திருமணமாக வேண்டுமா ஒருமுறை குன்றத்தூர் முருகனை போய் தரிசனம் செய்தால் போதும்

By Aishwarya Apr 16, 2025 05:48 AM GMT
Report

சென்னையின் புறநகர்ப் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் இரண்டாம் குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்டது.

இதிகாசத் தகவல்களின்படி முருகப் பெருமான் திருப்போரூரில் இருந்து திருத்தணிக்குப் பயணம் மேற்கொள்ளும்போது இத்தலத்தில் தங்கினார் என்று அறியப்படுகிறது.இத் தலத்தின் சிறப்புகளையும் பெருமைகளையும் முருகப்பெருமானின் கருணையினையும் தெரிந்துகொள்ளலாம்.

திருமணமாக வேண்டுமா ஒருமுறை குன்றத்தூர் முருகனை போய் தரிசனம் செய்தால் போதும் | Kundrathur Murugan Temple

குன்றத்தூர் பெயர் காரணம்:

குன்றுடன் கூடிய ஊர் என்பதால், இத்தலத்துக்கு குன்றத்தூர் என்ற பெயர் ஏற்பட்டது. 84 படிகள் கொண்ட மலைக்கோயிலில் மூலவர் வடக்கு திசையை நோக்கி இருப்பது தனிச்சிறப்பு. சிவாகம முறையில் பூஜைகள் நடைபெறும் இக்கோயிலைப் போற்றி முருகனடியார் பலர் பாடியுள்ளனர். இங்குள்ள சரவணப் பொய்கை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. 

தல வரலாறு:

திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற முருகப் பெருமான், உக்கிரமாக இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். செல்லும் வழியில் ஓரிடத்தில் சிவபூஜை செய்ய எண்ணினார்.

அந்த இடத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனைகள் செய்தார். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தார். அந்தக் குன்றில் சிறிது நேரம் அமர்ந்து சிவபெருமானை வேண்டி, தியானம் செய்தார்.

கஷ்டங்கள் தீர்க்கும் காரப்பாக்கம் கபாலீஸ்வரர் கோயில்

கஷ்டங்கள் தீர்க்கும் காரப்பாக்கம் கபாலீஸ்வரர் கோயில்

குலோத்துங்க சோழன் காலத்தில்:

  பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சிபுரிந்த குலோத்துங்க சோழன், இக்குன்றின் மீது முருகப் பெருமானுக்கு கோயில் எழுப்பினார். முருகப் பெருமான் பூஜை செய்த சிவபெருமான், மலையடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் தனிக் கோயில் மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கந்தப் பெருமானால் வழிபடப்பட்டவர் என்பதால் சிவபெருமானுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்ட இடமே குன்றத்தூர் என அறியப்படுகிறது.

திருமணமாக வேண்டுமா ஒருமுறை குன்றத்தூர் முருகனை போய் தரிசனம் செய்தால் போதும் | Kundrathur Murugan Temple

குன்றத்தூர் சிறப்புகள்:

சென்னை அருகே குன்றத்தூரில் சிறு குன்றின் மீது வீற்றிருக்கும் முருகக் கடவுளுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு.

முதல் சிறப்பு

முற்காலத்தில் முருகன் குன்றின் மீது வந்தமர்ந்த தருணம். இவ்விரு சிறப்புகளால்தான் சில முக்கிய தேவைகளுக்கான பரிகார ஸ்தலமாக குன்றத்தூர் விளங்குகிறது.

இரண்டாவது சிறப்பு

முருகன் தேவியர் சமேதராக வடதிசையை நோக்கி இருப்பது. வடதிசை என்பது ஜோதிட ரீதியாக குபேர திசை எனக் கணிக்கப்படுகிறது. எனவே, பொருளாதாரம் மேம்பட வேண்டி முருகனை வேண்டி வணங்கினால், பொருளாதார மேன்மை அடையும்.

வேண்டிய நிமிஷத்திலேயே பலன் தரும் நிமிஷாம்பாள் திருக்கோவில்

வேண்டிய நிமிஷத்திலேயே பலன் தரும் நிமிஷாம்பாள் திருக்கோவில்

கோயில் அமைப்பும் சிறப்பும்:

மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள ராஜ கோபுரம், திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் என்று கோயிலின் அமைப்பு உள்ளது. இங்குள்ள வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை வழிபட்டால் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம் என்பது நம்பிக்கை. கோயில் அமைந்துள்ள மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரச மரத்தடியில் நாகலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டுமே வடதிசை நோக்கி அருள்பாலிக்கும் முருகப் பெருமான், இத்தலத்தில் வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறார். இதனால் இத்தலம் தென் தணிகை என்றும் அழைக்கப்படுகிறது. முருகப் பெருமான் சந்நிதியில் இருந்து பார்த்தால், முருகப் பெருமான் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண இயலாது.

திருமணமாக வேண்டுமா ஒருமுறை குன்றத்தூர் முருகனை போய் தரிசனம் செய்தால் போதும் | Kundrathur Murugan Temple

அதேபோல சந்நிதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் முருகப் பெருமானுடன் வள்ளி அல்லது முருகப் பெருமானுடன் தெய்வானையை மட்டுமே தரிசிக்க முடியும். வள்ளி, தெய்வானை இருவரில் ஒருவரை மட்டுமே முருகப் பெருமானுடன் தரிசிக்க முடியும் என்ற வகையில் சந்நிதி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முருகப் பெருமான் போலவே சந்நிதி முன்பாக உள்ள துவாரபாலகர்களும் வஜ்ரம், சூலம் வைத்துள்ளனர். சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியே இங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. முருகப் பெருமானின் சந்நிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை உள்ளனர்.

கோயில் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சந்நிதிகள் உள்ளன. இக்கோயில் விமானம் ஷட்கோண அமைப்பில் இருப்பது தனிச்சிறப்பு. முருகனின் சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்ததாக விமானம் அமைக்கப்பட்டுள்ளது. 

கேட்கும் வரம் அருளும் குலசை முத்தாரம்மன் கோயில் வரலாறும் சிறப்புகளும்

கேட்கும் வரம் அருளும் குலசை முத்தாரம்மன் கோயில் வரலாறும் சிறப்புகளும்

சேக்கிழாருக்கு காட்சியருளல்:

இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதலமைச்சராக இருந்த சேக்கிழார் மிகப்பெரிய கவிஞராக இருந்தார். அமைச்சர் பதவியைத் துறந்த பிறகு, பெரிய புராணத்தை எழுதினார். குன்றத்தூரில் அவதரித்தவர் என்பதால் இவருக்கு மலையடிவாரத்தில் தனி கோயில் அமைந்துள்ளது.

சேக்கிழார் குருபூஜையின்போது, மலைக்கோயிலில் இருந்து முருகப் பெருமான் கீழே இறங்கி வந்து சேக்கிழார் கோயிலுக்குச் சென்று காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கும். சேக்கிழாரின் இளைய சகோதரர் பாலராவாயர் தனது வீட்டுக்கு அருகில் தோண்டிய தண்ணீர் தொட்டி, தற்போது பாலராவாயர் குளம் என்று அழைக்கப்படுகிறது.

திருமணமாக வேண்டுமா ஒருமுறை குன்றத்தூர் முருகனை போய் தரிசனம் செய்தால் போதும் | Kundrathur Murugan Temple

திருவிழாக்கள்

சித்திரை சஷ்டி, வைகாசி விசாக திருவிழா, ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப் பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திர விழா உள்ளிட்டவை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, ஆங்கிலப் புத்தாண்டு, அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, கார்த்திகை, விசாக நட்சத்திர தினங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. கந்த சஷ்டி விழா இத்தலத்தில் எட்டு நாட்கள் நடைபெறுகிறது.

ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழா நாட்களில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வழிபாடு செய்கின்றனர். கார்த்திகை தீபமும் இக்கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மலைக்கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு வழிபாடுகளும் சுவாமி புறப்பாடும் நடைபெறும். ஒவ்வொரு மாத கார்த்திகை நட்சத்திரமும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

கேட்ட வரங்கள் அருளும் நைனாமலை வரதராஜப் பெருமாள் மலைக்கோவில்

கேட்ட வரங்கள் அருளும் நைனாமலை வரதராஜப் பெருமாள் மலைக்கோவில்

 

வேண்டுதல்கள்:

திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். திருமணம் நிறைவடைந்ததும் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்தும், அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்தும் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர்.

இக்கோயிலில் ஒரு பெரிய அத்திமரம் இருக்கிறது. குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் இந்த மரத்தில் தொட்டில் கட்டி வழிபாடு செய்வர்.

அவர்களது விருப்பங்கள் நிறைவேறி குழந்தை பிறந்தவுடன், குழந்தையுடன் கோயிலுக்கு வந்து குழந்தையின் எடைக்குச் சமமான பழங்கள் அல்லது சர்க்கரையை கோயிலுக்கு வழங்குகின்றனர். குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், பெற்றோர் வந்திருந்து குழந்தையின் ஆரோக்கியத்துக்காக முருகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

கோயில் நேரங்கள்

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும். கிருத்திகை நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US