எலுமிச்சை பழம் தானாக சுற்றும் அதிசய பைரவர் கோவில்.. எங்கு உள்ளது தெரியுமா?
தமிழ்நாட்டில் பல்வேறு ஆன்மீக அதிசயங்களும் ஆன்மீக ரகசியங்களையும் கொண்ட ஏராளமான கோவில்கள் இருக்கிறது. அந்த வகையில் பக்தர்களை மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விசித்திரமான நிகழ்வு நடைபெறுகின்ற ஒரு புனித தலம் ஒன்று உள்ளது. அதைப் பற்றி பார்ப்போம். சிவபெருமானின் உக்கிர அம்சமாக பைரவர் போற்றி வழிபாடு செய்யப்படுகிறார்.
சிவன் கோவில்களில் பைரவருக்கு என்று தனி சன்னதிகள் இருக்கும். அவர் கோவிலின் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறார். மேலும் பைரவரை தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பதோடு நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை.
அதனால்தான், பல பக்தர்கள் அஷ்டமி நாட்களில் பைரவரை வழிபாடு செய்து வேண்டுதலை வைக்கிறார்கள். அப்படியாக, வேலூர் மாவட்டம் ரங்காபுரம் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இது மற்ற கோவில்களை போல் சாதாரண கோவில்கள் அல்ல இங்கு உயரமான ராஜகோபுரம் இல்லை பெரிய சுவர் இல்லை மிகவும் எளிய அமைப்பில் கோவில் உள்ளது. ஆனால் இந்த கோவிலில் ஆன்மீக சக்தி நிறைந்துள்ளதாக பக்தர்கள் சொல்கிறார்கள். மலைமேல் இருக்கும் கோவிலில் காலபைரவர் தனி சன்னதியில் எட்டு கைகளுடன் நின்ற கோலத்தில் நமக்கு காட்சி கொடுக்கிறார்.
சித்தர்களும் இந்த தலத்திற்கு வந்து தியானம் செய்து வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கோவிலில் முக்கிய சிறப்பு என்னவென்றால் வருடத்தில் ஒரே ஒரு முறை நடைபெறக்கூடிய அந்த அதிசய நிகழ்வுதான். அதாவது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். பின்னர் அழகான அலங்காரம் செய்யப்படும்.
அனைத்து விசேஷமான நிகழ்வுகளும் நடைபெறும். பிறகு பைரவரின் தலைமீது முதலில் ஒரு பூ வைக்கிறார்கள். அதன் மேல் ஒரு எலுமிச்சை பழம் வைக்கிறார்கள். அந்த எலுமிச்சை பழம் வாய்த்த சில நொடியில் திடீரென்று ஒரு ஈ பறந்து வந்து அந்த எலுமிச்சை பழத்தின் மேல் அமரும்.

சில வினாடிகளில் அது அங்கிருந்து பறந்து செல்லும். அந்த ஈ பறந்து சென்ற பிறகு பைரவர் தலைமீது வைக்கப்பட்டிருந்த எலுமிச்சை பழம் தானாக சுற்ற தொடங்குகிறது. பிறகு சில நொடியில் எலுமிச்சை பழம் கீழே விழுகிறது.
அப்போது கீழே அமர்ந்திருக்கும் ஒரு பக்தர் அதை கையில் பிடித்துக் கொள்கிறார். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஒரே ஒரு நாளில் மட்டும் நடப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள். சுமார் 3.5 அடி உயரம் கொண்ட பைரவர் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுக்கிறார்.
அது மட்டுமல்லாமல் 500 ஆண்டுகள் பழமையான இந்த பைரவர் சித்தர்களின் காவல் தெய்வமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலுக்கு வந்து பக்தர்கள் வைக்கக்கூடிய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று அனுபவரீதியாக சந்தித்த பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |