தீராத துன்பத்தை போக்கும் முருகன் திருக்கல்யாண வழிபாடு
நாம் வளர்ந்து படித்து வேலைக்கு சென்ற பிறகு நம்முடைய வாழ்க்கையின் மிக முக்கிய பங்காக இருப்பது நம்முடைய திருமணம் தான்.அந்த திருமண வாழ்க்கையில் தான் நம்முடைய அடுத்த பாதி எதிர்காலம் அமைந்து இருக்கிறது.
அந்த வாழ்க்கை சரியாக அமையா விட்டால் நம்முடைய எதிர்காலம் வீணாகி போவதை நாம் பார்க்க முடியும். அப்படியாக ஒருவரது திருமண வாழ்க்கையும்அந்த திருமண வாழ்க்கையில் குழந்தை பாக்கியமும் கிடைக்க நாம் முருக பெருமானை அருள் பெறுவது அவசியமாகிறது.
அப்படியாக முருகப்பெருமானின் முக்கிய நிகழ்ச்சியாக கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் கந்த சஷ்டி விழாவின் கடைசி நாளான ஏழாம் நாள் முருகனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். சூரனை வதம் செய்ததால் மனம் மகிழ்ந்து இந்திரன் தன்னுடைய மகளான தேவயானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைப்பார்.
இந்த திருமண வைபவம் அனைத்து முருகன் ஆலயங்களிலும் நடைபெறும். இவ்வளவு சிறப்பான இந்த நாளில் முருகனை வழிபாடு செய்வது என்பது சிறப்பான விஷயம் ஆகும். திருமண பந்தத்திற்குள் போக சிலருக்கு திருமண தடை இருப்பதை பார்க்க முடியும்.
அவ்வாறாக திருமண தடை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்திற்கு தங்கத்தில் தாலி வாங்கி தரலாம் முடியாதவர்கள் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் போன்ற திருமாங்கல்ய செட்டை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வாங்கி வந்து திருக்கல்யாணம் நடைபெறும் பொழுது அங்கு இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
இதோடு மட்டுமல்லாமல் திருமண வைபோகத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை இவர்களுக்கு திருமணம் நடக்கும் பொழுது மாலை மாற்றும் வழக்கம் என்பது இருக்கும். அப்படி மாலை மாற்றுவதற்கு மாலை வாங்கிக் கொடுத்தாலும் விரைவிலேயே நமக்கு திருமண வரன் கூடி வரும் என்று நம்பப்படுகிறது.
மேலும் அன்றைய தினத்தில் கல்யாண சாப்பாடு அன்னதானமாக போடுவதன் மூலமும் நம்முடைய வாழ்க்கையில் விரைவிலேயே கல்யாண விருந்து போடும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்காக பஞ்சாமிர்தம் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கித் தரலாம்.
பணமாக தராமல் பஞ்சாமிர்தத்திற்கு தேவையான பழ வகைகளை வாங்கித் தருவது நல்ல பலனை தரும். அதிலும் குறிப்பாக நம்மால் இயன்ற அளவு தேனை வாங்கித் தர வேண்டும். தேன் அபிஷேகம் செய்யும் பொழுது அதிலிருந்து சிறிதளவாவது வாங்கி வந்து அதை பிரசாதமாகவும், மருந்தாகவும் நினைத்து கணவனும் மனைவியும் உண்ண விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
முருகனை நம்பியவர் கைவிட படமாட்டார்.அப்படியாக இந்த எளிய வழிபாட்டை மனதார நினைத்து செய்து வேண்ட நம்முடைய வேண்டுதலை முருகன் நிச்சயம் நம்முடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்குவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |