தனது தம்பியை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பிள்ளையார்!!!!
விநாயகரை வணங்காமல் எந்த காரியமும் தொடங்குவதில்லை, அவரை நினைத்து தொடங்கிய காரியங்கள் வெற்றி அடையாமல் போனதும் இல்லை.
எந்த கோவிலுக்கு சென்றாலும் அங்கு நம் பிள்ளையாரை முதலில் வணங்கிய பின் தான் கோவிலுக்குள் செல்லவேண்டும்.
அப்படியாக பிள்ளையார் எப்பொழுதும் சாந்தமாகவும், குழந்தையாகவும் தான் காட்சி அளிப்பவர்.
ஆனால் இவருடைய தம்பி முருகன் அன்பும், கோபமும் அதிகம் கொண்டவராக இருப்பவர்.
அப்படி சினம் கொண்ட தன் தம்பியை சிரிக்க வைத்த பிள்ளையாரின் சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது, அதை பற்றி பார்ப்போம்.
ஆறுமுக விநாயகர் கோவில்
திண்டுக்கல் மாவட்டத்தில் சண்முக நதிக்கரையில் ஆறுமுக விநாயகர் கோவில் ஒன்று அமைந்து உள்ளது.
இங்கு தான் பிள்ளையார் தன் தம்பியின் கோபத்தை தணித்து இருக்கிறார். அதாவது ஒருமுறை முருக பெருமான் சூரனை வீழ்த்திவிட்டு கோபம் தணியாமல் கடும் கோபத்துடன் இருக்க, அவரின் கோபத்தை தணிக்க என்ன செய்யலாம் என்று யோசித்த பிள்ளையார்,
தன் தம்பி முருகனை போலவே ஆறுமுகங்கள் கொண்டு அவர் முன் காட்சி கொடுத்திருக்கிறார்.
அதை பார்த்ததும் கடும் கோபத்தில் இருந்த முருக பெருமான் தன் கோபம் மறந்து அண்ணனின் குறும்பு செயலை பார்த்து சிரித்திருக்கின்றார். அதனால் இந்த திருத்தலத்தில் விநாயகர் ஆறுமுகங்களுடன் காட்சி தருகிறார்.
தல பெருமை
இந்த ஆலயம் சிறியதாக இருந்தாலும் சக்தி வாய்ந்த ஆலயமாக அமைத்திருக்கிறது, இங்கு மூலவர் ஆறுமுக விநாயகர் தவிர்த்து சுந்தர விநாயகர், ஆண்டி திருக்கோலத்தில் முருகப்பெருமானும் காசிவிஸ்வநாதரும் காளிஅம்மனும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆறுமுக விநாயகரை தரிசிக்க பல ஊர்களில் இருந்து பல மக்கள் வருகின்றனர். இங்குள்ள ஆறுமுக விநாயகரை வணங்கினால் சகல ஞானங்களையும் யோகங்களையும் தருகிறார்.
மேலும் இங்குள்ள சண்முக நதிக்கரையில் நீராடிவிட்டு சங்கடசதூர்த்தி நாளில் வணங்குவது கூடுதல் சிறப்பாகும்.
மேலும் விநாயகருக்கு ஊற வைத்த பச்சரிசியுடன், வெல்லம், மிளகு, சீரகம் மற்றும் நல்லெண்ணெய் கலந்து படைத்தால் வியாபாரம் பெருகும், குழந்தைகளின் கல்வி மேம்படும்.