நவராத்திரி ஒன்பது நாள் அம்பிகையின் அலங்காரங்களும் நைவேத்தியங்களும்
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படும் விழா ஆகும்.இந்த நவராத்திரியில் சிலர் தங்களுடைய வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து பூஜைகள் செய்வார்கள்.அப்படியாக இந்த மண்ணால் ஆன கொலு பொம்மைகள் வீட்டில் வைத்து வழிபடுவதின் சிறப்பையும் கொலு படிகள் அமைக்கும் முறை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
ஐம்பூதங்களில் ஒன்றான மண் கொண்டு செய்யப்பட்ட கொலு பொம்மை வைத்து வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அம்பாள் அருளிச்செய்வாள் என்று தேவிபுராணத்திலேயே சொல்லப்பட்ட விஷயம் ஆகும். அசுரர்களை அழிப்பதற்காக அம்பிகை அவதரித்தபோது தேவர்கள் அனைவரும் தங்களின் அம்சங்களை அம்பிகையிடம் கொடுத்துவிட்டு அவர்கள் பொம்மைகள் போல் இருந்தனராம்.
இதை நினைவுகூறும் வகையில் நவராத்திரி பொழுது பொம்மை கொலு பழக்கம் ஏற்பட்டது என்ற ஒரு சொல்கின்றனர்.பூமியில் வாழும் அனைத்து உயிர்களிடத்திலும் அம்பிகையே இருக்கிறாள்.அப்படியாக நவராத்திரி ஒன்பது நாளும் அம்பிகைக்கு செய்யவேண்டிய அலங்காரங்கள் மற்றும் நைவேத்தியங்கள் பற்றி பார்ப்போம்.
முதல் நாள்:
மது கைடபர் என்ற அரக்கர்களின் அழிவுக்குக் காரணமாக விளங்கிய தேவியை மகேஸ்வரி வடிவத்தில் அலங்கரித்துப் பூஜிக்க வேண்டும். அலங்காரத்தில் அபயம், வரதம், புத்தகம், அச்சமாலை தாங்கிய குமாரியாக அமைத்து முத்துமாலை, ரத்தினமாலை, மல்லிகை மாலை சுட்ட வேண்டும்.மேலும் முதல் நாள் அன்று சக்கரைப் பொங்கல் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.
இரண்டாவது நாள்:
மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்பட்ட தேவியை ராஜராஜேஸ்வரியாக கரும்பு வில், மலர் அம்பு, பாசங்குசம் ஏந்தியவளாக அலங்கரிக்க வேண்டும்.இதில் தயிர்சாதம் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.
மூன்றாம் நாள்:
மகிஷாசுர வதம் செய்ய தேவி, சூலத்தைக் கையிலேந்தி மகிஷத்தின் தலைமீது வீற்றிருக்கும் கோணத்தில் கல்யாணி வடிவமாக அலங்கரிக்க வேண்டும்.இதில் வெண்பொங்கல் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.
நான்காம் நாள்:
துர்க்கையை ஜெயதுர்க்கை என்றும் ரோகிணி துர்க்கை என்றும் அழைப்பர். சிம்மாசனத்தில் அமர்ந்து தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அருள்பாலிக்கும் கோலத்தில் அன்றைய தினம் வீற்றிருப்பாள்.இதில் எலுமிச்சை சாதம் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.
ஐந்தாம் நாள்:
துர்க்கை, கம்பன் என்ற அரசனால் அனுப்பட்டத் தூதுவனாகிய சுக்ரீவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பாவனையில் அலங்கரிப்படுகிறாள். அன்றைய தினம் புளியோதரை நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.
ஆறாம் நாள்:
சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் சண்டிகார் தேவியாக அலங்கரிக்கப்பட்டு கைகளில் அக்கமாலை, கபாலம், தாமரைப் பூ, பொற்கலசம் ஆகியவற்றைக் கொண்டவளாக பிறை அணிந்த தோற்றத்தில் அருள் பாலிக்கிறாள். அன்றைய நாள் தேங்காய் சாதம் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.
ஏழாம் நாள்:
கண்ட, முண்டர்கள் என்ற அசுரர்களை வதம் செய்தப்பின் பொற்பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் கோலத்தில் தேவி பூஜிக்கப்படுகிறாள். இவளை சாம்பவி என்றும் அழைப்பர். அன்றைய தினம் தேவிக்குக் கல்கண்டு சாதம் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.
எட்டாம் நாள்:
ரக்தபீஜன் வரத்துக்குப் பிறகு கருணை நிறைந்தவளாக அடர்ந்த கோலத்தில் அலங்கரிக்கப்படுகிறாள். இந்தக் கோலத்தில் அஷ்ட சித்திகளும் படைசூழ அவள் வீற்றிருப்பது சிறப்பு. சர்க்கரைப் பொங்கல் அன்றைய நாள் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.
ஒன்பதாம் நாள்:
தேவியின் கரங்களில் வில், பாசங்குசம், சூலம் ஏந்தியவளாக சிவசக்தி வடிவமாகிய காமேஷ்வரியாக காட்சியளிக்கிறாள். இது அரக்கர்களை அழித்தக் கோலம். தேவிக்கு அன்றைய நாளில் அக்கார வடிசல் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |