பித்ரு தோஷம், புத்ர தோஷம் போக்கும் இராமேஸ்வரம்
தமிழகத்தின் கிழக்குக்கோடி கடற்கரையில் உள்ள ஒரு தீவு இராமேஸ்வரம் ஆகும். பாம்பன் பாலத்தின் வழியாக இத்தீவு தமிழகத்துடன் தொடர்பு கொள்கின்றது. இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதர் கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
கோயில் கதை
இராமன் என்ற சத்திரியன் இராவணன் என்ற பிராமணனை வதம் செய்ததால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொள்கின்றது. இத் தோஷத்த்தில் இருந்து விடுபடுவதற்காக இராமேஸ்வரம் வந்து இராமன் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினான்.
அனுமனை அழைத்து சிவ கைலாயத்திற்குப் போய் ஒரு சிவலிங்கம் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். அனுமனும் கிளம்பி விட்டான். அதற்குள் சீதை விளையாட்டாக கடற்கரை மணலைக் குவித்து பிடித்ததும் அது லிங்கமாக உருப்பெற்றது.
அனுமன் வர காலதாமதம் ஆனதால் நல்ல நேரத்தில் சிவ பூஜை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தினால் இராமனும் மணல் லிங்கத்திற்கு சிவ பூஜை செய்து முடித்தான். இராமன் சிவபூஜையை முடித்த பிறகு அனுமன் சிவலிங்கத்துடன் வந்து சேர்ந்தான்.
சிவலிங்கத்தை கடற்கரை மணலில் வைத்தான். இராமன் சிவபூஜை முடிந்துவிட்டது இதை எடுத்துச் சென்று விடு என்ற அனுமனிடம் கூறவும் அனுமன் சற்று கோபமாக சிவலிங்கத்தைத் தூக்கி கடலில் எறிய முற்பட்டான். சிவலிங்கத்தைத் தூக்கினான்.
அவனால் அதை அசைக்க கூட இயலவில்லை. தன் வாலால் கட்டி தூக்கி விடலாம் என்று வாலைச் சுற்றிக் கட்டி இழுத்தான். அப்போதும் தரையில் வைத்த சிவலிங்கம் வைத்தபடியே இருந்தது. கிஞ்சித்தும் நகரவில்லை. இதைக் கண்ட ராமன் 'சரி இருக்கட்டும் விட்டுவிடு இந்த சிவலிங்கத்திற்கும் பூஜை நடக்கட்டும்' என்றான்.
இவ்வாறு இரண்டு சிவலிங்கங்களை வைத்து கருவறை அமைத்து கட்டப்பட்ட கோவில்தான் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதர் கோவில்.
தேசியப் புண்ய தலம்
இந்தியாவில் நான்கு புண்ணிய தலங்கள் உண்டு. கிழக்கே ஜெகநாதர் கோவில், மேற்கே துவாரக நாதர் கோவில், வடக்கே பத்ரிநாத் கோவில், தெற்கே இராமநாதன் கோவில் ஆகும். எனவே தெற்கில் உள்ள இந்த இராமநாதர் கோவிலுக்கு வடக்கில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து இராமர் பூஜித்த சிவலிங்கத்தை வணங்கிச் செல்கின்றனர்.
காசிக்கு சென்றவர்கள் காசி விஸ்வநாதரை தரிசித்த பின்பு நேரே தெற்கே இராமேஸ்வரம் வந்து இராமன் வணங்கிய இராமநாதரை தரிசித்து தங்களின் திருத்தல யாத்திரையை நிறைவு செய்கின்றனர்.
சாமி & அம்மனின் சிறப்பு
இந்தியாவின் 12 ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் விளங்குவதால் வடநாட்டைச் சேர்ந்த பக்தர்கள் மிகுதியாக இங்கு வந்து வணங்கி செல்கின்றனர்.
கோயில் அமைப்பு
இராமேஸ்வரம் கோவில் வளாகம் 15 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகும். கோயில் 865 அடி நீளமும் 657 அடி அகலமும் கொண்டது. இக்கோயிலின் கட்டுமான பணிகள் கி.பி.1740 இல் முத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்களால் தொடங்கப்பட்டு கி.பி. 1770 யில் முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் நிறைவு பெற்றது.
இக்கோவிலின் கிழக்கு கோபுரம் மற்ற கோபுரங்களை விட உயர்ந்ததாகும். இதன் உயரம் 126 அடி உயரம் . மேற்கு கோபுரம் 78 அடி உயரம் உடையது. இக் கோபுரங்களின் வழியாக மட்டுமே பக்தர்கள் சென்று வருகின்றனர். மற்ற இரண்டு கோபுர வாயில்களும் பூட்டப்பட்டுள்ளன.
கருவறை நாதர்
இராமேஸ்வரம் கோவிலின் மூலஸ்தானத்தில் இராமர் வணங்கிய சீதை மணலால் செய்த லிங்கம் உள்ளது. அதன் வலது புறத்தில் அனுமன் கொண்டு வந்த கைலாய லிங்கமும் காணப்படுகின்றது. இந்த லிங்கத்தில் அனுமன் வாளால் கட்டிய தடயம் உள்ளது.
இராமர் அனுமன் கொண்டு வந்த இந்த லிங்கத்திற்கே முதலில் பூஜை செய்ய வேண்டும் என்று கூறியதால் இன்றைக்கும் இந்த சிவலிங்கத்துக்கே முதல் பூஜை நடைபெறுகின்றது. கருவறைக்கு முன்னாடி உள்ள மண்டபத்தில் இராமநாதரை பூஜித்த இராமர், சீதை, இலட்சுமணரின் சிற்பங்கள் உள்ளன. இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கி அனுமனின் சிலையும் காணப்படுகின்றது.
அம்மன் சந்நிதி
மூலவருக்கு வடக்கே பர்வத வர்த்தினி என்ற பெயரில் அம்பிகையின் சந்நிதி உள்ளது. அம்பிகையின் பாதத்தில் ஆதிசங்கரரின் ஸ்ரீ சக்கரம் காணப்படுகின்றது. இக்கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாகும். இதனை சேது பீடம் என்று அழைக்கின்றனர்.
உப சந்நிதிகள்
திருக்கோவிலின் கன்னி மூலையில் கணபதி சன்னதி காணப்படுகிறது. ஈசானிய மூலையில் வெளிப்பிரகாரத்தில் நடராஜர் சந்நிதி உள்ளது. வாயு மூலையில் ஆகாயத்தைப் பார்த்தபடி அனந்த சயனம் கொண்ட பெருமாளின் சன்னதி உள்ளது. சேது பாலம் கட்ட உதவிய வானரர்களான நலன், நீலன், கவன் ஆகிய மூவரின் பெயராலும் மூன்று லிங்க சன்னதிகள் தனித்தனியே உள்ளன.
பிரகாரத்தின் சிறப்பு
இராமேசுவரம் இராமநாதர் கோயிலில் உலகின் நீண்ட பிரகாரம் இராமேஸ்வரம் கோவிலின் மூன்றாவது பிரகாரம் ஆகும். இயது உலகின் மிக நீண்ட பிரகாரமாகும் இதில் 1212 தூண்கள் உள்ளன
தீர்த்தங்கள்
இராமேஸ்வரத்தில் தீர்த்தங்கள் மிகவும் சிறப்படையன. இங்குச் செல்லும் பக்தர்கள் கடலில் உள்ள அக்கினி தீர்த்தத்தில் (கடலில்) குளித்துவிட்டு தொடர்ந்து கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தங்களில் குளித்த பின்பு உடைமாற்றிக்கொண்டு இறைவனைத் துதிக்க வேண்டும்.
அக்கினி தீர்த்தம்
சீதையின் கற்பை உலகுக்கு உணர்த்த விரும்பிய ராமபிரான் சீதையைத் தீக்குளிக்கும்படி ஆணையிட்டார். கற்புக்கனலியான சீதை தீக்குளித்த போது அவளுடைய கற்புத் தீயின் வெப்பத்தைத் தாங்க இயலாத அக்கினி பகவான் கடலுக்குள் குதித்து விட்டார். அக்கினி கடலில் குதித்த இடம் அக்கினி தீர்த்தம் எனப்படுகின்றது.
சேது தீர்த்தம்
இந்து மாக்கடலும் வங்காள விரிகுடாவும் சேரும் இடத்தை சேது தீர்த்தம் எனன்கின்றனர். இதனை தனுஷ்கோடி என்றும் கூறுவர். கடலுக்குள் இருக்கும் வில்லூன்றி தீர்த்தம் இராமன் வில்லை ஊன்றிய இடம் ஆகும். இங்கு நல்ல தண்ணீர் கிடைக்கும் என்பது ஓர் அதிசயமான செய்தி.
மற்ற தீர்த்தங்கள்
இராம தீர்த்தத்தில் குளித்து வழிபட்டு நாகநாதரை வழிபட்டு வந்தால் நாக தோஷம் விலகும். பிள்ளை வரம் கிடைக்கும். பிள்ளை பேறு இல்லாதவர்களும் ஜாதகத்தில் ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வாறு தொடர்ந்து வணங்கி வரலாம். தன் குருவான துரோணாச்சாரியாரின் சாவுக்குக் காரணமாக இருந்த தர்மர் குரு தோஷம் தீர இராம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தார்.
22 தீர்த்தங்கள்
இராமேசுவரம் இராமநாதர் கோயிலில் 22 தீர்த்தங்கள் கோவிலுக்குள் இருக்கின்றன.
1.அவற்றில் மகாலட்சுமி தீர்த்தம் அனுமார் சந்நிதிக்கு எதிரே தெற்கு பக்கம் உள்ளது. இங்கு நீராடினால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம்.
2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம் 4. சரஸ்வதி தீர்த்தம் ஆகியவை அனுமார் கோவிலுக்கு மேற்கே உள்ளன. இங்கு நீராடுவதால் இதுவரை சமயச் சடங்குகளைச் செய்யாமல் விட்டவர்களுக்கும் பித்ரு கடன் தீர்க்கும் சந்ததி இல்லாதவர்களுக்கும் நினைத்தது நிறைவேறும்.
5.சேது மாதவ தீர்த்தம் ஐந்தாவது தீர்த்தம் ஆகும். இதில் குளித்தால் லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறையும். 6. நளதீர்த்தில் நீராடுவதால் உடல் பொலிவு கிடைக்கும். சொர்க்கம் கிட்டும்.
7. ஏழாவதான நீல தீர்த்தத்தில் நீராடுவதால் சமத்யாக பலனும் சொர்க்கலோகமும் கிடைக்கும். எட்டாவது தீர்த்தத்தில் நீராடும் போது போது கோபம் குறையும். மனவலிமை அதிகரிக்கும். உடல் நலமும் மன வலிமையும் கிடைக்கும்.
ஒன்பதாவது கவாட்ஸ தீர்த்தம் இந்த தீர்த்தத்தில் நீராடுகின்றவர்கள் உறுதியான உடலும் மனமும் பெற்று உலக வாழ்க்கையை சிறப்பாகஅனுபவிப்பார்கள். அதன் பிறகு சொர்க்கத்திற்கு செல்வார்கள். நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். பத்தாவது தீர்த்தத்தில் நீராடுபவரின் சரித்திரம் விலகி செல்வம் செல்வாக்கு கிடைக்கும்.
11.சங்கு தீர்த்தத்தில் நீராடுவோரருக்கு முற்பிறவியில் செய்நன்றி மறந்த சாபம் இருந்தால் அந்த சாபத்திலிருந்து விடுதலை பெறுவர் 12.பனிரெண்டாவது சக்கர தீர்த்தத்தில் நீராடுவோர் வம்சாவழளியில் எவரும் உடல் ஊனமுற்றவராக பிறக்க மாட்டார்கள். ஊனம், குருடு, செவிடு நீங்கி பிறப்பார்கள்.
13 வது தீர்த்தம் பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் ஆகும். இதில் நீராடுவோருக்கு பிரம்மஹத்தி தோஷங்களும் பாவங்களும் விலகும். அவர்களுக்கு எவரேனும் பில்லி சூனியம் வைத்திருந்தால் அதன் தீய பலன்கள் இவர்களை அண்டாது.
14வது சூரிய தீர்த்தம் 15 சந்திர தீர்த்தம் ஆகும். சூரிய தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகால ஞானம் கிடைக்கும். உடல் நோய் விலகும். 15. சந்திர தீர்த்தத்தில் நீராடுவோருக்கு உடலில் இருக்கும் நோய்கள் விலகி திடகாத்திரமாக மாறுவார்கள்.
16,17, 18 ஆகியன கங்கா, யமுனா மற்றும் காயத்ரி தீர்த்தங்கள் ஆகும். இவற்றில் நீராடுவோருக்கு பிணி மூப்பு சாவு போன்றவை அண்டாது நீங்கி. அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெறுவர். 19ஆவது சாத்தியாமிர்த தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் நீராடும் போது தேவர்களின் கோபம் மற்றும் பிராமண சாபம் விலகிவிடும்.
மோட்சம் கிடைக்கும். 20 ஆவது சிவதீர்த்தம். இத்தீர்த்தத்தில் நீராடுவதால் சகல நன்மைகளும் பெறலாம். 21 சர்வ தீர்த்தம். இதில் நீராடும்போது பிறவிக் குருடும் நோயும் நரை திரை மூப்பும் விலகும்.
22 ஆவது கோடி தீர்த்தம் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த இராமருக்கு அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டபோது தன் அம்பின் நுனியை பூமியில் அழுத்தி ஊன்றினார். அங்கிருந்து பெருகி வந்த ஊற்று நீர் கோடி தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது. இத்தீர்த்தத்தில் நீராடிய பின்பு இவ்வூரில் இரவில் தங்காமல் உடனே கிளம்பி விட வேண்டும்.
பித்ரு கடன் தீர காசி தீர்த்தாபிஷேகம்
இராமேசுவரம் இராமநாதர் கோயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு நடக்கும் திருவனந்தல் பூஜையின் போது மரகத லிங்கத்தை மூலவருக்கு முன்பாக வைத்து அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தைப் பார்க்க தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
அதுபோல இங்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்கு கங்கை தீர்த்தம் கிடைக்கும். பக்தர்கள் கங்கையிலிருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை இராமேஸ்வரத்தில் இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து நற்கதி அடையலாம்.
இதற்கும் சிறப்பு கட்டணம் உண்டு. வடநாட்டு பக்தர்கள் காசி தீர்த்தத்தை கொண்டு வந்து இராமருக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதனால் பித்ருக்களின் தோஷம் விலகும். முன்னோர்களுக்கு இதுவரை செய்யாத பித்ரு கடன்களை தீர்த்த புண்ணியம் கிடைக்கும்.
தர்ப்பணம், திதி
இராமேசுவரம் இராமநாதர் கோயிலில் மஹாளயா அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை, போன்ற நாட்களில் கடலில் குளிக்கவும் தர்ப்பணம் செய்யவும் பக்தர்கள் மிகுதியாக வருகின்றனர். அமாவாசை நாட்களில் பித்ரு தோஷ நிவர்த்தி க்காக இங்கு வந்து ஏராளமானோர் இறைவனை வணங்குகின்றனர்.
காசி இராமேசுவரம் இணைப்பு
காசிக்குப் புனித யாத்திரை செல்கின்றவர்கள் இராமேஸ்வரம் வந்து இராமநாதரை வழிபட்டால் மட்டுமே காசியாத்திரை பூரணமடையும். எனவே அவர்கள் காசியில் இருந்து நேரடியாக இராமேஸ்வரம் வந்து வணங்கி பின்பு தங்களின் வீடுகளுக்கு செல்கின்றனர்.
பித்ரு தோஷம், நாகதோஷம், புத்ரா தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து நிவாரணம் பெறலாம். பூஜை, வழிபாடுகள் அனைத்தும் மற்ற சிவன் கோயில்களில் இருப்பது போலவே இங்கேயும் உள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |