ஐயப்பன் வரலாறும் வழிபாடும் - பாகம் 2
சகல வேதங்களும் கற்றுத் தேர்ந்த ஒரு தவ முனிவர் தன் ஜப தவங்களை முறையாகச் செய்தபடி வாழ்ந்து வந்தார்.
அவருடைய மனைவியும் வேத சாஸ்திர நிபுனி. ஒரு நாள் அந்த முனிவர் ஏதோ சொல்ல அவள் அவர் சொன்ன கருத்துடன் உடன்படாத காரணத்தினால் வெறுமனே தலையாட்டினாள்.
இந்த செய்கை முனிவருக்குக் கோபத்தை மூட்டியது. நான் சொல்வதை மரியாதையுடன் கேட்காமல் எருமை மாடு மாதிரி தலையாட்டுகிறாயே. நீ எருமை மாடாக போகக் கடவாய் என்று சபித்து விட்டார்.
தனக்கு எப்போது சாப விமோசனம் என்று கேட்டதற்கு ஹரிஹர புத்திரன் பிறந்து உனக்கு சாப விமோசனம் அளிப்பார் என்று சொல்லிவிட்டார்.
இவள் காட்டில் மகிஷியாக நடமாடினாள். மகிஷியின் அட்டூழியம் மகிஷி என்றால் எருமை முகமும் மனித உடலும் பெண்ணின் உடலும் கொண்டவள்.
காட்டுவாசிகளிடமும் முனி சிரேஷ்டர்களிடமும் மரியாதை இன்றி அவர்களுக்கும் பல துன்பங்களை கொடுத்து வந்தாள்.
பிரம்ம தேவனை நோக்கி கடும் தவம் இருந்தாள். தவத்தின் முடிவில் பிரம்ம தேவன் அவளுக்குக் காட்சியளித்து 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டனர்.
தன்னை யாரும் கொல்லக்கூடாது தனக்கு சாவே வரக்கூடாது என்று வரம் கேட்டாள். அதற்கு பிரம்ம தேவன். ' அது போல் வரம் கொடுக்கும் சக்தி யாருக்கும் கிடையாது' என்று கூறி உன்னுடைய மரணத்தை நீயே தேர்ந்தெடு' என்று கூறினார்.
அதற்கு அவள் உலகத்திலேயே நடக்காத ஒரு விஷயத்தை சொல்லி இப்படி நடந்தால் இதன் மூலமாக எனக்கு மரணம் வரலாம் என்று திட்டமிட்டாள் மகிஷியை யார் கொல்லலாம்?
மகிஷி பிரம தேவனை நோக்கி 'ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த 12 வயது குழந்தை என்னை கொல்லலாம்' என்றாள்.
பிரம்ம தேவனும் சரி என்று வரம் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். இப்படி ஒன்று தன் வாழ்வில் நடக்கப் போவதில்லை என்ற தைரியத்துடன் அவள் தேவர்களையெல்லாம் இம்சை படுத்திக் கொண்டு துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.
ஹரிஹர புத்திரன் அவதரித்தார் மகிஷி தரும் துன்பத்தையும் கொடுமைகளையும் தாங்க இயலாமல் தேவர்கள் மகாதேவனிடமும் மகாவிஷ்ணுவிடமும் சென்று முறையிட்டனர்.
சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் குழந்தை மகிஷியைக் கொல்லலாம் என்பதால் தாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்மானித்தனர்.
விஷ்ணு பழையபடி மோகினி அவதாரம் எடுத்தார். விதனுவுக்கும் சிவனுக்கும் பிறந்தவர் ஹரிஹர புத்திரன் ஆனார். ஐயபலன் தெய்வக் குழந்தை ஆவார்.
காட்டில் கண்டெடுத்த குழந்தை கேரளாவில் பந்தள மகாராஜனுக்கு குழந்தை இல்லாததால் மன்னர் ராஜசேகர வர்மா வருந்திக் கொண்டிருந்தார்.
ஒருநாள் அவர் வேட்டைக்கு காட்டுக்குப் போன போது அங்கு ஒரு குழந்தை அழும் சத்தத்தை கேட்டது.
அழுகை சத்தத்தைத் தொடர்ந்து சென்று பார்த்தபோது ஒரு அழகான குழந்தை கழுத்தில் மணியுடன் படுத்திருந்ததைப் பார்த்தார். அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அதனை தன் அரண்மனையில் வளர்த்து வந்தார்.
அரண்மனையின் சதி மணிகண்டன் அரண்மனைக்கு வந்ததும் அவனது யோகத்தில் அரசி கர்ப்பமுற்று ஒரு ஆண் குழந்தையை பெற்றாள்.
ஆண் குழந்தை பிறந்ததும் அரசப் பிரதானிகளும் அரசியும் மற்றவர்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத ஏதோ ஒரு குழந்தையான மணிகண்டன் அரசனாக வருவதை விரும்பவில்லை.
ராணிக்குப் பிறந்த ராஜ வம்சத்துக் குழந்தையே மன்னனாக வர வேண்டும் என்று விரும்பினர்.
இதனால் அவர்கள் மணிகண்டனைக் கொல்ல ஒரு சதித்திட்டம் தீட்டினர். ராஜசேகர வர்மாவின் பிரியத்திற்குரிய மகனாக மணிகண்டன் இருந்ததனால் அவரும் நம்பும் வகையில் எதிரிகள் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினர்.
ராணிக்கு கடுமையான வயிற்று வலி என்றும் அதற்கு புலியின் பாலை கொண்டு வந்து கொடுத்தால் தீர்ந்து விடும் என்றும் அரண்மனை மருத்துவரைக் கொண்டு மன்னனிடம் தெரிவித்தனர்.
அரண்மனை மருத்துவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மன்னன் இதற்கு எப்படி மணிகண்டனை அனுப்ப முடியும் என்று தயங்கினார்.
ஆனால் மணிகண்டன் தான் போய் அம்மாவுக்குப் புலி பால் கொண்டு வருவதாக சொல்லி காட்டுக்குள் சென்றுவிட்டான்.
என்னை மணந்து கொள்க தெய்வக் குழந்தை ஐயப்பன் காட்டுக்குள் வந்ததும் அங்கு மகிஷியின் கொடுமைகளைப் பார்த்து அவளை எதிர்த்தான்.
யாரோ ஒரு சிறுவன் என்று நினைத்து அலட்சியமாக அவனோடு மகிஷி போரிட்டாள். அவனுடைய அவதார நோக்கமே தன்னை சம்ஹாரம் செய்வது தான் என்பது மகிஷிக்குத் தெரியாது.
ஐயப்பன் அவளைக் கொன்று போட்டார். ஐயப்பனின் அம்பு அவளைத் தாக்கியதும் அவளுடைய எருமை முகம் மறைந்து சாந்த சொரூபிணியாக ஒரு இளம் பெண்ணாக காட்சியளித்தாள்.
தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஐயப்பனை வேண்டினாள். ஐயப்பன், 'நான் இந்த யுகத்தில் பிரம்மச்சரியாக அவதாரம் எடுத்துள்ளேன். அதனால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது. என் கோயிலுக்கு அருகே நீ இருந்து தவம் செய். எப்போது என் கோவிலுக்கு கன்னிச்சாமி வரவில்லையோ அந்த ஆண்டு உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன்' என்றார்.
கன்னிச்சாமி என்றால் முதல்முறையாக மாலை போட்டு விரதம் இருந்து வரும் பக்தராவார்.
புலிப்படையோடு வந்தார் மகிஷி கொல்லப்பட்டதும் தேவர்கள் அனைவரும் ஐயப்பனை வணங்கி புலிகளாக உரு மாறி அவரோடு அரண்மனைக்கு வந்தார்கள்.
அரண்மனையில் இருந்தவர்கள் ஐயப்பன் புலிப்படையோடு வருவதைப் பார்த்து அஞ்சினர். ஐயப்பன் நெருங்கி வந்து புலிப் பாலைக் கறந்து கொள்ளுங்கள் என்றார்.
தாங்கள் செய்த தவறை எடுத்துக் கூறி அனைவரும் மன்னிப்புக் கேட்டனர். உடனே புலிகளாக வந்த தேவர்கள் மறைந்து விட்டனர்.
ஐயப்பன் தன் அவதார நோக்கம் நிறைவேறியதால் அவரும் மறைந்து விட்டார்.. பேட்டைத்துள்ளல் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் அந்த காலகட்டத்தில் இஸ்லாமிய ஞானியாக இருந்த வாஃபர் சுவாமிகளுக்கும் ஒரு கோயில் கட்டப்பட்டது.
இந்தக் கோயிலின் வாசலில் பேட்டை துள்ளல் என்ற நடனம் ஒரு வழிபாட்டுச் சடங்காக ஆண்டுதோறும் நடக்கின்றது.
சாஸ்தா - யார் பெயர்?
ஆரியங்காவில் உள்ள இக்கோயில் ஆதி தர்ம சாஸ்தா கோவில் என்று அழைக்கப்பட்டது. காரணம் அந்த இடத்தில் முன்பு ஒரு பௌத்தக் கோயில் இருந்தது.
அதில் இருந்த புத்தர் சிலையை தர்ம சாஸ்தா என்றனர். புத்தர் சிலைகளை உடைத்து கோயில்களை இடித்து புத்த துறவிகளை விரட்டி அடித்த போது புத்த சமயத்தவர் இந்துக்களாக மாறினர்.
புத்த சமயம் அங்கிருந்து மறைந்தது. ஆனால் மக்கள் மறக்கவில்லை. மக்கள் ஐயப்பனை தர்ம சாஸ்தா என்ற பெயரில் அழைக்கத் தொடங்கினர். இது ஐயப்பனின் முதல் சாஸ்தா கோவில் ஆகும்.
சாஸ்தா இந்து தெய்வம் ஆனார். அவர் புகழைப் பரப்ப பல கதைகள் தோன்றின. யோக நிலையில் கால்களைக் கட்டியிருக்கும் உருவத்தில் சாஸ்தாவைப் பல பெயர்களில் அழைத்து வழிபட்டனர்.
இப்பெயர்களில் சில விஷ்ணுவையும் சில சிவனையும் நினைவூட்டும் பெயர்களாக விளங்கின. காலப்போக்கில் சாஸ்தா பெருந் தெய்வங்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
புராணக் கதைகளும் எழுதப்பட்டது. பல சாஸ்தாகளின் தோற்றம் பழைய பௌத்தமும் புதிய வைதிக சமயங்களும் கலந்து சாஸ்தாவின் எண்ணிக்கையை உயர்த்தின. (இதே முறையை வராகி, பைரவர் போன்றவர்களிடமும் பின்பற்றினர்.).
எண்ணிக்கையை உயர்த்துவதால் அந்தத் தெய்வத்தின் சக்தியும் கம்பீரமும் பெருமையும் புகழும் உயரும் என்று கருதினர்.
பால சாஸ்தா, வேத சாஸ்தா, வித்யா சாஸ்தா, மகா சாஸ்தா, ஜெகன்மோகன சாஸ்தா, சந்தான பிராப்தி சாஸ்தா, வித்யா சாஸ்தா, ஆரிய சாஸ்தா, கல்யாண வரத சாஸ்தா, வீர சாஸ்தா, என்று பல பெயர்களில் சாஸ்தா வணங்கப்பட்டார்.
கருப்பனுக்கு ஒரு கதை தர்ம சாஸ்தா கோவிலின் 18 படிகளும் பரிவார தெய்வங்களுக்கு உரிய படிகளாக அமைந்தன. அவற்றில் எட்டாவது படி கருப்பசாமிக்கு உரிய படியாகும்.
கருப்பசாமிக்கு ஒரு கதை உருவாக்கினர். கருப்பன் நந்தி கிராமம் என்ற ஊரில் பிறந்தவன். நந்தி கிராமம் அயோத்திக்கு அருகில் உள்ளது.
அந்த கிராம வரை இராமனைத் தொடர்ந்து வந்த பரதன் அங்கேயே அவருடைய பாதுகையைப் பெற்று அங்கேயே தங்கி ஆட்சி புரிந்து வந்ததாக கதைகள் சொல்கின்றன. இங்குதான் கருப்பசாமியும் பிறந்ததாக வில்லடிப்பாட்டு கூறுகின்றது.
காவல் தெய்வமாக விளங்கும் கருப்பசாமி ராமனின் மகனாகப் பிறந்தார் என்றும் ஒரு கதை வில்லடிப்பாட்டில் சொல்லப்படுகின்றது.
புஷ்கலா சாஸ்தா காதல் சாஸ்தாவுக்கு பூரணி, புஷ்கலா என்று இரண்டு மனைவியர் உண்டு. பந்தள ராஜாவுக்கு பட்டுத்துணிகளை நெய்து கொடுக்கும் பட்டு நெசவுக்கார வணிகர் ஒருவர் தன் மகளுடன் அரண்மனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது இருட்டி விட்டதால் அங்கிருந்த சாஸ்தா கோவில் பூசாரி வீட்டில் மகளை விட்டு விட்டு அவர் மட்டும் அரண்மனைக்குப் போனார்.
பூசாரியின் வீட்டில் இருந்த புஷ்கலா தினமும் அங்குள்ள சாஸ்தா கோவிலுக்கு வேண்டிய புஷ்ப கைங்கரியங்களைச் செய்தாள்.
நாள் பட நாள் பட சாஸ்தாவின் மீது அவளுக்கு ஒரு தனிப்பற்றும் பாசமும் உருவாகி அது காதலாக மலர்ந்தது. பட்டுத் துணிகளை மன்னரிடம் கொடுத்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த பட்டு நூல் வணிகர் முன்பு ஒரு தனி யானை பிளிறிக்கொண்டு வந்தது.
அதைக் கண்டதும் பட்டு நூல் வணிகர் அரண்டு பயந்து போய் 'கடவுளே என்னை காப்பாற்று' என்று கதறினார்.
அப்போது ஓர் இளைஞன் தோன்றி தோன்றி யானையைப் பார்த்து 'நில்' என்றான். யானை அசையாமல் நின்று விட்டது. இவர் அந்த இளைஞனை நெருங்கி போய் 'தெய்வம் போல் வந்து என்னை காப்பாற்றினீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள். என்னிடம் இருப்பதைத் தருகின்றேன்' என்றார்.
'அப்படியா நான் கேட்பதை தவறாமல் தருவீர்களா' என்றான். 'கேளுங்கள். என்னிடம் இருந்தால் கண்டிப்பாகத் தருவேன்' என்றார்.
'உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள் ஐயா' என்றான். உடனே வணிகரின் முகம் மலர்ந்தது.
'திருமணம் செய்து தருகிறேன் உங்களைப் போன்ற ஒரு நல்ல மணமகன் கிடைக்க அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சொல்லி அவனை அழைத்துக்கொண்டு மகளை விட்டுச் சென்ற சாஸ்தா கோயில் பூசாரி வீட்டுக்கு வந்தார்.
தன்னை மணம் முடிக்க வந்த இளைஞனைப் பார்த்து புஷ்கலாவுக்கு ஒரே அதிர்ச்சி. தான் கோவிலில் அன்றாடம் பூஜை செய்து வந்த சிலையை போலவே இந்த மணமகன் தோன்றுகின்றாரே என்று நினைத்தாலெவலுக்கு .இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
கோவிலுக்கு போன வணிகருக்கும் தான் வழியில் கண்ட வரும் கோவிலில் இருக்கும் தெய்வமும் ஒரே முகச் சாயலுடன் இருக்கின்றதே என்று வியந்து சாஸ்தா என்ற தெய்வமே தன்னிடம் வந்து பெண் கேட்டிருப்பதை அறிந்து கொண்டார்.
புஷ்கலா- சாஸ்தா திருமணம் திருமணப் பேச்சு . முடிவானதும் வணிகர் தன் சொந்த ஊரான மதுரையில் வாழும் தன் உறவினர்களுக்குத் தகவல் அனுப்பினார்.
உறவினர்கள் பெண்ணுக்கு வேண்டிய சீர்களை எடுத்துக் கொண்டு வந்து புஷ்கலாவை சாஸ்தாவுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். (இந்த கதை வள்ளி திருமணக் கதையைத் தழுவி எழுதப்பட்டதாகத் தோன்றுகின்றது)
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் சாஸ்தாவுக்குத் திருமணம் செய்து வைக்க மதுரையில் வாழும் பட்டு நூல் வணிகர்கள் (சௌராஷ்டிரர்கள்) சீர் செனத்தியோடு இந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம்.
இங்கு வந்து திருமணச் சடங்கு முடிந்த பிறகு கோயில் மரியாதைகள் பெற்றுக் கொண்டு அவர்கள் ஊர் திரும்புவார்கள்.
பூரணி பற்றி கதை எதுவும் வழக்கில் இல்லை. சிவன்,விஷ்ணு, முருகன், விநாயகர் ஆகியோருக்கு இரண்டு மனைவிகள் இருந்ததால் சாஸ்தாவுக்கு இரண்டு என்ற கணக்கைக் கொண்டு வந்திருக்கலாம்.
இங்கு பிரம்மச்சாரியாக விளங்கும் விநாயகருக்கு வடக்கே சித்தி, புத்தி என்று இரு மனைவியர் உண்டு.
அரண்மனைக் கோயில் ஐயப்பன் வளர்ந்த பந்தள ராஜாவின் அரண்மனை வெளியே அதிகம் தெரியாத வகையில் மூன்று நதிகள் ஒன்று சேரும் இடத்தில் இருக்கின்றது. அரண்மனையைச் சுற்றி மூன்று புறமும் நதிகள் ஓடுகின்றன.
அரண்மனையின் வாசலில் ஒரு ஐயப்பன் கோவில் உண்டு. ஐயப்பன் தன் அவதார நோக்கம் முடிந்து தான் கிளம்புவதாக ராஜசேகர வர்மனிடம் கூறியதும் 'உன்னை ராஜாவாக்கி பார்க்க ஆசைப்பட்டேனே. இப்படி பாதியில் போகிறாயே' என்று அழுதார்.
அதற்கு ஐயப்பன் 'நான் வருடம் ஒருமுறை தியானத்தில் இரு து கண் விழிப்பேன். அன்றைக்கு நீங்கள் என்னை அரசன் ஆக்கிப் பார்க்கலாம்' என்று அவர் கையில் ஒரு கல்லை கொடுத்து விட்டு மறைந்தார்.
அந்த கல்லை அரண்மனை வாசலில் வைத்து கோவில் எழுப்பினர். அரண்மனை கோயிலில் ஐயப்பனுக்குரிய திரு ஆபரணப் பெட்டி இருக்கின்றது.
ராஜ குடும்பத்தினர் திரு ஆபரணப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஆண்டுதோறும் மாளிகை புரத்து அம்மன் சந்நிதிக்கு சென்று அங்கு தங்கி இருந்து ஐயப்பனை ராஜகோலத்தில் கண்டு மகிழ்ந்து திரும்பி வருவது வழக்கம்.
அரண்மனையும் கோயிலும் ஒன்றே ஐயப்பன் பந்தளராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் கோவிலிலும் அரண்மனையில் ஒரே நேரசத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்று நம்புகின்றனர்.
இரண்டு முறை தீ விபத்து ஏற்பட்ட போதும் ஒரு முறை கூட்ட நெரிசலில் ஆட்கள் இறந்த போதும் அரண்மனையிலும் சில முக்கியஸ்தர்கள் இறந்து போயினர்.
ஒரு சிலர் இதற்குக் காரணம் அரண்மனையைச் சேர்ந்த சிலர் ஐயப்பனை அரசனாக விடாமல் கொல்லத் திட்டமிட்டனர் என்றும் செவி வழி கதைகள் பரவியுள்ளன.
பந்தள ராஜா பாண்டிய வம்சத்தவர் பந்தள ராஜா பாண்டியன் வம்சத்தினர் என்றும் அவர்கள் பாண்டியரிடம் இருந்து பிரிந்து வந்த ஒரு சிறிய அரச குடும்பம் ஆகும்.
மதுரையில் இருந்து வரும் போது இவர்கள் நிறைய பொன் பொருளைச் சுமந்து வந்ததனால் கொள்ளையரிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒளிந்தபடியே வந்து பிறர் அறியாமல் சுற்றிலும் பாதுகாப்பாக நதிகளும் காடுகளும் உள்ள இடத்தில் அரண்மனையைக் கட்டினர் கைப்புழா / அந்தப்புரம் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர்கள் காயாமொழி மன்னரிடம் இருந்து 760 சதுர மைல்களை விலைக்குப் பெற்றனர். இந்த அரண்மனையில் ஆண்கள் மட்டுமே வசித்தனர்.
பெண்கள் வசிப்பதற்கு சற்று தொலைவில் ஓர் அந்தப்புரத்தைக் கட்டினர். ஆண்கள் அரண்மனையில் இருந்து சுரங்க வாசல் வழியாக கைப்புழாவுக்கு (அந்தப்புரத்துக்கு) வந்து சென்றனர். பந்தள ராஜா காலத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த அந்தப்புரத்தில் வசித்தனர்.
ராஜகோலத்தில் ஐயப்பன் ஐயப்பனுக்கு மகர விளக்குப் பூஜையின் போது அத்தாழ பூஜை நடைபெறும். திடம்பு எனப்படும் ஐயப்பனின் முகம் மட்டும் யானை மீது ஏற்றிக்கொண்டு வரப்படும்.
அந்தத் திடம்பில் ஐயப்பன் மீசையோடு காட்சி அளிப்பார். திருஆபரணப் பெட்டியில் மணிகண்ட ராஜாவுக்குரிய 2 யானை ஒரு புலி 2 மனைவியர் மற்றும் ராஜகோலத்தில் காட்சி அளிப்பதற்கான மீசை ஆகிய அனைத்தும் இருக்கும்.
ஏகாந்த தரிசனம் மற்ற நாட்களில் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு தியானத்தில் இருக்கும் ஐயப்பன் மகர விளக்கு பூஜை நடக்கும் மூன்று நாட்களில் மட்டும் விழித்திருப்பார்.
அப்போது ஒரு நாள் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ராஜ பிரதிநிதி ஒருவர் கோவிலுக்குள் சென்று மணிகண்ட ராஜாவுடன் தனியாக பேசுவதாக ஐதீகம்.
அவ்வாறு அவர் உள்ளே இருக்கும்போது கோயில் கதவுகளைப் பூட்டி விடுவார்கள். வேறு எவருக்கும் உள்ளே போக அனுமதி கிடையாது .
ராஜகோலத்தில் இருக்கும் ஐயப்பன் உடன் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ராஜப் பிரதானி ஒருவர் ராஜாங்க விஷயங்களை பேசுகின்ற நேரம் அது. இதசி ஏகாந்த தரிசனம் என்பர். சாஸ்தா வகைகள் மற்ற சாஸ்தா கோவில்களில் ஐயப்பண் என்ற சாஸ்தா பூரணி புஷ்கலா என்ற இரண்டு மனைவியருடன் இருப்பார்.
சம்மோகன சாஸ்தா என்பவர் ஒளி ரூபம் ஆனவர். இவர் குடும்பங்களின் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வணங்கப்படுகின்றார். ஞான சாஸ்தா என்பவர் தட்சிணாமூர்த்திக்கு நிகரானவர. மாணிக்க வீணை ஏந்தி கல்லால மரத்தடியில் இருக்கும் ஞான சாஸ்தா ஏறத்தாழ தட்சிணாமூர்த்தி போன்றே அருள் வழங்குகிறார்.
தர்மசாஸ்தா என்பவர் தியானத்தில் இருப்பவர். இவரே மகிஷியை வதம் செய்தவர் என்பதால் இவரை வணங்கினால் சனி தோஷம் தீரும். கால சாஸ்தா அல்லது மகாசாஸ்தா என்பவர் யானையை வாகனமாகக் கொண்டவர்.
சத்ரு சம்ஹார மூர்த்தியாக அருள்பாலிப்பதால் இவரை வணங்குவோருக்கு ராகு தோஷம் இருந்தால் தீரும். வீர சாஸ்தா குதிரையை வாகனமாகக் கொண்டவர். மின்னல் வேகத்தில் பறப்பவர். இவரை வணங்குவோருக்கு கேது தோஷம் தீரும்.
வேத சாஸ்தா இரண்டு மனைவியரோடு காட்சி அளிக்கின்றார். இவருக்கு சிங்கம் வாகனமாகும். கல்விக்குரிய கடவுளான வேத சாஸ்தா பிரம்ம தேவனைப் போல விளங்குகின்றார். கல்யாண சாஸ்தா பூரணி புஷ்கலாவுடன் காட்சி தருவார்.
சத்தியபூரண மகரிஷியின் மகளிர் இருவர் இவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு தவம் இருந்தனர். அப்போது இறைவன் மறுபிறவியில் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். இவர்களே பூரணி, புஷ்கலா என்று அவதாரம் எடுத்து வந்து சாஸ்தாவை மணந்தனர். இந்தக் கதை முருகனின் வள்ளி தெய்வானை கதையின் சாயலில் எழுதப்பட்டுள்ளது.
அமுதவல்லி சுந்தரவல்லி என்ற தேவ மகளிர் இருவர் தவமிருந்து வள்ளி தெய்வானை என்ற பெயரில் முருகனை மனந்ததாக கந்த புராணம் கூறுகிறது.
நிறைவு இவ்வாறாக ஐயப்பனுக்குரிய புராண வரலாறும் வழிபாடுகளும் விளங்குகின்றன. அயல்நாட்டில் இருந்து வந்த இஸ்லாமிய, கிருத்துவ மதங்களின் தாக்கத்தால் சாஸ்தா கோயில் அருகே மற்ற கோயில்கள் இடம்பெற்றன என்றும் கூறுவர்.
வாஃபர் சாஸ்தாபின் நண்பர் கிடையாது. சாஸ்தா கல்ப கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட தெய்வம். பால்கடலைக் கடைந்த காலத்தில் தோன்றிய மோகினியின் குழந்தை என்று சாஸ்தாவை புராணக் கடவுளாக சிலர் போற்றுகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |