கோரிக்கை நிறைவேற அரச இலை வழிபாடு
நம்முடைய இந்து சமுதாயத்தில் தெய்வங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு மரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்வோம்.
அதனால்தான் ஒவ்வொரு கோவிலிலும் தலவிருட்சம் என்று ஒரு மரத்தை வைத்து அதற்கு தெய்வத்திற்கு இணையாக பூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது. இன்னும் சில பேரோ தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய வேப்ப மரத்தை அம்மனாக பாவித்து வழிபாடு செய்வார்கள்.
அதே போல் துளசிச் செடியையும் மகாலட்சுமி தாயாராக நினைத்து வழிபாடும் செய்வோம். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அரச மர இலையை வைத்து எந்த முறையில் விநாயகரை வழிபட நாம் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
ஒருவருக்கு பல தேவைகள் இருக்கும். குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றோ, படித்த படிப்பிற்குரிய வேலை கிடைக்க வேண்டும் என்றோ, வேலையில் பதவி உயர்வு இருக்க வேண்டும் என்றோ, சம்பள உயர்வு இருக்க வேண்டும் என்றோ, தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றோ, கடன் தீர வேண்டும் என்றோ, செல்வம் அதிகரிக்க வேண்டும் என்றோ பல தேவைகள் இருக்கும்.
அந்த தேவைகள் நியாயமான தேவைகளாக இருக்கும் பட்சத்தில் அரச மரத்தடி விநாயகருக்கு அரச இலையை வைத்து எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
முதலில் அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடி விநாயகர் கோவிலாக பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த அரச மரத்தில் இருந்து 108 இலைகளை கைகளாலேயே பறித்து அதை சுத்தம் செய்து, அதில் ஒரு பேனாவை வைத்து உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை 108 இலைகளிலும் எழுத வேண்டும்.
உதாரணமாக வேலை கிடைக்க வேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும், தொழில் லாபகரமாக நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், திருமணம் நடைபெற வேண்டும் என்று உங்களுடைய கோரிக்கை என்னவோ அந்த கோரிக்கையை 108 இலைகளிலும் எழுதி விநாயகருக்கு முன்பாக வரிசையாக வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அந்த இலைகளுக்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒவ்வொரு இலைக்கு மேலும் கொட்டை பாக்கை வைத்து ஐந்து நிமிடம் விநாயகப் பெருமானுக்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய கோரிக்கையை மனதார விநாயகப் பெருமானிடம் கூற வேண்டும்.
பிறகு ஒரு நூலால் இந்த இலைகளை சுருட்டி வெற்றிலை மாலை கட்டுவது போல் கட்டி விநாயகப் பெருமானுக்கு சாற்ற வேண்டும். இந்த வழிபாட்டை ஒரே ஒரு முறை செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு கோரிக்கைக்கும் 108 இவைகள் என்ற வீதத்தில் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இப்படி மாலையாக அணிவித்துவிட்டு விநாயகப் பெருமானை 27 முறை சுற்றி வந்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |