வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நடைதிறக்கப்படும் கோயில்
1.அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,செட்டிகுளம்
பெரம்பலூரில் நாம் அதிகப்படியான சிவன் கோயில்களை பார்க்க முடியும்.அப்படியாக அங்கு மிகவும் சிறப்பு பெற்ற ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் பற்றி பார்ப்போம்.இங்குள்ள இறைவனின் திருநாமம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி.
இறைவியின் திருப்பெயர் காமாட்சியம்மன்.செட்டிகுளம் ஊரின் ஊரின் கீழ்புறம் மலையின் மீது இயறக்கை சூழல் அமர்ந்து அருள்பாலிக்கிறார் அருள்மிகு தண்டாயுதபாணி .இப்பொழுது இவரின் வரலாற்றையும் சிறப்பையும் பற்றி பார்ப்போம்.
இக்கோயிலில் முக்கிய சிறப்பு என்னவென்றால் அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில் கிழக்கு நோக்கியும், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலையின் மீது தன் தந்தையை பார்த்து மேற்கு நோக்கியும் காட்சி கொடுப்பது தான்.
இறைவன் மீது சூரியன் ஒளி படுவது பார்ப்பதற்கே பிரமிப்பாகவும் இறை அனுபவமாகவும் இருக்கு.அந்த வகையில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சுவாமியின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலைநேர கதிரவனின் ஒளி விழும் இந்த ஒளியானது சுவாமி மீதிருந்து நகர்ந்து சற்று நேரத்தில் அம்பாள் மீது ஒளிப்படும்.
அதே சூரியன் தண்டாயுத சுவாமி மீது மாசி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் சூரியன் மறையும்போது ஒளிக்கதிர்கள் விழும் வகையிலும்,இந்த கோயில் அமைக்க பெற்று இருப்பது அனைவரின் கவனைத்தையும் ஈர்க்கிறது.
மேலும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் அம்பாள் சன்னதிக்கு எதிரில் செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு குபேரன் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இந்த சன்னதியில் பக்தர்களுக்கு பச்சை குங்குமம் பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது வேறு எந்த திருக்கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.
அதுமட்டும் அல்லாமல் 12 ராசிகளுக்கும் குபேரன் ஓம் வடிவில் ஆலய தூண்களில் அமைந்துள்ளனர். குபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்வது சிறப்பு. இதன் மூலம் குபேர சம்பத்துக்கு வழிகாட்டும் தளமாக இது திகழ்கின்றது. குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு சிமர்சையாக நடைபெற்று வருகிறது.
வழிபாட்டு நேரம்
காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 7.30 மணி வரை.
2.அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் செட்டிகுளம்
செட்டிகுளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலாக பாலா தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்து இருக்கிறது.இங்கு மூலவர் முருகப்பெருமான் தலையில் முடியுடன் செங்கரும்பை ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தல மூலவரான தண்டாயுதபாணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மாசி மாதத்தின் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சூரியன் மறையும்போது சூரிய ஒளியானது சுவாமி மீது விழும் காட்சி கண்கொள்ளாதது. அப்போது சூரிய அஸ்தமனமானது சுவாமியின் பாதத்திலிருந்து முகம் வரை தொடர்ச்சியாக விழுந்து கொண்டே வருவது மிகவும் சிறப்பம்சமாகும்.
பொதுவாக தண்டாயுதபாணி கடவுள் என்றால் மொட்டையாண்டியாக இருப்பார். ஆனால் இங்குள்ள தண்டாயுதபாணி கடவுள் தலையில் முடியுடன் மிக அழகாக காட்சி தருகிறார்.
மேலும் தண்டாயுதபாணி 4 அடி உயரத்தில், கையில் 11 கணுக்களுடைய செங்கரும்பை ஏந்தியபடி காட்சி தருகிறார். இது வேறு எந்த முருகன் தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.
அலங்காரத்தின்போது மட்டும் இவருக்கு வேல், சேவல் கொடி ஆகியவற்றை வைக்கின்றனர். பொதுவாக அனைத்து கோயில்களிலும் ஒருநாள் மட்டும்தான் திருக்கல்யாணம் நடைபெறும். ஆனால் இத்தலத்தில் ஒரே திருவிழாவில் ஒருநாள் விட்டு மறுநாள் என மூன்று முறை திருமணம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தல முருகப்பெருமான் பழனியில் இருப்பதைப் போன்று இத்தலத்திலும் மலைமீது தண்டாயுதபாணியாக காட்சி தருவதால் இத்தலம் வடபழனி எனவும் வழங்கப்படுகிறது.
வழிபாட்டு நேரம் காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை
3.அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்,சிறுவாச்சூர்
பொதுவாக கடவுள்களில் பெண் தெய்வங்கள் என்றாலே மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக கருதப்படுகிறது.அதிலும் அருள்மிகு மதுரகாளியம்மன்மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இவ்வூர் மக்களால் கொண்டாடப்படுகிறது.
இக்கோயிலில் மதுரகாளியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மதுரகாளியம்மன் கோயிலுக்கு நேர் வடக்காகச் சோலை முத்தையா கோயில் அமைந்துள்ளது. இவரே செல்லியம்மன் மற்றும் மதுரகாளியம்மனின் காவல் தெய்வமாக விளங்குபவர்.
இவர் அருகிலேயே அகோர வீரபத்திரர் நிற்கிறார்.சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்பு படுத்தி இங்குஅம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இக்கோயில் பிற கோயில்கள் போல் அல்லாமல் வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே இக்கோயில் திறந்திருக்கும்.
மற்ற நாட்களில் அம்மன் அருகிலிருக்கும் மலையில் வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை. இங்கு பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது இங்கு முக்கிய நேர்த்திக் கடனாகக் கருதப்படுகின்றது.
இந்த மாவிளக்கிற்கான மாவை பக்தர்கள் அவரவர் வீடுகளிலிருந்து கொண்டுவரும் அரிசியை இங்கு தண்ணீரில் ஊறவைத்து, அதற்கென்றே வைக்கப்பட்டுள்ள உரல்களில் இடித்து மாவாக்குகிறார்கள்.
மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி, செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமி மலை கோவில் திசையை நோக்கி தீபாராதனையை காட்டியபிறகே, மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவது வழக்கம். மதுரகாளியம்மன் கோவிலில் எந்த திருவிழா நடந்தாலும், முதல் மரியாதை செல்லியம்மனுக்குத்தான் கொடுக்கப்படுவது வழக்கமாக கொண்டு உள்ளனர்.
வழிபாட்டு நாட்கள் மற்றும் நேரம்
மதுரகாளியம்மன் திருக்கோயில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளிலும் மட்டும் காலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். கோயில் நடை திறந்திருக்கும்.
4.அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் கோவில் திருக்கோயில்,பெரம்பலூர்
பெரும்பலூரை சுற்றிலும் அதிக சிவன் கோயில்கள் உண்டு.எல்லாம் தொன்மை வாய்ந்த மிகவும் சிறப்பு பெற்ற கோயில்களாகும்.அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் மிக முக்கியமான சிவாலயங்களாக பஞ்சநதீஸ்வரர் கோவில் அமைய பெற்று இருக்கிறது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 12, 13, 14 ஆகிய தினங்களில் சூரிய உதய நேரத்தில், இறைவனின் கர்ப்ப கிரகத்தில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்கிறது. சூரிய பகவான் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபெற்றதாக சொல்லப்படுகிறது.ஐந்து ஆறுகள் சூழ்ந்த பகுதியில் இருப்பவர் என்பதால் திருவையாறு தலத்தில் உள்ள இறைவனின் திருநாமம் ‘ஐயாறப்பர்’ என்றானது.
அந்த இறைவனின் அருளாசியால் உருவான ஆலயம் என்பதால் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனும் அதே பொருள்படும் படியாக ‘பஞ்சநதீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி என்பதாகும்.அதாவது அறம் வளர்த்த நாயகி என்பது அன்னையின் திருப்பெயர். கேட்ட வரங்களைத் தரும் கருணைத் தாயாக இந்த அன்னை காட்சியளிக்கிறாள்.
இங்கு கல்யாண விநாயகர், சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர், சூரியன், சந்திரன், 63 நாயன்மார்கள், நால்வர், பஞ்சலிங்கம், பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, 7 அடி உயர கம்பீர கணபதி, ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 12 கைகளுடன் கூடிய முருகப்பெருமான், விஸ்வநாதர், விசாலாட்சி, விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர் - சிவகாம சுந்தரி, பைரவர், நவக்கிரகங்கள் போன்ற திருமேனிகள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
பைரவர் சக்தி மிக்க தெய்வங்களில் ஒருவர் ஆவார். இத்தல கால பைரவருக்கு 11 வாரம் முறைப்படி சகஸ்ரநாம வழிபாடும், விஷ்ணு துர்க்கைக்கு 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வழிபாடும் செய்தால் ராகு- கேது தோஷங்கள் அகலும். மேலும் திருமண தடை நீங்கும்.
மனதில் சஞ்சலங்கள் மறையும். மன பயம் விலகும், திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
வழிபாட்டு நேரம்
காலை 7 மணி முதல் 10 வரை மாலை 5 மணி முதல் 9 மணி வரை
5.அருள்மிகு மதனகோபால சுவாமி கோயில்,பெரம்பலூர்
இது பெரும்பலூரிலே அமைய பெற்ற சிறப்பு வாய்ந்த வைணவ கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக மதனகோபால சுவாமியும் இறைவி மரகதவல்லித் தாயாரும் இருக்கின்றனர். தாயார் தனி சன்னதியில் வலப்புறத்தில் காணப்படுகிறார்.
கோயிலின் மரங்கள் நந்தியாவட்டை மற்றும் வில்வம் ஆகும். ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு கோயில் அமைய பெற்று இருக்கிறது.கோயிலுக்கு முன்பாக கருடஸ்தம்பத்தில் அனுமார் காணப்படுகிறார்.
முகப்பு மண்டபத்தை அடுத்து ஜெய, விஜயர்கள் உள்ளனர். தும்பிக்கை ஆழ்வார் தொடங்கி அனைத்து ஆழ்வார்களும் காணப்படுகின்றனர்.
ஹயக்ரீவர், பாமா ருக்மணியுடன் வேணுகோபாலர், நரசிம்மர், ஆண்டாள், தன்வந்திரி, ஸ்ரீனிவாசர், அலமேலுமங்கைத் தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், கோதண்டராமர், கஜலட்சுமி, கூத்தனூர் சரசுவதி ஆகியோர் உள்ளனர். அனுமார் சன்னதியின் மேல் அவரது தந்தையான வாயுவின் வாகனமான மான் உள்ளது.
வழிபாட்டு நேரம்
காலை 6.30 மணி முதல் 12.30 வரை மாலை 4.30 மணி முதல் 9 மணி வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |