பங்குனி மாதத்தில் இந்த முக்கிய விசேஷங்களை தவற விடாதீர்கள்
தமிழ் மாதத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் மிகவும் விஷேசமான மாதம் ஆகும். மேலும், பங்குனி மாதத்தை வசந்தகாலம் என்று அழைப்பார்கள். பங்குனி மாதத்தில் நிறைய தெய்வங்களுடைய திருமணங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பங்குனி மாதத்தில் தான் ராம நவமி, கடவுள்களின் பங்குனி உத்திரம் என்று பல்வேறு நிகழ்வுகள் நிகழ்கின்றன. அப்படியாக, நாம் பங்குனி மாதத்தில் தவற விடக்கூடாத முக்கியமான விஷேசங்கள் பற்றி பார்ப்போம்.
18.3.2025 (பங்குனி 04) காரைக்கால் அம்மையார் குருபூஜை :
63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரை, ஈசனே அம்மையே என அழைக்கப்பட்ட பெருமை அவர்களையே சேரும். அம்மையார் தனது பக்தியின் மூலமும், பாடல்கள் மூலமும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியவர்.
ஐயன் வீற்றியிருக்கும் மலையை தான் கால்களால் செல்வது ஆகாது என்று எண்ணி, கைகளால் நடந்து கயிலை சென்று இறைவனைத் தரிசித்த காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை, பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது.
25.03.2025 (பங்குனி 11) பாபமோசனி ஏகாதசி:
நாம் செய்த பாவங்களை போக்கும் பண்டிகையாக பாபமோசனி ஏகாதசி திகழ்கிறது. இதை பாவத்தை அழிக்கும் ஏகாதசி என்றும் அழைப்பார்கள். மனிதனாக பிறந்தால் கண்டிப்பதாக ஏதேனும் சூழ்நிலையில் தெரியாமல் சிறு தவறுகளும், பாவங்களும் செய்ய நேரிடும்.
இறக்கும் முன் அந்த பாவத்தை கழிக்க இந்த நாளில் விரதம் இருந்து வழிபட மனத்தூய்மை பெற்று இறைவன் அருள் கிடைக்கும்.
29.03.2025 (பங்குனி 15) சர்வ அமாவாசை :
இறந்த முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் அமாவாசை. அன்று புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பாவங்கள் அனைத்தும் விலகி சகல நன்மைகளும் வந்து சேரும்.
30.03.2025 (பங்குனி 16) உகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு) :
தெலுங்கு பேசும் நபர்களுக்காக கொண்டாடப்படும் பண்டிகை இது. இப்பண்டிகை நான்கு நவராத்திரிகளுள் ஒன்றான வசந்தநவராத்திரியும் யுகாதி அன்று தான் தொடங்குகிறது. இந்த வசந்த நவராத்திரி காலத்தில் அம்மனை வழிபடுவது வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலக செய்யும்.
(30.03.2025 - 07.04.2025) வசந்த நவராத்திரி (பங்குனி 16 -24)
இந்த வருடம், வசந்த நவராத்திரி வருகின்ற மார்ச் 30, 2025, தொடங்கி ஏப்ரல் 7, 2025 வரை உள்ளது. வசந்த நவராத்திரி 2025 இந்துக்களுக்கு மங்களகரமான சடங்கு மற்றும் தெய்வத்திடம் ஆசீர்வாதம் பெற சிறந்த நேரம் என்று நம்பப்படுகிறது.
06.04.2025 (பங்குனி 23) ஸ்ரீராம நவமி :
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை ராமநவமி. அதாவது ராமபிரான் அவதரித்த புண்ணிய தினமே ஸ்ரீ ராம நவமி ஆகும். பூவுலகில் தீமையை அழிக்கவும், சரணாகதித் தத்துவத்தின் மகிமையை விளக்கவும் மகாவிஷ்ணு மண்ணுலகில் ராமனாக வந்து அவதரித்தார்.
அன்றைய நாளில் விரதமிருந்து பானகம், நீர்மோர் ஆகியன படைத்து ராமபிரானை வழிபட்டால் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
08.04.2025 (பங்குனி 25) காமதா ஏகாதசி:
'காமதா' என்ற சொல் 'ஆசைகளை நிறைவேற்றுதல்' என்பதைக் குறிக்கிறது, எனவே, காமதா ஏகாதசி அனைத்து உலக ஆசைகளையும் நிறைவேற்றும் ஒரு ஆன்மீக அனுசரிப்பு என்று நம்பப்படுகிறது. காமதா ஏகாதசியின் முக்கியத்துவம் பல இந்து வேதங்கள் மற்றும் 'வராஹ புராணம்' போன்ற புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
11.04.2025(பங்குனி 28) பங்குனி உத்திரம் :
12வது மாதமான பங்குனி பௌர்ணமியுடன் 12வது நட்சத்திரமான உத்திரம் இணையும் புண்ணிய நாளே பங்குனி உத்திரம். பங்குனி உத்திரத்தில்தான் சிவன் - பார்வதி, முருகன் - தெய்வானை, ராமன் சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
அன்றைய தினம் இறை வழிபாட்டிக்கரு உரிய முக்கிய தினம் ஆகும். மேலும், இந்த நாளில் குலதெய்வம் வழிபாடு செய்வது குடும்பங்களுக்கு நல்ல பலன் வழங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |