வேண்டிய வரம் தரும் வைகாசி விசாகம்
வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பதால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார்.
வைகாசி மாதம் விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார்.
'முருகன்' என்றாலே 'அழகன்' என்று பொருள். ஒரு சமயம் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழிப்பதற்காக, அற்புதமான ஆற்றல் மிக்க மிகப்பெரிய அவதாரம் தேவைப்பட்டது.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அதில் இருந்து ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்பட்டது. அது மூன்று உலகத்தையும் தகித்தது.
அதை ஒருவராலும் நெருங்க முடியவில்லை. அந்த நேரத்தில் அக்னி பகவான் அந்த ஆறு நெருப்புப் பொறிகளையும் தன் கையில் ஏந்தினார்.
அக்னி பகவானின் கையைக் கூட அந்த நெருப்புப் பொறிகள் தகிக்க ஆரம்பித்தது. தாங்க முடியாத வெப்பமாய் இருந்த அந்த நெருப்புப் பொறிகளை அக்னி பகவான் சரவணப் பொய்கையில் கொண்டு வந்து சேர்த்து குளிர்வித்தார்.
அந்த ஆறு நெருப்புப் பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் அல்லவா?
அதற்காக ஆறு கார்த்திகை பெண்கள், சரவணன் பொய்கையில் தோன்றிய அந்த குழந்தைகளை கையில் எடுத்தனர். ஆறு குழந்தைகளும் ஒரு குழந்தையாக மாறியது.
ஆறுமுகம், 12 கைகள், இரண்டு கால் என்று அற்புதமான ஒளி பொருந்திய தோற்றத்துடன் முருகப்பெருமான் காட்சி அளித்தார். முருகப்பெருமான் பிறந்த அந்த வைகாசி விசாகத் திருநாளை உலகமே கொண்டாடியது.
ஆறு முகத்துடன் காட்சி அளித்ததால் அவருக்கு 'ஆறுமுகன்' என்று திருப்பெயர் உண்டானது. வைகாசி விசாகம் அன்று பிறந்ததால் 'விசாகன்' என்ற திருநாமமும் ஏற்பட்டது.
முருகப்பெருமான் அவதரித்த இந்த வைகாசி விசாகத் திருநாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும். குழந்தை பேறு உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். சகல தோஷமும் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |