5000 ஆண்டு பழமையான வள்ளியூர் முருகன் மலைக் கோவில்
தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தில் வள்ளி வளமைத் தெய்வமாக வணங்கப்பட்டாள். இவள் குறிஞ்சி நிலக் கடவுளான முருகனின் மனைவியானாள். 'முருகு புனைந்து இயன்ற வள்ளி போல' என்று நற்றிணை (82 : 4) கூறுகின்றது.
வள்ளியூரில் வள்ளி தனித் தெய்வமாக குகைச் சன்னதியில் காட்சி அளிக்கின்றாள். இவளே இத்திருத்தலத்தில் ஆதித் தெய்வம் ஆவாள். வள்ளி என்ற தெய்வத்தின் பெயரால் இவ்வாறு வள்ளியூர் என்று அழைக்கப்படுகின்றது.
வள்ளிக் கோயில்கள்:
தமிழகத்தில் வள்ளி மலை, வேளிர் மலை, திருவேரகம் போன்ற இடங்களில் வழிபடு தெய்வமாக முருகனுடன் உடன் உறை நாயகியாக வள்ளி விளங்குகிறாள். திருவண்ணாமலையில் ஒரு வள்ளிமலை உண்டு.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு வடக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவேரகம் என்ற ஊரில் புனச்சோலை, வள்ளிச்சோலை, கிழவன் (முருகன்) சோலை என்று மூன்று சோலைகள் உள்ளன. இங்கு உலகத்திலேயே எட்டு அடியில் மிக உயரமான வள்ளி முருகன் சிலைகள் உள்ளன.
இங்கு முருகனை 'லட்சணக்குமரன்' என்பர். இங்கு குறவர் படுகளம், வள்ளி திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் ஈரான் நாட்டில் பழந்தமிழ்கத்தில் இருந்து சென்றவர்கள் முருகனை பசுமைக் கடவுளாக வள்ளி மணாளனாக வணங்குகின்றனர்.
அங்கு அல் கதர் எனப்படும் துறவிகள் சொருஷ் என்ற பெயரில் முருகனை வழிபடுகின்றனர். வள்ளி பசுமைத் தெய்வம் (வேளாண் தெய்வம்) என்பதால் அல் கதர் என்போர் பச்சை உடை அணிந்து பச்சை தலப்பாகை கட்டி நல்வாக்கு கூறுகின்றனர்.
கதர் என்ற பெயர் இவர்கள் புறப்பட்டு வந்த கதிர்காமத்தை குறிப்பதாக நம்புகின்றனர். (அப்போது இலங்கை தென் தமிழ்கத்தோடு இணைந்திருந்தது).
குன்று தோறும் ஆடும் குமரன் வள்ளியூர் கோயில் ஒரு மலைக்கோவிலாகும் குகை கோவிலும் கூட. தமிழில் மலையைக் குறிக்க 113 சொற்கள் உள்ளன. ஆதியில் மனிதர்கள் மலைக் குகைகளில் வாழ்ந்து பின்பு மலை அடிவாரத்திற்கு இறங்கினர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவர்.
எனவே பழந்தமிழ் இலக்கணம் விவரிக்கும் ஐந்திணைப் பகுப்பு குறிஞ்சியில் தொடங்கி கடல் பகுதியான நெய்தலில் நிறைவடைகின்றது. குறிஞ்சியில் வள்ளி மருதத்தில் தெய்வானை: குறிஞ்சி மனித நாகரீகத்தின் தோற்றுவாய்.
இங்கு வள்ளி முருகனின் காதல் மனைவி. ஆனால் மருத நிலம் ஆற்றங்கரைப் பாசனம் என்பதால் அது மனித நாகரீகத்தின் தொட்டில் ஆயிற்று. இங்கு மருத நிலத் தெய்வமான இந்திரனின் மகள் தெய்வயானை முருகனின் மனைவியாகின்றாள்.
இது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம். ஆக தொன்று தொட்டு மனித நாகரீகத்துடன் இணைந்து வழிபடு தெய்வமாக விளங்கும் வரலாறு வள்ளி தெய்வானை சமேதராகிய முருகனுக்கு மட்டுமே உள்ளது.
கடற்கோளும் புலம்பெயர்வும்:
வள்ளி முருகன் வெளிநாடுகளிலும் வணங்கப்படுவதற்குக் காரணம் குமரிக்கடலில் கடற்கோள் ஏற்பட்டபோது தென்பகுதியில் இருந்து கடலில் நீந்தி சென்று அரேபிய தீவுகளில் கரையேறிய நாகர்கள் (தமிழர்கள்) தங்களுடன் நாகரும் முருகனும் வள்ளி போன்ற தெய்வ வழிபாட்டைக் கொண்டு சென்றனர்.
முருகு / முருங்கு / முலுங்கு:
கிழக்கு ஆப்பிரிக்காவில் முலுங்கு/ முருங்கு/ முங்கு என்ற பெயரில் மலைக்கடவுள் ஒருவன் அழைக்கப்படுகின்றான். இங்கு வாழும் மனிதர்கள் தெற்கே இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள். இவர்கள் தங்கள் மொழியை பண்டு மொழி என்பர்.
பண்டு என்பதற்கு பழைய என்பது பொருள். ஏழெட்டு இனத்தவர்கள் முலுங்கு என்ற தெய்வம் இருக்கும் மலையைத் தங்களின் புனித மலையாகக் கருதி வழிபடுகின்றனர். 6000 ஆண்டுகளுக்கான நாட்காட்டி வைத்துள்ளனர்.
அதனால் இவர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்பது தெளிவாகிறது. பழைய புராண நூலான கில்காமேஷ் புராணம் மக்கள் கடலில் நீந்தி வந்து இப்பகுதியில் குடியேறியதாக தெரிவிக்கின்றது. ஒரு மீன் இவர்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததால் மீன் இவர்களின் குலதெய்வமாக விளங்குகின்றது.
பண்டு மொழி என்பதும் பாண்டியர்களின் சின்னமான மீனை இவர்கள் குலதெய்வமாக வணங்குவதும் இவர்கள் தென்மதுரையில் இருந்து கடல்கோளின் போது கடல் வழியாக நீந்தி கடலலைகளால் அலைக்கழிக்கப்பட்டு புலம்பெயர்ந்து சென்றவர்கள் என்பதை உணர்த்துகின்றது.
இத்தகைய பழைய குறிஞ்சித் திணை மலைக் கோவில்களில் ஒன்று வள்ளியூர் மலைக்கோயில் ஆகும். மலைக் கோயில்: வள்ளியூர் முருகன் கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் புறநகர் பகுதியில் உள்ள மிகப்பெரிய மலைக்கோவிலாகும். இது சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பழைய குடவரை கோவில் ஆகும்.
அருணகிரிநாதர் வள்ளியூர் முருகன் மீது 1300 பாடல் இசைப் பாடல்கள் இயற்றியுள்ளார். வள்ளியூர் மலைக் கோவிலில் இந்திரன் அகத்தியர் இடைக்காட்டுச் சித்தர் அருணகிரிநாதர் போன்றோர் தங்கி முருகனை வழிபட்டதாக ஸ்தல புராணம் கூறுகின்றது.
அருணகிரிநாதரைப் போலவே வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் சுவாமிகளும் வள்ளியூர் முருகனைப் பற்றி ஏராளமான இசைப் பாடல்கள் பாடியுள்ளார். வள்ளியூர் மலை வள்ளியும் முருகனும் காதலித்துத் திருமனம் செய்து தனிக்குடித்தனம் நடத்திய இடம்.
ஞானஸ்கந்தன்:
அகத்தியருக்கு முருகன் ஞான உபதேசம் செய்த இடம் என்பதால் குரு ஸ்தானத்தில் முருகன் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கின்றார். அகத்தியர் மேற்கு நோக்கி மாணவன் ஸ்தானத்தில் நிற்கிறார்
கதை 1:
பூரண கிரி: வள்ளியூர் முருகனுக்கு நிறைய கதைகள் வழங்குகிறது.
கிரவுஞ்சன் எனப்படும் அசுரன் ஒருவன் மலை வடிவில் இருந்தான். முருகன் அந்த அசுரனை அழிக்க வேல் எறிந்த போது அந்த மலை மூன்று துண்டுகளாகச் சிதறியது. அதில் தலைப் பகுதித் துண்டு தான் வள்ளியூர் மலை ஆகும்
இந்த மலையில் முருகன் கோயில் கொண்டிருப்பதால் இந்த மலையை பூரண மலை அல்லது பூரண கிரி என்கின்றனர்.
கதை 2.
முருகன் வள்ளியை காதல் மணம் புரிந்து வள்ளியூரில் குடும்பம் நடத்தினார். ஒரு நாள் அந்த மலைப்பகுதியின் ஒரு பக்கமாக அகத்தியர் நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கே தெய்வானை மிகவும் சோகமாக அழுது கொண்டு நிற்பதைப் பார்த்து என்னவென்று கேட்டார். தெய்வானை தானும் முருகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தெரிவித்தாள்.
அவர் அவளை அழைத்துக்கொண்டு முருகனிடம் வந்து முற்பிறவியில் வள்ளியும் தெய்வானையும் சகோதரிகள் என்று சொல்லி அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி முருகனோடு வாழ வைத்தார்.
கோயில் அமைப்பு:
வள்ளியூர் மலைமேல் சுற்று பிரகாரங்களும் மண்டபங்களும் செதுக்கப்பட்டு 16 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு அதன் மேலே கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் அர்த்தமண்டபம் மகா மண்டபம் ஆகியவை மலை பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு அடுத்துள்ள அர்த்தமண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமான் கோயில் கொண்டு உள்ளார்.
முருகனின் தோற்றம்:
முருகன் ஒரே முகத்துடன் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கின்றார். வலது முன் கையில் மலரும் இடது முன் கையை தொடையின் மீதும் வைத்திருக்கின்றார். பின் கைகளில் ஒன்றில் வஜ்ராயுதம் ஏந்தியுள்ளார்.இங்கு வள்ளிக்கு தனிச் சன்னதி இருப்பது போல தெய்வானைக்கு கிடையாது. தெய்வானை வள்ளி மற்றும் முருகனுடன் காட்சி அளிக்கின்றார்
ஜெயந்திச்வரர்:
வள்ளியூர் முருகன் கோயிலில் ஒரு சிவன் சந்நிதியும் உண்டு. கருவறைக்கு அடுத்துள்ள மண்டபத்தைச் சுற்றி வந்து சிவன் சன்னதிக்கு வரலாம். இவ்வாறு வருவதற்கு மலையில் அழகாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் ஜெயந்திஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார்.
கதை 3:
தெப்பத் திருவிழா: வள்ளியூர் குகைக்கோவிலின் கருவறைக்குள் முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கின்றார். தெய்வ ரூபமாக இருந்த முருகனைத் தேவேந்திரன் பிம்ப ரூபமாக (சிலையாகக்) காட்சி அருள வேண்டும் என்று வேண்டினான். அதற்கு முருகன் சம்மதித்த காரணத்தினால் இந்திரனே இக்கோவிலைக் கட்டி வள்ளி தெய்வானையுடன் முருகனுக்கு சிலை அமைத்தான்.
இந்திரனுக்குக் காட்சியளித்த முருகன்:
இந்திரன் முருகனுக்கு அழகாகக் கோவில் கட்டியதால் அவனுக்கு சிறப்பாக அருள்பாலிக்க வேண்டும் என்று கருதிய முருகன் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று காட்சி கொடுத்தான். அந்த நாளில் தராது தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
கதை 4:
சரவணப் பொய்கை: முருகனும் வள்ளியும் மகிழ்ச்சியோடு குடும்பம் நடத்தி வரும் வேளையில் ஒரு நாள் இருவரும் காட்டிற்குள் சென்றனர். அங்கு வள்ளிக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. அவள் தனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று தன் கணவனிடம் கேட்டாள். உடனே முருகப் பெருமான் தன் வேலாயுதத்தை தரையில் ஓங்கி ஊன்றினார்.
அவர் ஊன்றிய இடத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சியடித்தது. அவளும் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டாள். அந்த இடம் சரவணப் பொய்கை என்று அழைக்கப்படுகின்றது. பல முருகன் கோவில்களில் இருக்கும் தெப்பக்குளத்துக்கு சரவணப் பொய்கை என்றுதான் பெயர். மற்ற ஊர்களிலும் வேல் ஊன்றிய கதை சொல்லப்படுகிறது.
கதை 5:
வள்ளி பிறந்த கதை: வள்ளியூரின் மன்னன் அர்பகன் என்பவன் தன் மனைவியுடன் மகேந்திர மலையில் குழந்தை வரம் கேட்டு தவம் இருந்தான். அப்போது அங்கு வந்த பரசுராமர் அவன் தவத்தைக் கண்டு மெச்சி வள்ளிக்கொடி ஒன்றைக் கொடுத்தார். அந்தக் கொடி பெண் குழந்தையாக மாறி மன்னரின் அரண்மனையில் வளர்ந்து வந்தது. வள்ளியின் அம்சமாக இவள் வளர்ந்த காரணத்தினால் முருகனுக்கே இவளைத் திருமணம் செய்தனர்.
கதை 6:
மலை வந்த கதை: வள்ளியூரில் வாழ்ந்து வந்த ஒரு வணிகர் மிகுந்த கஞ்சனாக இருந்தார். யாருக்கும் பிடி அரிசி தர்மம் கொடுக்க மாட்டார். ஒருமுறை அகத்தியர் இவரை அணுகி தனக்கு அரிசி வழங்க வேண்டும் என்று கேட்டார்.
இவரோ 'நீர் யாராக இருந்தாலும் சரி நான் ஒரு மணி அரிசி கூட வழங்க மாட்டேன்' என்றார். உடனே அகத்தியர் கோபம் கொண்டு தன்னைப் போன்றவருக்கு பயன்படாத அரிசி கல்லாகப் போகட்டும் என்று சாபம் கொடுத்து விட்டார்.இதனால் இந்தப் பகுதி அனைத்தும் கற்களாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
கோயில் விழாக்கள்:
வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை மாதம் பத்து நாள் திருவிழா நடைபெறும். அஸ்வதி நட்சத்திரத்தன்று கொடியேற்றப்படும். ஒன்பதாவது நாள் தேர்த் திருவிழா நடைபெறும். வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தன்று வசந்த விழா 10 நாட்கள் நடைபெறும்.
கார்த்திகை மாசம் கடைசி வெள்ளிக்கிழமை இந்திரனுக்கு வள்ளியும் முருகனும் காட்சி கொடுத்த தெப்பத் திருவிழா நடைபெறும். பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று அகத்தியருக்கு முருகன் காட்சி அளித்தார். அன்றும் கோயிலில் சிறப்பு வைபவங்கள் உண்டு. .