முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளை தரிசனம் செய்யும் முன் இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்
கலியுக வரதன் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும் மிகவும் விஷேசம் வாய்ந்தவை. மிகவும் துயரில் செய்வதறியாது இருப்பவர்கள் கட்டாயம் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு சென்று வர வாழ்க்கையில் நல்லதோர் மாற்றம் உண்டாகும். அந்த வகையில் முருகப்பெருமானின் ஆறுபடை வீட்டின் சிறப்புகளும் பெருமைகள் பற்றியும் பார்ப்போம்.
1. முதல்படை வீடு:
முருகப்பெருமானின் முதல் படை வீடு மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்து உள்ளது. இங்கு முருகப்பெருமான் சூரபத்மனை போரில் வென்று, பிறகு அவருக்கு இந்திரன் அவரின் மகள் தெய்வானையை மணம் முடித்துக் கொடுத்தார்.
அதனால், இங்கு முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி கொடுப்பதை காணலாம். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் தள்ளிக் கொண்டு இருப்பவர்கள் கட்டாயம் இங்கு வந்து வழிபாடு செய்ய விரைவில் திருமணம் நடைப்பெறும்.
2. இரண்டாம் படை வீடு:
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் கடலோரத்தில் அமைந்த சிறப்புக் கொண்டது முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆலயம். இங்கு தான் முருகப்பெருமான் சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் சொல்கிறது. எதிரிகள் தொல்லைகள் விலக கட்டாயம் இங்கு வந்து வழிபாடு செய்தால் நல்ல பலன் பெறலாம்.
3. மூன்றாம் படை வீடு:
முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடு பழனி மலையில் அமையப்பெற்று உள்ளது. இது சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி ஆகும். பழனி மலையில் இருக்கும் முருகப்பெருமானின் நவபாஷாண சிலையை போகர் சித்தர் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இங்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் பால், பழம் சாப்பிட்டால் நமக்கு உண்டான சகல நோய்களும் விலகும் என்பது நம்பிக்கை.
4. நான்காம் படை வீடு:
முருகப்பெருமானின் நான்காம் படை வீடு சுவாமி மலையில் அமைந்து உள்ளது. இங்கு முருகப்பெருமான் சிவபெருமானுக்கு பாடம் கற்பித்து கொடுத்தார். அதாவது தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க முருகப்பெருமானைக் குருவாக ஏற்று சிவபெருமான் சீடனாக அமர்ந்த இடம் இந்த சுவாமி மலை.
அதனால் இவர் சிவகுருநாதன் என்று அழைக்கப்படுகிறார். இங்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தால் பிள்ளைகள் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள்.
5. ஐந்தாம் படை வீடு:
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடு திருத்தணியில் உள்ளது. திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான் அவருடைய கோபம் தணியாமல் திருத்தணிக்கு சென்று தன் கோபத்தை தணித்து கொண்டதாக ஐதிகம்.
மேலும், இங்கு முருகப்பெருமான் தன் கோபத்தை தணிகை செய்ததால் இது திருத்தணியை ஆயிற்று. அதோடு, இங்கு தான் முருகப்பெருமான் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியை காதல் திருமணம் செய்துக் கொண்டார்.
6. ஆறாம் படை வீடு:
முருகப்பெருமானின் ஆறாவது வீடு அழகர் மலை பழமுதிர்ச்சோலை சோலைவனம் ஆகும். இங்கு முருகப்பெருமான் ஒளவையிடம் தங்களுக்கு சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு குறும்பு செய்த தலம் ஆகும். இங்கு முருகப்பெருமான் சிறுவனாய் ஒளவைக்கும், வயோதிகனாய் நக்கீரனுக்கும் காட்சியளித்த இடம் இந்த பழமுதிர்ச்சோலையாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







