திங்கட்கிழமைகளில் மட்டும் இரவில் நடை திறக்கப்பட்டு நள்ளிரவில் நடை சாத்தப்படும் கோயில்
தமிழகத்தின் பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டையில் புகழ்பெற்ற பெற்ற பொது ஆவுடையார் கோயில் அமைந்துள்ளது.இங்கு தவம் புரிந்த முனிவர்களுக்கு வெள்ளால மரத்தின் கீழ் சிவபெருமான் அருள் காட்சி தந்து, அவர்களுக்கு பொதுவான தீர்ப்பு வழங்கிய பின்னர் அந்த மரத்திலேயே ஐக்கியமானதாக வரலாறு கூறுகிறது. இத்தகு சிறப்பு மிக்க பொது ஆவுடையார் கோயிலின் முழு வரலாற்றையும் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
தல வரலாறு:
இல்லறத்தில் இருந்து சிவநெறியை கடைபிடித்த முனிவர் வானுகோபர், துறவறத்தின் மூலம் சிவநெறியை கடைபிடித்தவர் மகாகோபர். இவர்கள் இருவரும் தங்களுடைய சிவநெறியே சிறந்தது என வாதிட்டனர்.
இல்லறமே சிறந்தது என வானுகோபர் முழங்க, துறவறமே சிறந்தது என மகாகோபர் முழங்கினார். இறைவனை அடைய சிறந்த வழி இல்லறமா? துறவறமா? என்ற பெரும் வாக்குவாதம் இவர்கள் இருவரும் இடையிலும் வலுவாக நடைபெற்றது.
இதற்கு சரியான பதிலை நாடி இந்திரனிடம் சென்றனர். 'முனிவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது' என்று பதறிய இந்திரன், ''தில்லையம்பலத்தானிடம் கேளுங்கள்.. தக்க பதில் கிடைக்கும்'' என்றான். அதன்படி இரண்டு முனிவர்களும் சிதம்பரத்துக்குச் சென்று, சிவனாரைப் பணிந்து இவர்களின் கேள்விக்கான பதிலை கேட்டனர்.
அதற்கு அவரோ, “தில்லைக்குத் தென் திசையில் நீங்கள் தவம் செய்த இடத்தில் வெள்ளால மரம் உள்ளது. அதன் அருகில் உறங்காப்புளியும் உறங்கும்புளியும் ஒருசேர தழைத்திருக்கும் பொய்கைநல்லூர் எனும் திருத்தலத்தில் தாமரைக் குளத்தின் கரையில் காத்திருங்கள்.” என அருளினார்.
அதன்படி வானுகோபரும் மகாகோபரும் அவ்விடம் சென்றடைந்தனர். உறங்காப் புளியின் கீழ் வானுகோபரும் உறங்கும் புளியின் கீழ் மகாகோபரும் அமர்ந்து ஈசனின் வரவிற்காக தவமிருந்தனர். சோமவார திங்கள்கிழமையில் திருச்சிற்றம்பலம் எனும் தில்லையில் அர்த்தஜாம பூஜைகள் நிறைவு பெற்று கோயில் நடை சாத்தப்பட்ட அடுத்த நிமிடம் முனிவர்களுக்கு எதிரே வெள்ளால மரத்தில் நடராஜ பெருமான் காட்சி அளித்தார்.
பதற்றமும் சிலிர்ப்பும் பொங்க இரண்டு முனிவர்களும் இறைவனை வணங்கினர். அவர்களிடம் சிவபெருமான் ''இல்லறமாக இருந்தாலென்ன... துறவறம் பூண்டால் என்ன? நெறிமுறை பிறழாமல், உண்மையும் ஒருமித்த மனமும் கொண்டு வாழ்ந்தால் என்னை அடைவது எளிது! இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்பு.
இதில் உயர்வு தாழ்வுக்கு இடமே இல்லை. இரண்டும் இணையானதே!'' என அருளினார். இப்படி இரண்டு பேருக்கும் பொதுவாக பதில் உரைத்ததால், பொதுஆவுடையார் என்றும், இரண்டு பேருக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்ப்பு சொல்லியதால், ஸ்ரீமத்தியபுரீஸ்வரர் என்னும் திருநாமமும்அமைந்தது.
சிறப்பான பதிலை அருளிய சிவபெருமானிடம் இருவரும் ஒருசேர ''தாங்கள் இங்கிருந்தபடி அருள வேண்டும்'' என வேண்ட, ''அப்படியே ஆகட்டும்'' என்ற ஆடல்வல்லான், அந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார் எனக் கூறுகிறது வரலாறு.
தல அமைப்பு:
கோயிலின் முகப்பில் அழகான பித்தளை தகட்டினால் செய்யப்பட்ட தோரண வாயிலில் இறை வடிவங்கள் சித்திர வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கின்றன.
மரத்தின் முழுவடிவமும் தெரியாதவாறு வெள்ளைத் திரையிட்டு மறைக்கப்பட்ட நிலையில் திருவாட்சி ஒளி செய்ய, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமானின் திருமுகம் “லிங்கம்” போன்ற வடிவத்தைக் காட்டி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. நிலைப்படியும், திருக்கதவும் பித்தளை தகடுகளால் அழகுபடுத்தப்பட்டு ஒளி வீசுகின்றன. அதன் எதிரே நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார்.
தல சிறப்புகள்:
அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நள்ளிரவில் நடராஜர் இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும், நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விமரிசையாக பூஜைகள் நடைபெறும். சிவபெருமான் அதாவது நடராஜ பெருமாள் பகலில் சிதம்பரத்தில் இருப்பதால் இந்த கோயில் நடை திறக்கப்படுவதில்லை.
திங்கட்கிழமைகளில் மட்டும் இரவில் நடை திறக்கப்பட்டு நள்ளிரவில் நடை சாத்தப்படுகிறது. பகலில் நடை திறக்கப்படுவதில்லை. எனவே, திங்கட்கிழமை அன்று பக்தர்கள், இங்கே திரளாக குவிகின்றனர். அம்பாளுக்கு என இங்கே சன்னதி இல்லை. திங்கள்கிழமைகளில் இரவில் திறக்கப்படும் இந்த கோயிலின் நடை வருடத்தில் ஒருநாள் மட்டும் பகலில் திறக்கப்படுகிறது.
அந்த நாளில் சுவாமிக்கு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. அன்றைய நாளில் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலை கடலென இங்கு திரண்டு வருகின்றனர். அந்த நாள் எந்த நாள் தெரியுமா. தை திருநாளாம் பொங்கலே.
இங்கு வசிக்கும் சுற்றுவட்டார மக்களுக்கு இஷ்ட தெய்வம், குல தெய்வம், காவல் தெய்வம் எல்லாமே பொதுஆவுடையாரே. இவரை மனதார வேண்டி நிலத்தில் விதைத்தால், அமோக விளைச்சல் உறுதி என மக்கள் உறுதிபட நம்புகின்றனர்.
இவரை வேண்டிக் கொண்டு, நகைக்கடை, பேக்கரி, துணிக்கடை என எந்த வியாபாரம் துவங்கினாலும் லாபம் நிச்சயம். கார்த்திகை சோமவாரத்தின்போது பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, பயிறு, எள் முதலிய அனைத்து தானியங்களையும், வீட்டு உபயோகப்பொருட்கள், வஸ்திரங்கள் முதல் எளிய தவிட்டில் (நெல் உமி) இருந்து தங்கக்காசு வரையிலும் அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இவ்வாறு கோயிலுக்கு செலுத்தப்படும் காணிக்கைகள் பெறுவதற்காகவே, பிரம்மாண்டமான பந்தல்கள் அன்றைய தினம் போடப்படுகின்றது.
திருவிழாக்கள்:
சோமவாரவழிபாடு கார்மேகம் திரண்டு வந்து கனமழைப் பொழியும் கார்த்திகை மாதம் தான் இந்த ஆலயத்தின் திருவிழாக் காலமாகும். கார்த்திகை மாதத் திங்கட்கிழமை (சோமவாரம்) ஒவ்வொன்றும் சிறப்பு வழிபாட்டிற்கு உரிய நாட்கள் ஆகும்.
சோமவார திருவிழாக்காலங்களில் முடிகாணிக்கை, மா விளக்கு போடுதல் என பல்வேறு வகைகளில் தங்களது நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். ஒவ்வொரு சோமவாரத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுவர்.
கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.
அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவற்றில் ஆன பொருட்கள், பணம், நெல், துவரை, உளுந்து, பயறு, எள் முதலிய நவதானியங்களையும், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய்கறிகள் போன்ற பல்வேறு பொருட்களையும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.
வழிபாடு:
பகல் நேரத்தில் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதை அறிந்திருந்தும், பெருந்திரளாக வரும் பக்தர்கள் கருவறை கதவிலேயே மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து அபிஷேகம், அர்ச்சனை முதலிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி செல்கின்றனர்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நள்ளிரவு 12 மணிக்கு மட்டும் நடை திறக்கப்பட்டு சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. வருடத்தில் தைப்பொங்கல் அன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரை என நாள் முழுவதும் நடை திறக்கப்பட்டிருக்கும். நள்ளிரவு பூஜைகள், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே முழுத் தரிசனம், போன்ற மரபுசார்ந்த வழிபாட்டு முறைகள் கோயிலிம் ஆன்மிக மகத்துவத்தையும், பழமையையும் பறைசாற்றுகின்றன.
பொது ஆவுடையார் கோயில் வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டும் இல்லாமல், வாழ்வின் உண்மையான தத்துவத்தையும், நடுநிலைமையின் மதிப்பையும் போதிக்கும் ஆன்மிகப் பள்ளியாகவும் திகழ்கிறது. நமது கலாச்சாரத்தின் ஒரு அரிய பொக்கிஷமாக பொது ஆவுடையார் கோயில் என்றும் நிலைத்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







