மண்டையப்பம் நெய்வேத்தியம் செய்தால் தீராத நோய்களும் தீருமாம்- எங்கு தெரியுமா?
நம் வாழ்க்கையில் சில தீராத பிரச்சனைகளும், வியாதியும் சில வழிபாடுகளால் சரி ஆகுவதை நாம் பார்க்கமுடியும். அப்படியாக, ஒரு கோயிலில் மண்டையப்பம் நெய்வேத்தியம் செய்தால் தீராத நோய்களும் தீரும் என்கிறார்கள். அந்த கோயில் எங்கு இருக்கின்றது என்று பார்ப்போம்.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் அமைந்து உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம். இங்கு உள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக பலராலும் போற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகின்றாள்.
இவளை 'மண்டைகாட்டம்மா' என அழைத்தால் வேண்டியதை நமக்கு தருவாள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. இதோடு இக்கோயிலில் ஒரு முக்கியமான வழிபாடாக 'மண்டையப்பம்' நைவேத்யம் உள்ளது.
இந்த நைவேத்தியத்தை படைத்து வழிபாடு செய்தால் நமக்கு ஏற்பட்ட தீராத வியாதியும் குணமாகும் என்பது ஐதீகம். இந்த அம்மன் அமையப்பெற்று உள்ள பகுதி காடு, மேய்ச்சல் நிலமாக இருந்து உள்ளது. அதனால், இந்த இப்பகுதியை மந்தைக்காடு என அழைத்து வந்திருக்கின்றனர். அதுவே, நாளடைவில் மண்டைக்காடு என ஆனது.
இக்கோயில் உள்ள புற்று மிகவும் சிறப்பு வாய்ந்தது. வடக்கு நோக்கியபடி பதினைந்து அடியாக உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகுதியில் பகவதி அம்மன் திருவுருவம் உள்ளது. கருவறையில் புற்றுக்கு முன்பாக பகவதி அம்மன் வெள்ளிச் சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கலச் சிலையாக நின்ற கோலத்திலும் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள்.
இக்கோயிலில் ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு அருகே கடல் உள்ளது. அங்கு நீராடிய பின் தான் பக்தர்கள் அம்மனை தரிசிக்க செல்கின்றனர். பக்தர்கள் கடலுக்குச் செல்லும் போது 'கடலம்மே சரணம்' என்றும், கோயிலுக்குள் நுழையும் போது 'மண்டைக்காட்டு அம்மே சரணம்' என கோஷம் எழுப்பி தான் வழிபாடு செய்கிறார்கள்.
இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும், தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி அன்று, ஆடி செவ்வாய், வெள்ளியன்று விசேஷ பூஜை நடக்கும். வேப்ப மரமே இங்கு தலவிருட்சம். அதோடு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மருத்துவர்களால் கூட கைவிடப்பட்டவர்கள் இங்கு வந்து இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் அம்மனின் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
அதோடு, ஜாதகத்தில் எப்பேர்ப்பட்ட தோஷங்களும் இந்கு அம்மனுக்கு 27 தீபம் ஏற்றி ஒன்பது முறை அம்மன் சன்னதியைச் சுற்றி வழிபாடு செய்வதால் தோஷம்விலகும் என்கிறார்கள். அம்மை நோயில் இருந்து மீண்டவர்கள் 'முத்து' அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.
இங்குள்ள பகவதி அம்மனுக்குப் பிடித்த மண்டையப்பம் தயார் செய்ய, முதலில் பாசிப்பருப்பை ஊற வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவில் வெல்லம், வேகவைத்த பாசிப்பருப்பு, சுக்கு, ஏலக்காய்த்துாளை சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். பெரிய அளவில் உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
பெரிய சட்டியில் நீர் ஊற்றி அதை கொதிக்க வைத்து உருண்டையை மெதுவாக இட்டு வேக வைக்க வேண்டும். வெந்ததும் எடுக்க வேண்டும். இந்த அப்பத்தை படைத்து அம்மனை வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







