மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இதை கவனித்தது உண்டா?
உலகில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று.கோயில் பார்ப்பதற்கே மிக ஆச்சிர்யமா இருக்கும்.
அப்படியாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற அனைவரும் இந்த சுழலும் லிங்கத்தை பார்த்து இருப்போம்.அதாவது எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அது நம்மை நோக்கியிருப்பது போல் காட்சி கொடுப்பதாக வரைய பட்டு இருக்கும் அந்த லிங்கம்.
இந்த ஓவியமானது இறைவன் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தும் வகையில் அமைந்து இருக்கும்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், மீனாட்சியம்மன் சன்னிதியிலிருந்து சுந்தரேஸ்வரர் சன்னிதிக்குச் செல்லும் வழியில் சிவன் சன்னிதியின் இரண்டாம் பிராகாரம் அருகே மேற்கூரையில் இந்த ஓவியத்தை பார்க்கமுடியும்.
பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில் சிவலிங்கம் இருப்பது போன்று இந்த ஓவியம் வரையப்பட்டு இருக்கும்.
லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் இருக்கிறது. இந்த லிங்கத்தை எந்த திசையிலிருந்து பார்த்தாலும் சிவனுடைய ஆவுடை நம்மை நோக்கியது போல இருக்கும்.
சுற்றிச் சுற்றி எந்த திசையில் இருந்து பார்த்தாலும் நம்மை நோக்கி உள்ளதால், இதற்கு சுழலும் லிங்கம் எனப் பெயர் வந்தது.
ஒரு சமயம் ஔவையார் சிவபெருமானை தரிசிப்பதற்காக கயிலாய மலைக்குச் செழும்பொழுது மிகவும் களைப்பாக இருக்கிறது என்று சிவபெருமான் இருக்கும் திசையை நோக்கி கால் நீட்டி அமர்ந்து இருக்கிறார்.
இதைப் பார்த்த பார்வதி தேவிக்கு மிகவும் கோபம் ஏற்பட உடனே ஔவையாரிடம், ‘என் தலைவனான சிவபெருமான் இருக்கும் திசையை நோக்கி இப்படி காலை நீட்டி அமர்ந்து இருக்கிறீர்களே? இது சிவபெருமானுக்கு செய்யும் அவமரியாதையல்லவா? வேறு திசையை நோக்கிக் காலை நீட்டி உட்காருங்கள்’ என்று பார்வதி தேவி கூறுகிறார்.
இதைக்கேட்ட ஔவையாருக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. சிறிது கொண்டே ஔவையார் ‘அம்பிகையே, சிவபெருமான் இல்லாத திசையைப் பார்த்து கால் நீட்டி உட்கார வேண்டுமா?
அப்படி ஒரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு அப்படி ஒரு இடம் தெரிந்தால் சொல்லுங்கள். அந்த திசையை நோக்கி கால் நீட்டி உட்காருகிறேன்’ என்று கூறினார்.
அப்போதுதான் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார். அவர் இல்லாத இடம் என்று எதுவுமேயில்லை என்கின்ற உண்மை புரிய வருகிறது.
இந்த தத்துவத்தை உணர்த்தும் விதமாகத்தான் அனைத்து திசைகளிலும் காட்சித் தரக்கூடிய சுழலும் சிவலிங்கம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலே அமைக்கப்பட்டு உள்ளது.
எங்கும் சிவன்,எதிலும் சிவன்.ஓம் நமச்சிவாய
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |