிந்து இருந்தாலும், அவனை விடுத்து உன்னுடன் வர என் மனம் ஒப்புக் கொள்ளாது. ஆதலால் நான் உன்னுடன் வர இயலாது.
நீயாவது நாங்கள் இறந்த பின் எங்களுக்கு எள்ளும் நீரும் தெளித்து இறுதிக்கடன் செய்ய ,உயிரோடு உயர்ந்த இடத்தில் அடைக்கலம் புகுந்திருப்பதைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நேரத்தில் அந்த ராமபிரானை விட்டு நீ ஏன் இங்கு வந்தாய்? நான் உன்னுடன் வர மாட்டேன். நீ அவரிடம் சென்று சேர்” என்றான் கும்பகர்ணன்.
கும்பகர்ணனின் செஞ்சோற்றுக்கடன் அனைவரின் மனதையும் நெகிழச் செய்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |