2026: கார்த்திகை தீபத்தன்று பழனி மலைக்கோவிலுக்குச் செல்ல புதிய கட்டுப்பாடுகள்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இந்த 2026 ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 17ஆம் தேதி அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா திருக்கார்த்திகை தீப திருநாளான நவம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவில் முக்கிய மற்றும் நிறைவு நாளான நவம்பர் 24ஆம் தேதி பழனி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களுக்கு சில முக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

பழனி திருக்கார்த்திகை தீபம் 2026 :
நாளை நவம்பர் 24ஆம் தேதி மாலை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு விழா பூஜையும் அதனை தொடர்ந்து சின்ன குமார் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து யாகசாலை தீபாரதனை மலை கோவிலில் நான்கு மூலைகளிலும் தீபம் வைக்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெறும். அதனை அடுத்து இன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகர் அர்ச்சனை நடைபெறும்.
அதோடு, நவம்பர் 24 திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே நடைதிறக்கப்பட்டு "விஸ்வரூப தரிசனம்" நடைபெறும்.
மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் சொக்கப்பனை ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து திரு ஆவினன்குடி மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களிலும் தீபம் ஏற்றப்படும்.
படிப்பாதை அடைப்பு :
பழனி மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு செல்ல ரோப் கார் வின்ச் சேவை இருந்தாலும் சில பக்தர்கள் படிகள் வழியாக மலையேறி சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சிலர் வேண்டுதலுக்காகவும் படி ஏறி செல்வது உண்டு.
அப்படியாக, பழனி மலை கோவிலை அடைய சுமார் 690 படிகள் ஏறி செல்ல வேண்டும். இந்த ரோப் கார், வின்ச் சேவை நிறுத்தப்படும் நாட்களில் அதிக அளவிலான பக்தர்கள் படிப்பாதை வழியாகவே ஏறி சென்று முருகப்பெருமானை தரிசிப்பது வழக்கம்.
இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நாளை மதியம் 2 மணி அளவில் முதல் பக்தர்கள் படிப்பபாதை வழியாக செல்ல அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவித்திருக்கிறார்கள்.

அதாவது பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மலைக் கோவிலுக்கு செல்லக்கூடிய படி பாதை தற்காலிகமாக அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு தங்கத்தேர் புறப்பாடு இருக்காது என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
பிறகு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 24ஆம் தேதி ஆன நாளை சிறப்பு பூஜைகள் நடைபெற இருப்பதால் வழக்கமான வழிபாடு மற்றும் தரிசன நேரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதனால் இந்த மாற்றங்களை அறிந்து கொண்டு பக்தர்கள் பழனிக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவது அவர்களுக்கு கடைசி நிமிட சில சிரமங்களை குறைக்கும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்து இருக்கிறார்கள்.
பக்தர்களுக்கான பிற கட்டுப்பாடுகள் :
மலைக்கோவில் பகுதிகளில் மொபைல் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் இருக்கிறது. இதன் காரணமாக படிகள், ரோப் கார் மற்றும் வின்ச் நிலையங்களுக்கு அருகில் உள்ள வைப்பு மையங்களில் மொபைல் போனை ஒப்படைத்துவிட்டு செல்லலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் முடிந்த அளவிற்கு காலை நேரங்களிலே சுவாமி தரிசனம் செய்து கொள்வதும் நல்லது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |