திருமண தடையை அகற்றும் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் சுவாமி
புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் கோயில் பலவகையான பெருமைகளை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. பல பழம் பெருமைகளை கொண்டு திகழும் இந்த கோயிலின் வரலாற்றையும் சிறப்புகளையும் இப்போது விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
தல வரலாறு :
புதுச்சேரியின் முக்கிய பகுதியாக சாரம் விளங்குகிறது. இந்தப் பகுதி மக்களின் காவல் தெய்வமாக நாகமுத்து மாரியம்மன் திகழ்கிறார். பழங்காலத்து பூங்குளமும், பூந்தோட்டமும் கோயிலின் பழமைக்கு சான்றாக உள்ளன. 1880-ம் ஆண்டுவாக்கில் இந்த கோயிலுக்கு எதிரில் சற்று தொலைவில் அரசமரத்தடி விநாயகரையும் இந்தப் பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
இவரை பக்தர்கள் ‘முத்து விநாயகர்’ எனவும் அழைத்துள்ளனர். தேவனூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சனி வீராசாமி பிள்ளை என்பவர் 1907-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் வசித்து வந்துள்ளார். முருகப்பெருமான் மீது கொண்ட தீவிர பக்தியின் காரணமாக, விநாயகருக்கு அருகில், முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்ய விரும்பினார் வீரசாமி பிள்ளை.
சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிலை வடிவங்களை செய்து, அதனை முத்துவிநாயகரின் பின்புறம் அமைத்து முருகப்பெருமானுக்கென ஒரு கோயில் எழுப்பியுள்ளார்.
அதோடு தேவனூரில் உள்ள தனக்கு சொந்தமான இருபது காணி நிலத்தையும் கோயிலுக்கு தானமாக எழுதி வைத்தார் வீரசாமி பிள்ளை. 1907-ல் தொடங்கிய கோயில் திருப்பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்தது.
1909-ம் ஆண்டு முத்து விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட மூர்த்தங்களோடு குடமுழுக்கு விழா இனிதே நடந்து முடிந்தது. சனி வீராசாமியின் ஈடுபாட்டினால் உந்தப்பட்ட அவரது நண்பர் நாராயணசாமி என்பவர், புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் தனது 23 காணி நிலத்தையும் முருகப்பெருமான் கோயிலுக்கு தானமாக வழங்கினார்.
இப்படி ஒவ்வொருவராக தானம் செய்ய, கோயில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. 1987-ல் பதினாறு அடி உயர சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, 2001-ல் வைத்தீஸ்வரன், தையல் நாயகி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், ஐயப்பன் சன்னிதிகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கும் இனிதாக நடந்தது.
தல அமைப்பு :
கோயிலின் பெயரால் வழங்கப்படும் சுப்பிரமணியர் கோயில் வீதியில், கிழக்கு முகமாக மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், முத்து விநாயகர் பொலிவுறு தோற்றத்துடன் நம்மை வரவேற்கிறார்.
கருவறை விமானத்தின் கிழக்கில் சரஸ்வதி மற்றும் லட்சுமியுடன் விநாயகர், தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத விஷ்ணு, வடக்கில் பிரம்மா ஆகியோர் சுதைச் சிற்பங்களாக அமைந்திருக்க, அதன் அடிப்பகுதியில் துர்க்கை, கோஷ்ட தெய்வமாக காட்சியளிக்கிறார்.
கருவறையின் இடது பின்புறமும் முருகப்பெருமான் சன்னதி அமைந்துள்ளது. சிறிய கொடிமரம், பலிபீடம், மயில் இவற்றைக் கடந்ததும், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் எளிய வடிவில், இரண்டரை அடி உயரத்தில் புதுப்பொலிவுடன் அருளாசி வழங்குகிறார்.
நான்கு கரங்களோடு காட்சி தரும் முருகப்பெருமான், மேல் இரண்டு கரங்களில் சூலம், வஜ்ராயுதம் தாங்கியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத முத்திரைகளோடும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பின்புறம் வடக்கு நோக்கிய அசுரமயில் எழிலாக அமைந்துள்ளது.
கருவறை விமானத்தின் முன்புறம் வள்ளி- தெய்வானையுடனும், வடக்கில் சுவாமிமலை உபதேச காட்சி, மேற்கில் பழனி தண்டாயுதபாணி காட்சி, தெற்கில் அன்னையிடம் சக்திவேல் வாங்கும் காட்சி ஆகியவை சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
முத்துவிநாயகரும், சுப்பிரமணியரும் பிரதான சன்னதி களில் விளங்க, வைத்தீஸ்வரன், தையல் நாயகி, தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் சன்னதிகள் நேர்த்தியாக அமைந்துள்ளன. ஐயப்பன் சன்னதி அருகே உற்சவ மூர்த்திகள் மண்டபம் அமைந்துள்ளது.
முருகப்பெருமான் சன்னதியின் பின்புறம், தலமரமான வன்னிமரம் செழித்தும், பசுமையாகவும் வளர்ந்திருக்க, அதன் அடியில் சனி பகவான் நின்ற கோலத்தில் மேற்கு முகமாய்க் காட்சி அளிக்கிறர். இத்தலத்தில் பழமையான ஐம்பொன் சிலைகளாக விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், நாகமுத்து மாரியம்மன் ஆகியோர் சிலைகள் அமைந்துள்ளன. அண்மையில் உருவான நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் வடிவங்களும் இடம் பெற்றுள்ளன.
தல அமைவிடம் :
புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி நகரில் சாரம் பகுதியில் சுப்பிரமணியர் கோயில் வீதி, மாரியம்மன் கோயில் வீதிகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. புதிய பேருந்து நிலையத்திற்கு வடமேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. இத்திருக்கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதியும் உள்ளது.
திருவிழாக்கள்:
விநாயகர் சதுர்த்தி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை தீபம், நவராத்திரி, பங்குனி உத்திரம், கிருத்திகை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் சஷ்டி விழாவாக பதினோரு நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன.
இதில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவத்தில் எட்டு நாட்களும், தை, கார்த்திகை, ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத்திலும் முருகன் வீதியுலா வருகிறார். மாசி மகத்தில் மயிலம் முருகனை வரவேற்று உபசரித்தல், நூற்றாண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது.
நாகமுத்து, மாரியம்மனுக்கு ஆடி வெள்ளிக் கிழமைகளில் விழாவும், நவராத்திரியில் விழாவும், அதில் ஒருநாள் அம்பு போடும் விழாவும் நடத்தப்படுகிறது. ஆடிப்பூரம் மற்றும் சித்திரை ஒன்றிலும் வீதியுலா நடத்தப்படுகிறது.
தல சிறப்புகள்:
கோயிலில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் தன்னை நாடி வரும் அடியார்களின் குறை தீர்க்கும் குணாளனாக திகழ்கிறார். குறிப்பாக, சஷ்டியில் விரதம் இருந்து வழிபடுவோருக்கு திருமண தடைகள் விலகுகிறது. குழந்தை வேண்டி வருவோர் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.
கோயில் பராமரிப்பு:
கோயில் நிர்வாகத்தை புதுச்சேரி மாநில அரசின் இந்து அறநிலையத்துறை கவனித்து வருகிறது. கோயிலானது முத்து விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், நாகமுத்து மாரியம்மன் கோயில் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
வழிபாட்டு நேரம்:
இங்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







