கஷ்டங்கள் தீர்க்கும் காரப்பாக்கம் கபாலீஸ்வரர் கோயில்
தென்சென்னையில் உள்ள காரப்பாக்கத்தில் புகழ்பெற்ற கங்கை அம்மன் ஆலயம் உள்ளது அதற்கு உள்ளே கபாலீஸ்வரர் என்ற கற்பகேஸ்வரர் ஆலயம் உள்ளது. கங்கையம்மன் இங்கு சுயம்புவாக குளத்தரங்கரையில் உள்ள ஒரு மரத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டு வழிபடப்படுகின்றாள்.
அவளைக் கண்டெடுத்த இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊருணி பொங்கல் வைத்துக் கொண்டாடுகின்றனர். ஆடி மாதம் மகாபலிபுரத்தில் இருந்து சென்னைக்கு மாட்டு வண்டிகளில் வந்து கும்பம் எடுத்தும் பொங்கல் வைத்தும் பக்தர்கள் இந்நன்னாளைக் கொண்டாடுகின்றனர்.
பல ஊர்களில் கங்கையம்மன்
கங்கை அம்மன் கோவில்கள் சென்னையைச் சுற்றியும் வடமாவட்டங்களில் நிறைய காணப்படுகின்றன. ரெட்டியூர், செங்குன்றம், திருப்பதி, சந்தவாசல், சூளைமேடு, அடையாறு, கொளத்தூர் போன்ற பல இடங்களில் கங்கை அம்மனுக்கு என்று தனிக் கோவில்கள் உள்ளன.
இக் கோவில்களின் உள்ளே சிவனுக்கும் தனியாக ஒரு சந்நிதி வைக்கும் முறை பிற்காலத்தில் இணைந்து கொண்டது. இத்துடன் முருகன் விநாயகர் தட்சிணாமூர்த்தி துர்க்கை அம்மன் விஷ்ணு ராமர் கண்ணன் என்று பல பல இந்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உருவாகின
கங்கையம்மன் கோயிலமைப்பு
காரப்பாக்கம் கங்கையம்மன் கோவிலின் ராஜகோபுரம் 5 நிலை கொண்டதாகும். இங்கு சதுர வடிவில் மிகப் பெரிய தெப்பக்குளம் உள்ளது. ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்ததும் இரண்டு பக்கமும் மிகப்பெரிய துவாரபாலகி சிலைகள் காணப்படுகின்றன. அவை வண்ணம் தீட்டப்பட்டு பிரகாசமாகத் தோன்றுகின்றன. அதனையடுத்து கருவறைக்குள் ஆறடி உயரத்தில் கம்பீரமாக கங்கை அம்மன் காட்சி தருகின்றாள்.
உருவத்தோற்றம்
கங்கையம்மன் மாரியம்மனைப் போன்ற தோற்றம் கொண்டவள். ஒரு காலை மடித்து மறுகாலைத் தொங்கவிட்டு வீராசனத்தில் அமர்ந்துள்ளாள். சமயபுரம் மாரியம்மனை போல மடியில் வைத்திருக்கும் இடது கையில் மருந்து கிண்ணம் வைத்திருக்கிறாள்.
தொற்று நோய் தீர்க்கும் தெய்வம் ஆவாள். வலது கை அபய ஹஸ்தம் முத்திரையுடன் காணப்படுகின்றது. பின்னிரு கைகளில் சாட்டையும் உடுக்கையும் வைத்திருக்கின்றாள்.
சிவன் கோயிலின் தோற்றம்
சிவனடியார் ஒருவர் கங்கை அம்மன் கோவிலுக்குள் சிவாலயம் ஒன்றை எழுப்பினார். இங்குள்ள கருவறை நாதரின் பெயர் கபாலீஸ்வரர் அல்லது கற்பகேஸ்வரர் ஆகும். இக்கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. கங்கை அம்மன் கோவிலுக்குள் சென்றால் அதற்குப் பின்புறத்தில் இக்கோவில் உள்ளது. கற்பகாம்பாளும் கற்பகேஸ்வரரும் தனித்தனி சன்னதி கொண்டுள்ளனர்.
சிவன் கோயில் அமைப்பு
காரப்பாக்கம் கபாலீஸ்வரர் கோயிலில் கொடிமரம், பலி பீடம், நந்தி தேவர் ஆகியவை முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன. நந்தி தேவருக்கு முன்பு கருவறை உள்ளது. அதற்குள் வட்ட ஆவுடையும் அதன் மத்தியில் சிவலிங்கமும் உள்ளது. கற்பகாம்பாள் தனிச் சன்னதி கொண்டுள்ளாள். கொடி மரத்திற்கு தெற்கே உள்ள நாகலிங்க மரத்தின் அடியில் ஆதி கற்பகேஸ்வரரும் நாகர் சிலைகளும் காணப்படுகின்றன.
சைவம் தழைக்க முற்றோதல்
காரப்பாக்கம் கபாலீஸ்வரர் கோயிலில் தேவாரம், திருவாசகம் முற்றோதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மாண்வர்கள் ஆர்வமாகப் பங்கேற்று சைவம் சமயம் தழைக்க உறுதுணையாக விளங்குகின்றனர்.
சிறப்பு வழிபாடுகள்
கற்பகேஸ்வரர் சிவாலயத்தில் பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிவபெருமானுக்குச் செய்யப்படுகின்றன. பங்குனி உத்திரத்தன்று கபாலீஸ்வரர் - கற்பகத்தம்மன் தெய்வத்திருமணம் நடைபெறுகின்றது.
திருக்குளத்தில் அன்றைக்கு தெப்பத் திருவிழாவும் உண்டு. மாத சிவராத்திரி மற்றும் மாசி சிவராத்திரி ஆகிய நாட்களிலும் சோமவாரங்களிலும் வெள்ளிக்கிழமை தோறும் சாமிக்கும் அம்பிகைக்கும் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.
திருச்சுற்றுச் சந்நிதிகள்
காரப்பாக்கம் கபாலீஸ்வரர் கோயிலின் திருச்சுற்றில் பல தெய்வங்களுக்கு தனித்தனியாக. விமானத்துடன் கூடிய சந்நிதிகளும் உண்டு. விமானம் இல்லாதவையும் உண்டு. துர்க்கை அம்மன், ஸ்ரீதேவி பூதேவி சமேதராகிய வெங்கடேச பெருமாள், வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகநாதன், வலம்புரி விநாயகர் போன்ற பல தெய்வங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
11 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேயருக்கு மேற்கு பார்த்து தனி சன்னதி உள்ளது தனி விமானமும் கோயில் வாசலும் உள்ளது. இராமர் லட்சுமணர் சீதை ஆகியோருக்கு விமானத்துடன் கூடிய தனிச் சன்னதி உள்ளது.
மற்றும் தவம் இயற்றும் கபில முனிக்கும் பகீரதனுக்கும் சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன. இக் கோவிலில் நவகிரக சந்நிதி தனியாக உள்ளது. இது தவிர சனீஸ்வரருக்கும் காலபைரவருக்கும் வீர ஆஞ்சநேயருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இச் சிவாலயம் காலத்தால் பிற்பட்டது. இங்கு வரும் பக்தர்களை விட கங்கை அம்மன் வணங்க வரும் பக்தர்களே அதிகம்.
சிறப்பு நேர்த்தி கடன்கள்
கங்கையம்மன் கோயிலில் துணி முடிந்து போடும் நேர்த்திக்கடன் பழக்கத்தில் உள்ளது. நேர்ந்தது நிறைவேறியதும் முடிந்து போட்ட துணியை அவிழ்த்து விடுவது மரபு.
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் ஆகும். இம்மாதத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக பக்தர்கூட்டம் இக்கோவிலுக்கு வரும். கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல் போன்றவை அந்நாட்களில் நேர்த்திக் கடன்களாக நிறைவேற்றப்படும்.
தனிப் பெண் தெய்வங்கள்
சமயபுரம் மாரியம்மன், சிறுவாச்சூர் காளியம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், வண்டியூர் மாரியம்மன், தையல்நாயகி, கங்கையம்மன் போன்றோர் பவுத்த சமயச் செல்வாக்குடன் இருந்த போது தோன்றிய தாரா என்னும் பெண் தெய்வம் ஆகும்.
இவள் பேய் பிசாசு தொல்லை, உடல் நோய், நீர் நெருப்பு கண்டங்கள் போன்றவற்றால் தோன்றும் எட்டு பயங்களைப் போக்குவாள். இவள் மன நோய், உடல் நோய் இரண்டையும் (Tara healing) சுகமாக்கினாள். இவளுக்கு என்று தனி மந்திர உச்சாடனங்களும் நடந்தன.
பயிர்த் தெய்வம்
பச்சை தாரா பயிர் விளைச்சலுக்கு உரிய தனித் தெய்வம் ஆவாள். சைவம் செல்வாக்கு பெற்ற காலத்தில் சிவபெருமானுடன் இவளை இணைத்து கங்கை அம்மன் என்று சில ஊர்களில் வேளாண் குடிகள் போற்றினர். எனினும் பல நுற்றாண்டுகளாக மக்கள் பல பெயர்களில் புதிய கதைகளைச் சேர்த்து சக்தியுள்ள தனித் தெய்வமாகவே அம்மன் தெய்வங்களை வைத்து வழிப்ட்டனர்.
பக்தி இலக்கிய காலத்தில் இக்கோயில்கள் சிலவற்றில் சிவன் சந்நிதிகள் சேர்க்கப்பட்டன. பின்பு இந்த அம்மன்கள் சிலருக்குத் ஆதி சங்கரரால் தாடங்கம் அல்லது ஸ்ரீ சக்கரம் பொருத்தப்பட்டது.
லலிதாசனம்
சில பெண் தெய்வங்கள் சிவன் சந்நிதிகள் சேர்க்கையின்றி தனித்தே கோயில் கொண்டிருந்தனர். இவர்கள் லலிதாசனத்தில் மகாராணி போல அமர்ந்த கோலத்தில் சிலை வைக்கப்பட்டு வழிபடப்பட்டனர். வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடித்து உட்கார்ந்து இருப்பார்கள். ஒரு கையில் மருந்து கிண்ணம் நோய் தீர்க்கும் அமுதம் வைத்திருப்பார்கள்.
இதை கபாலம் என்று சிலர் கருத்து கூறினர். மக்கள் தங்களின் தங்கள் தேவைகளுக்கும் இவர்களை வணங்கினர். சைவம் வைணவம் செல்வாக்கு உயர்ந்த பின்பும் கூட இப்பெண் தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களாக மக்கள் செல்வாக்குடன் விளங்கின. ஆனால் உருவத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. நாகம், உடுக்கை, கத்தி, பாசம் போன்றவை சேர்க்கப்பட்டன.
நிறைவு
கங்கையம்மனும் கபாலிச்வரரும் சக்தியுள்ள தெய்வங்கள் என்பதால் இங்கு பக்தர்கள் குறிப்பாக பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கி செல்கின்றனர். திருமணம், குழந்தை பேறு, தொழில் மேன்மை, வீடு வாங்குதல், நோய் சுகமாகுதல் என சகல தேவைகளுக்கும் இக்கோயிலுக்கு வந்து வணங்குகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |