பொன் மலரால் பூஜிக்கப்படும் பக்த ஹனுமான்
நாமக்கல் நகரத்தில் 18 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்தச் சிலை மலைக்கோட்டையில் உள்ள நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாருக்கு எதிரே அவர்களை வணங்கி நிற்கும் ஆஞ்சநேயர் சிலை ஆகும்.
மக்கள் இச்சிலையின் உயரம் கண்டு இச்சிலைக்கே அதிக அளவில் அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். அதிக அளவில் வந்து வணங்கிச் செல்கின்றனர். ஆஞ்சநேயருக்கு மேற்கூரை கிடையாது.
நரசிம்மர்
நாமக்கல் என்னும் இத் திருத்தலத்தில் விஷ்ணுவின் நரசிம்மாவதாரம் அனுமன் மற்றும் லட்சுமிக்கு நாமகிரி தாயார் என் மூவரும் கோயில் கொண்டுள்ளனர். இக்கோவில் ஓர் குடவரை கோவில் ஆகும். நரசிம்மர் குடவரைச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளார்.
இரணியனை வதம் செய்தவுடன் காட்சி அருள்வதால் அவரது உள்ளங்கையில் ரத்தக்கறை இருக்கின்றது. இவர் அருகில் ஜனகர் ஜனாதனர் சூரியன் சந்திரன், பிரம்மா ஆகியோர் உள்ளனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது உற்சவருக்கே திருமஞ்சனம் நடைபெறுகின்றது.
பக்த ஹனுமான்
ஆஞ்சநேயர் நாமக்கல்லில் பக்த ஹனுமானாக இருகை கூப்பி நரசிம்மரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகின்றார். இவர் கையில் ஜெபமாலையும் இடுப்பில் கத்தியும் உள்ளது. இங்கு ஸ்ரீ வைகாநச ஆகம முறை பின்பற்றப்படுகிறது. 1996இல் இக்கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு இதன் ஆயிரமாவது ஆண்டு விழா நடைபெற்றது.
கதை 1
இராம இராவணப் போர் நடந்தபோது இந்திரஜித்தின் நாக பாசத்தால் கட்டுண்ட லக்ஷ்மணன் மயங்கி விழுந்தான். அவனுடைய மயக்கத்தைத் தீர்க்க அனுமன் சஞ்சீவி மூலிகை பறிக்க வந்தார். சஞ்சீவி மூலிகை எது எனத் தெரியாததால் மலையையே பெயர்த்து எடுத்துப் பறந்து வந்தார்.
சஞ்சீவி மூலிகை வாசம் லட்சுமணன் மூக்கில் பட்டதும் அவன் மயக்கம் தெளிந்தான். அனுமன் அங்கிருந்தே அந்த மலையைத் தூர எறிந்தார் என்றும் கதை சொல்வதுண்டு. ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயர் கதையில் மலையை பெயர்த்து எடுத்து வந்த இடத்திலேயே திரும்பக் கொண்டு போய் வைத்து விட்டார்.
அனுமன் மலையை எடுத்த இடத்திலேயே வைத்தபோது அங்கிருந்து ஒரு சாளக்கிராமக்கல்லை மட்டும் தூக்கி வந்தார். சாளக்கிராமம் என்பது கண்டகி நதியின் கரையில் கிடக்கும் உருண்டைக் கற்கள். நுற்றாண்டுக்களாகத் தண்ணீர் உருண்டு ஓடியதால் கற்களின் சீறற்ற பகுதிகள் தேய்ந்து உருண்டையாகக் காட்சி அளிக்கும். இவை ஆதிநாராயணன் குடி கொண்டிருக்கும் புனிதக் கற்களாகும். இத்தகைய சாளக்கிராமங்களில் ஒன்றை அனுமன் எடுத்துக் கொண்டு வந்தார்.
அனுமன் சாளக்கிராமத்தோடு பறந்து வரும் வேளையில் சூரியன் உதயமாகிவிட்டது. அதனால் கல்லைக் கீழே வைத்துவிட்டு அவர் சூரியன் நமஸ்காரம் செய்தார். அதன் பின்பு அந்த சாளக்கிராமக் கல்லை தூக்க முனைந்த போது கல்லை அந்த இடத்திலிருந்து பெயர்க்க இயலவில்லை. இதனால் கல் அங்கேயே இருந்து விட்டது. அதுவே வளர்ந்து நரசிம்மர் ஆயிற்று.
கதை 2
நரசிம்மா அவதாரம் எடுத்து திருமால் இரணியனைக் கொன்றார். லட்சுமி தாயார் நரசிம்மரின் வீர சொரூபத்தைக் காண வேண்டுமென்று இந்த இடத்தில் விஷ்ணுவை நோக்கித் தவம் செயதார். அப்போது அனுமன் வான் வழியாக வந்ததைப் பார்த்து அவர் சுமந்து செல்லும் சாளக்கிராம கல்லை பெருமாளின் திரு உருவமாகக் கருதி அங்கேயே இறக்கி வைக்கும்படி கூறினார் அதுவே இங்குள்ள நரசிம்மர் சிலை ஆயிற்று.
கதை 3
ஒரு நாள் கண்டகி நதியில் நீராடிய ஆஞ்சநேயர் அங்கிருந்த ஒரு சாளக்கிராமக் கல்லை தன் பூஜைக்காக எடுத்துக்கொண்டு வான் வழியே பறந்து வந்த போது கமல தீர்த்தம் ஒன்று அங்கு இருப்பதை கண்டார். அதன் அருகில் மகாலட்சுமி தவம் செய்து கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கீழே இறங்கி மகாலட்சுமி தாயாரிடம் அவர் தவத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்தார்.
மகாலட்சுமி தாயார் நரசிம்மர் வடிவத்தில் விஷ்ணுவைத் தான் கண்டதில்லை என்றும் அவ்வாறு காணும் விருப்பத்துடன் தவம் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆஞ்சநேயரும் மகாலட்சுமி தாயாரின் கைகளில் தான் கொண்டு வந்த சாளக்கிராம கல்லைக் கொடுத்துவிட்டு தான் நீராடி விட்டு வந்து பெற்றுக் கொள்வதாக கூறி நதியில் இறங்கினார்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து பெற்றுக் கொள்ளாவிட்டால் தான் அந்தக் கல்லைக் கீழே வைத்து விட்டு தன் தவத்தைத் தொடர்வதாக லட்சுமி தெரிவித்தார். அதற்கு ஆஞ்சநேயர் ஒப்புக்கொண்டார்.
கண்டகி நதியில் குளிக்கச் சென்ற ஆஞ்சநேயர் தண்ணீரில் சுகம் கண்டவராய்த் தன்னை மறந்து கூடுதல் நேரம் தண்ணீரில் இருந்து விட்டார். திடீரென சாளக்கிராமம் பற்றிய நினைவு வரப் பெற்றவராக லட்சுமி தாயாரிடம் விரைந்து வந்தார்.
ஆஞ்சநேயர் வர கால தாமதம் ஆனதால் தாயார் சாளக்கிராமத்தைக் கீழே வைத்து விட்டு கண்ணை மூடி தவத்தில் ஆழ்ந்தார். ஆஞ்சநேயர் தாயாரின் தவத்தைக் கலைக்காமல் கல்லை எடுத்தார். ஆனால் கல்லை எடுக்க முடியவில்லை. அது பெரிய மலையாக உருவெடுத்தது. அந்த மலையில் இருந்து நரசிம்மர் மகாலட்சுமி தாயாருக்குத் காட்சியளித்தார். பின்பு மகாலட்சுமியைத் தன் கரங்களில் எடுத்து தன் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டார். எனவே அவர் லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்பட்டார்.
லட்சுமி நரசிம்மரைக் கண் குளிரத் தரிசித்த ஆஞ்சநேயரும் இவர்கள் இருவரையும் கைகூப்பி வணங்கிய பக்த ஹனுமானாக அவர்களுக்கு எதிரே நின்றார். இன்றும் ஓங்கி உயர்ந்து நின்று கொண்டிருக்கிறார்
மூன்று சக்திகள்
லட்சுமி நரசிம்மர் கோவிலில் உப சன்னதியாக ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு நரசிம்மர் கிரியா சக்தியாகவும் நாமகிரித் தாயார் இச்சா சக்தியாகவும் ஆஞ்சநேயர் ஞான சக்தியாகவும் காட்சி தருகின்றனர். எனவே 3 சக்திகளும் இணைந்து காணப்படும் திருத்தலமாக நாமக்கல் திருத்தலம் விளங்குகின்றது.
வடை மாலை
ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவதும் வெற்றிலை மாலை கட்டி சாத்துவதும் பொதுவான நேர்த்திக் கடன்கள் ஆகும். இந்த வடைமாலைக்கு ஒரு கதை உள்ளது
ஒருமுறை ராகுவும் சனியும் ஆஞ்சநேயரிடம் தோற்றுப் போயினர். ஜாதகத்தில் ராகுவாலும் சனியாலும் ஏற்பட்ட தோஷங்கள் விலக ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த நல்லெண்ணையும் சேர்த்து ஆஞ்சநேயருக்கு காணிக்கையாக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் ராகு சனி தோஷம் விலகும். எனவே பக்தர்கள் உளுந்தை அரைத்து மாவாக்கி நல்லெண்ணெயில் வடை சுட்டு அந்த வடைகளை 51, 101 என்று மாலையாகக் கோர்த்து ஆஞ்சநேயருக்கு சாத்துகின்றனர்.
பொன் மலர் பூசை
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் வழக்கம் உண்டு. பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிய இறைவனைத் தங்கத்தேரில் இருத்தி இழுத்து வலம் வருகின்றனர். தங்க மலரால் அர்ச்சனை செய்யும் பழக்கமும் இக்கோயிலில் உள்ளது. பொன் மலர் அர்ச்சனை செய்வதற்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
அன்னதானம்
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோவில்களில் மதியவேளையில் அன்னதானத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இத் திட்டம் நாமக்கல்லிலும் செயல்படுகின்றது. தினமும் 125 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகின்றது.
கோவில் விழாக்கள்
மற்ற விஷ்ணு கோவில்களில் இருப்பதை போலவே நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலிலும் சித்திரை வருடப்பிறப்பு வைகாசி விசாகம் ஆடிப்பூரம் என்று மாதம் ஒரு விழா கொண்டாடப்படும். நாமகிரி தாயாரின் ஊஞ்சல் சேவை இங்கு விசேஷமாக நடைபெறும்.
ஆவணி மாதம் பவித்ர உற்சவம் நடைபெறும். நரசிம்மர் ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தி விசேஷமாக கொண்டாடப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நவராத்திரி உற்சவம் தாயாருக்கு சிறப்பாக நடைபெறும்.
கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபமும், மார்கழி மாதம் அனுமன் ஜெயந்தியும் சிறப்பாகக் கொண்டாடப்படும். மார்கழி மாதம் முழுவதும் இக்கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்று ஏராளமான பக்தர்கள் சொர்க்க வாசல் திறப்புக்குக் கூடுகின்றனர். தை முதல் தேதி அறுவடை திருநாள் கொண்டாடப்படும்.
பங்குனி மாதம் 15 நாள் திருவிழா நடைபெறும். மூன்றாம் திருநாள் அன்று தேர் திருவிழா நடைபெறும். நகரின் நடுவில் இக்கோவில் இருப்பதால் தேர் திருவிழாவுக்கு பெரிய அளவில் கூட்டம் கூடுகின்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |