பக்தர்களுக்காக பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எங்கு இருக்கிறது தெரியுமா?
பித்ரு தோஷம் ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்பட்டு விட்டால் வாழ்வில் பெரிய இழப்புகளையும் பல கஷ்டங்களையும் சந்திக்க நேரிடும். பித்ரு தோஷம் என்பது முன்னோர்களுக்கு இறப்பின்போது முறைப்படி செய்யாமல் விட்ட சடங்குகளால் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், முன்ஜென்ம பாவங்கள், முன்னோர் பாவங்கள், பிறர் விட்ட சாபங்கள் எல்லாம் சேர்ந்து தான் பித்ரு தோஷமாகிறது. இத்தகைய பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட வேண்டுமா. அப்போ இந்த கோயிலுக்கு ஒருமுறை போயிட்டு வந்தால் போதும். வாழ்க்கையில் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட உதவும் கோயிலின் சிறப்புகளையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
சென்னையை அடுத்த செங்கல்பட்டில் நென்மேலி கிராமம் அமைந்துள்ளது. இங்கு தான் பித்ரு தோஷத்தை போக்கும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
‘புண்டரீக நல்லூர்’, ‘பிண்டம் வைத்த நல்லூர்’ என அந்தக் காலத்தில் நென்மேலி கிராமம் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலமானது காசி, கயா திருத்தலங்களுக்கு இணையாகப் போற்றப்படுகிறது.
தல பெருமை:
ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட யாக்ஞ நாராயண சர்மா என்பவர் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்துள்ளார். இவரது மனைவியின் பெயர் சரஸ வாணி. இவர்களுக்கு நென்மேலி தலத்தில் உள்ள பெருமாளின் மீது அளவுகடந்த பக்தி இருந்தது.
அந்த பக்தியின் காரணமாக, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தினைக் கூட, கோயில் திருப்பணிக்காக செலவிட்டுவிட்டனர். இதனால் அரசாங்கம் அவர்களுக்கு தண்டனை வழங்கியது. அந்த தண்டனையை ஏற்க விரும்பாத அந்த தம்பதி, திருவிடந்தை ஆலய திருக்குளத்தில் மூழ்கி தங்களுடைய உயிரை போக்கினர்.
அவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்ய வாரிசு என ஒருவரும் இல்லை. அந்தத் தம்பதிக்கு வாழும் காலத்தில் இருந்த ஒரேயொரு வருத்தம் நாம் இறந்துவிட்டால் ஈமக்காரியங்களைச் செய்வதற்கு நமக்கு வாரிசு இல்லையே என்பதுதான். அதே வருத்தத்துடன் அவர்கள் உயிர்நீத்தார்கள். அவர்களது எண்ணத்தை அறிந்த நென்மேலி தலத்தின் பெருமாள், அவர்களுக்காக ஈமக்கிரியைகளை செய்தார் எனக் கூறப்படுகிறது.
எங்களைப் போல் வாரிசு இல்லாதவர்களுக்கும் வாரிசு இருந்தும் ஈமக்காரியங்களை, ஈமக்கடன்களைச் செய்யாதவர்களுக்கும் தாங்களே ஈமக்கிரியைகளை செய்து அருளுங்கள் என தம்பதியர் வேண்டி பெருமாளுக்கு நன்றி தெரிவித்தனர்.
அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வாரிசுகள் இல்லாதவருக்கும் தர்ப்பணம் செய்ய இயலாதவர்களுக்கும் பெருமாள் தானே முன்னின்று இன்று வரைக்கும் தர்ப்பணம் செய்து வைத்து வைக்கிறார் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
திதி காலம்:
இந்த தலத்தில் திதி செய்ய விரும்புபவர்கள், இங்கு பித்ரு கால பூஜை நடைபெறும் வேளையில், அதில் கலந்துகொண்டு பெருமாளிடம் தங்களின் காரியத்தை ஒப்படைக்க வேண்டும். இதனை திதி சம்ரட்சணம் என்கிறார்கள். அந்த நேரத்தில் பெருமாளுக்கு வெண் பொங்கல், தயிர் சாதம், பிரண்டை மற்றும் எள் கலந்து செய்த துவையல் ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
இந்த நைவேத்தியங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய பித்ருக்களை திருப்திப்படுத்தும் பணியை பெருமாள் செய்வதாக மக்களிடையே நம்பிக்கை உள்ளது. முன்னோர்களின் திதி நாட்கள், அமாவாசை, ஏகாதசி போன்ற நாட்களில், இந்த ஆலயத்தில் நடைபெறும் பித்ரு கால பூஜையில் பங்கேற்பவர்களுக்கு, கயா மற்றும் காசிக்கு சென்று திதி கொடுத்த பலன் கிடைக்கும்.
தல சிறப்புகள்:
லட்சுமி நாராயண பெருமாள் கோயிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும். முன்னோர்களின் சாபத்தால் தடைபட்டு வந்த காரியங்கள் விரைவாக நடைபெறும்.
இந்த கோயிலில் மகாளய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பான பலனைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இந்த கோயிலின் உற்சவ மூர்த்தியாக ‘சிரார்த்த சம்ரட்சண நாராயணர்’ அருள்கிறார்.
பித்ரு பூஜை மூலம் மக்கள் தங்கள் முன்னோர்களை கௌரவிக்க உதவுவதால் இந்த கோவில் போற்றப்படுகிறது. இறைவனின் கருணை மற்றும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது அதன் முக்கியத்துவமாகும்.
நென்மேலியில் உள்ள லட்சுமி நாராயணன் கோவில், பக்தர்கள் தங்கள் முன்னோர்களின் நலனுக்காக ஆசி பெறவும், சடங்குகள் மற்றும் பிரசாதங்கள் மூலம் தங்கள் சமயக் கடமைகளை நிறைவேற்றும் இடமாகவும் விளங்குகிறது.
கயா போன்ற பிற புனித இடங்களில் செய்யப்படும் சடங்குகளுக்கு நிகரான முறையில் தங்கள் முன்னோர்களை மதிக்க விரும்புவோரின் இதயங்களில் இது ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |