கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் வானமாமலைப் பெருமாள்
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத் திருத்தலம் 108 வைணவத் தலங்களில் ஒன்றாகும்.
சுயம்பு மூர்த்தியாக பெருமாள் கிடைத்த எட்டு தலங்களில் இதுவும் ஒன்று. இத்திருத்தலத்தில் இறைவனுக்கு ஆண்டு முழுக்க நாள்தோறும் நல்லெண்ணெய்க் காப்பிட்டு வணங்கி வரம் பெறலாம்.
தவத் தலம்
நாங்குநேரியில் ஆதிசேடன் பெருமாளை நோக்கித் தவம் இருந்து அவரைச் சுமக்கும் பேறு பெற்றான். அதைக்கண்டு கருடனும் இங்குத் தவமிருந்து வைகுந்த வாசலில் இறைவனுக்கு முன் நின்று வணங்கும் அருட்பேறு பெற்றான்.
எனவே இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெருமாளின் அருளால் தங்கள் குறைதீர்க்கப்பட்டு உன்னத நிலையை அடைவார்கள். வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
கருவறை நாதர்
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் இறைவன் ஸ்ரீ தேவி, பூ தேவி, நாச்சியார்களுடன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் ராஜாங்க சேவை சாதிக்கின்றார். தனது இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அக் கால் தரையில் படும்படி கம்பீரமாகக் காட்சியளிக்கின்றார். இக் கருவறை நாதரின் பெயர் வடமொழியில் தோத்தாதிரி தமிழில் வானமாமலை ஆகும்.
இவர் மது கை டபர் என்ற அசுரர்களைக் கொன்ற மகிழ்ச்சியில் ஆனந்தமயமாகக் காட்சியளிக்கின்றார். ஒரு கையைத் தன் பாதத்தை நோக்கித் தொங்கவிட்டு ஒரு கையைத் தன் மடியில் வைத்த படி பெருமாள் காட்சியளிக்கின்றார். இவரது கையில் இருக்கும் சக்கரத்தைக் கண்டவர்களுக்கு தோல்வியே கிடையாது.
உற்சவமூர்த்தியின் பெயர் தெய்வநாயகம் ஆகும். கருவறைக்கு மேலே உள்ள விமானத்தை வைகுந்த விமானம் அல்லது நந்தவர்த்தன விமானம் என்று அழைப்பார்கள். நாங்குநேரி வானமாமலை கோயிலில் ராஜ கோபுரம்.
உட்பட ஏழு கோபுரங்கள் உண்டு. இங்கு எழுந்தருளி இருக்கும் பெருமாளை சிந்து நாட்டு அரசன், இந்திரன், பிரம்மதேவன் கருடன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் தரிசித்து அவரது அருளைப் பெற்றனர். இங்கு சேற்றுத் தாமரை தீர்த்தம், இந்திர தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
சேற்றுத்தாமரை தீர்த்தம் பாற்கடலுக்கு நிகரானதாக போற்றப்படுகிறது. இங்குத் தலவிருட்சம் மாமரமாகும். கருவறைக்கு வெளியே அதன் பிரகாரத்தில் 32 ரிஷிகளும் தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் பிள்ளையாரும் இடம் பெற்றுள்ளனர்.
கருவறைக்குள் 11 பேர்
கருவறையில் எம்பெருமான் வைகுண்ட நாதனாக அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றார் அவர் தலைக்கு மேலே ஆதிசேடன் குடை பிடித்து இருக்கின்றான். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் நீளாதேவி நாச்சியார்கள் அமர்ந்துள்ளனர்.
இந்நால்வருக்கும் ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன், ஆகியோர் எம்பெருமானை வணங்கி நிற்கின்றனர். இவர்கள் அனைவரும் கருவறைக்குள் இடம்பெற்றுள்ளனர். கருவறையில் காணப்படும் பதினோரு விக்கிரகங்களும் சுயம்புவாக கிடைத்தன என்பர்.
தாயாரின் சிறப்பு
நாங்குநேரி வானமாமலை கோயிலினல் தாயாரின் பெயர் ஸ்ரீ வரமங்கை. தாயார் தனி சன்னதியில் சேவை சாதிக்கின்றார். இவள் இங்குக் குழந்தையாக அவதரித்ததால் வர மங்கை என்ற பெயரைப் பெற்றாள். இவளுடைய திரு மூர்த்தம் திருப்பதியில் இருந்தது.
ஸ்ரீ வர மங்கா தேவியான இவளை திருப்பதியின் வெங்கடேச பெருமாளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அங்கே இருந்த மகா ஜீயரின் கனவில் தோன்றிய பெருமாள் 'இவள் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாளுக்கு உரிமைப்பட்டவள்.
அவளை அங்கு எடுத்துக் கொண்டு போய் அவருக்குத் திருமணம் செய்வியுங்கள்' என்று கூறினார். அதன் பிறகு அங்கிருந்த இது தாயாரின் திருவருவம் நாங்குநேரிக்கு கொண்டுவரப்பட்டு பங்குனி உத்திரத்தன்று பெருமாளுக்குத் திருமணம் செய்விக்கப்பட்டது
நாங்குநேரி பேரும் ஊரும்
சிலர் நான்கு ஏரி இருந்ததால் இந்த ஊருக்குப் பெயர் நான்குநேரி என்பர் அது சரி அல்ல. இவ்வூரின் பெயருக்கு வேறு ஒரு காரணம் கூறப்படுகின்றது. இவ்வூரில் ஒரு குளம் நான்கு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு நான்கு பகுதியாக பிரிக்கப்பட்ட நீர் நிலையை 4 நெறி (நான்கு பாதை/ வழி) என்று அழைக்கப்பட்டது.
இக்காரணம் ஒரு வகையில் காரணம் பொருந்தக் கூடியதாக உள்ளது நாங்குநேரிக்கு வேறு பல பெயர்களும் உள்ளன. இங்கு ரோமரிஷி தவம் செய்து பெருமாளை சேவித்ததால் இவ்வூரை ரோமசேத்திரம் என்றும் அழைப்பர். ஆதிசேடன் தவம் செய்து இறைவனைத் தரிசித்ததால் நாகணை சேரி என்றும் வழங்குவர்.
தைலக் காப்பின் சிறப்பு
நாங்குநேரியில் கருவறைநாதருக்கு தினமும் தைலக்காப்பு நடைபெறும். இறைவனுக்குத் தேய்த்த எண்ணையை நாழிக்கிணற்றில் ஊற்றி விடுவர். இக்கிணறு 25 அடி நீளமும் 15 அடி ஆழமும் உள்ள மிகப்பெரிய கிணறு ஆகும். நோய் நொடி தீர நாழிக்கிணற்றின் நீரை எடுத்து பக்தர்கள் பயன்படுத்துவர்.
கதை
ஒன்று
நம்மாழ்வார் பிறப்பும் சிறப்பும்
ஆழ்வார் திருநகரியைக் காரி மாறன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவன் இறைவனை வணங்கித் தனக்குக் குழந்தைப் பேறு வேண்டும் என்று கேட்டபோது இறைவன் அவனை திருக்குறுங்குடிக்குச் சென்று வணங்குமாறு கூறினார்.
அவ்வாறே காரிமாறன் திருக்குறுங்குடிக்கு சென்று வணங்கிய போது அவரது கனவில் நம்பிராயர் தோன்றி 'உனக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும் ?' என்று கேட்டார். 'உங்களைப் போல் அழகும் அறிவும் அன்பும் அருளும் உடைய குழந்தை வேண்டும்' என்று காரி மன்னன் கேட்டான். அதற்கு இறைவன் 'நீ கிழக்கு நோக்கிச் சென்றால் எறும்புகள் சாரை சாரையாக ஊரும் ஒரு இடம் வரும்.
அதற்கு மேல் கருடன் பறந்து கொண்டிருக்கும். அந்த இடத்தில் நான் வானமாமலையாக உள்ளே புதைந்திருக்கின்றேன். என்னை எடுத்து கோவில் கட்டி சேவித்து வருவாயாக. நீ ஆசைப்பட்ட குழந்தை உனக்குப் பிறக்கும்' என்றார் நம்பிராயரின் கட்டளைப் படி மன்னன் காரி மாறன் நாங்குநேரியில் பெருமாளுக்குக் கோயில் கட்டினான்.
அகழ்ந்தெடுத்த 11 சிலைகளையும் கருவறைக்குள் வைத்துக் கோயில் கட்டினான். பெருமாளே காரி மன்னனுக்கு மகனாகப் பிறந்தார். அவரே நம்மாழ்வார் ஆவார். . மற்ற பெருமாள் கோவில்களில் நம்மாழ்வாருக்கு தனி சன்னதி உண்டு.
ஆனால் இங்கு மன்னன் காரிமாறனை வழிபட்ட பின்பே நம்மாழ்வாரை வணங்க வேண்டும். இங்குப் பெருமாளே நம்மாழ்வாராகப் பிறப்பெடுத்ததால் அவருக்கு இங்குத் தனிச் சன்னதி இல்லை. பெருமாளின் சடாரியில் நம்மாழ்வார் நித்தியவாசம் புரிகின்றார்.
திருச்சுற்றுத் தெய்வங்கள்
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் கருவறைக்கு முன்பிருக்கும் அர்த்தமண்டபத்தில் கருடாழ்வார் பெருமாளை நோக்கி இரு கரங்கள் கூப்பி வணங்கிய தோற்றத்தில் தனி சன்னதியில் காட்சி தருகின்றார். அர்த்தமண்டபத்தில் விஷ்வக்ஸேனரும் காணப்படுகின்றார்.
திருச்சுற்றுச் சன்னதிகளில் ஞானபிரான், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்த்திகள், இராமர், நவநீதக்கண்ணன், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். நம்மாழ்வார் தவிர மீதி பதினோரு ஆழ்வார்களும் காட்சி தரும் இடம் குலசேகர மண்டபம் எனப்படுகின்றது.
பாசுரச் சிறப்பு
நான்குநேரி வானமாமலை திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளை நம்மாழ்வார் மட்டுமே 11 பாசுரங்கள் பாடித் துதித்துள்ளார். எனவே இங்கே பக்தர்கள் தலையில் வைக்கும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
கதை இரண்டு,
சாமரம் வீசும் தேவலோக மங்கையர்
மகிஷ் மதி என்ற அசுரப் பெண் தன் மகன்களை யாரும் வீழ்த்தக்கூடாது என்ற நோக்கில் பிரம்மதேவனிடம் தவம் செய்து வரம் பெற்றாள். தன் தாயார் வரம் பெற்ற காரணத்தால் மகன்கள் மதுவும் கைடபனும் தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினர்.
அவனது தொல்லையைக் குறைக்க விரும்பிய பிரம்மதேவன் திலோத்தமையை அழைத்து மது கைடபர் முன்னால் போய் நடனமாடி அவர்களை மயக்கும் படி உத்தரவிட்டார். அவளும் பிரம்மதேவனின் கட்டளையை நிறைவேற்றினாள். அப்போது மதுவும் கைடபனு திலாத்தமைக்காக தங்களுக்குள் போட்டியிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து கொலை செய்து இறந்து விட்டனர்.
திலோத்தமை தன் தோழி ஊர்வசியுடன் இங்கு வந்து தங்கி தாமும் பெருமாள் சேவையில் பங்கு வேண்டும் என்று இறைவனை நோக்கி தவம் இருந்தாள். இவர்களின் தவத்தை மெச்சிய நாராயணன் இருவருக்கும் சாமரம் வீசும் பொறுப்பைக் கொடுத்தார். அன்று முதல் இவர்கள் கருவறையில் எம்பெருமானுக்கு சாமரம் வீசி வருகின்றனர்.
வானமாமலை மடம்
இத்திருத்தலத்தில் வானமாமலை மடத்தின் தலைமை பீடம் அமைந்துள்ளது. மணவாள மாமுனிகளால் நிறுவப்பட்ட அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான வானமாமலை ஜீயர் அவர்களின் தலைமை பீடம் நாங்குநேரி ஆகும்.
வழிபாடுகள்
வானமாமலை திருக்கோவில் வைகானசம் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் பிரம்மோற்சவமும் தேரோட்டமும் நடைபெறும். சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், ஆவணியில் பவித்ரோட்சவம் நடைபெறும்.
புரட்டாசி சனிக்கிழமைகள்
பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி, கிழமை சனிக்கிழமை ஆகும். அன்றைய வேண்டுதலுக்கு சிறப்புப் பலன் உண்டு. புரட்டாசி சனிக்கிழமைகளில் மற்ற பெருமாள் கோவில்களில் வரும் பக்தர் கூட்டம் போல இங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக மூன்றாம் சனிக்கிழமை அன்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டுச் செல்வர். எனவே அன்று காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு எட்டு மணியிலிருந்து பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் தொடங்கும்.
10 மணிக்குக் கால சந்தி பூஜையும் 10:30க்கு உச்சிக்கால பூஜையும் 12 அரைக்கு பால், தயிர் அபிஷேகங்களும் தொடர்ந்து நடைபெறும். அன்று இறைவனுக்குச் சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்ற நைவேத்தியங்கள் படைக்கப்படும்.
கருட சேவை
நான்குநேரி வானமாமலை திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தில் மட்டும் பெருமாளுக்குக் கருட சேவை கிடையாது. பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் ஐந்தாவது நாள் கருட சேவை நடைபெறும். பௌர்ணமி அன்றும் ஆவணியில் அமாவாசை அன்றும் சிறப்பு கருட சேவை நடைபெறும்
கோட்டை எண்ணெய்க் காப்பு
ஆவணி அமாவாசை அன்று எண்ணெய் காப்பு நடைபெறும். அன்று மூன்று கொப்பரை எண்ணெய் ஊற்றி இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும். இதனை இதனை ஒரு கோட்டை எண்ணெய்க் காப்பு என்பர்.
ஒரு கோட்டை என்பது மூன்று கொப்பரை, அதாவது 210 லிட்டர் நல்லெண்ணையைக் குறிக்கும். நல்லெண்ணையை அண்டாவில் இருந்து கோரி கோரி வெள்ளிவட்டிலில் ஊற்றி இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இச் சிறப்பு எண்ணெய்க் காப்பைக் காண விரும்பி அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கோட்டை எண்ணெய்க் காப்பு முடிந்ததும் பெருமாளுக்குத் தொடர்ந்து சங்காபிஷேகமும் திருமஞ்சனமும் நடைபெறும். அதன் பின்பு சந்தன காப்பு சாத்தப்படும். அடுத்து அன்று இரவு கருட சேவை நடைபெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |