புரட்டாசி விரதம் - நோக்கும் போக்கும்
விஜயநகர சாம்ராஜ்யம் இந்தியாவில் தென்பகுதியில் விரிவடைந்த போது அவர்களின் வைணவப் பாரம்பரிய விழாக்களும் வழிபாடுகளும் தென்பகுதிக்கு அறிமுகம் ஆயின.
விஜய நகரப் பேரரசின் பிரதிநிதியாக மதுரையிலும் திருச்சியிலும் இருந்து ஆட்சி நடத்திய நாயக்க மன்னர்களும் இங்கு அவர்களின் வைணவ நெறி வழிபாடுகளைத் தொடர்ந்து கொண்டாடினர்.
புதிதாகவும் சிலவற்றைப் புகுத்தினர் புரட்டாசி சனிக்கிழமை விரதம் வைணவர்கள் பட்டினி கிடந்து பகவானை சேவிக்கும் விரதம். ஆகும்.
ராயர், மராட்டியர், நாயக்கர் போன்ற பிற மொழி மன்னர்கள் ஆண்ட தஞ்சை, திருச்சி பகுதிகளிலும் ஆந்திர, கர்நாடக, மராட்டிய வழிபாடுகள் நடைமுறைக்கு வந்தன. இவ்வாறு வந்தவை தாம் புரட்டாசி விரதம், சத்யநாராயண பூஜை போன்றவை.
திருப்பதிக்கு அருகில் உள்ள தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களிலும் இப்புரட்டாசி விரதம் தீவிரமாக கடைப் பிடிக்கப்படுகிறது. விரதம் அனுஷ்ட்டிக்காதவர் கூட அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பர்.
கலியுகத்தில் உய்ய ஒரே வழி
ஒருமுறை நாரத முனி, வெங்கடேச பெருமாளிடம் 'இக்கலி யுகத்தில் மனிதர் உய்ய என்ன வழி?' என்று கேட்டார்.
அதற்கு வெங்கடேசப் பெருமாள் 'புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று உண்ணாவிரதம் இருந்து என்னை வணங்கி பிறருக்கு தான தர்மம் செய்தால் அவர்களை கலி (சனி) புருஷனின் எந்த கஷ்டமும் தாக்காது' என்றார்.
அதன்படியே புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை சேவித்தால் சனி (கலி) பகவானின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொண்டு சுபிட்சமும் சர்வ மங்களமும் பெறலாம். எனவே இவ்விரதத்தை சர்வ மங்கள விருத்தி விரதம் என்பர்
பிரம்மோற்சவம்
பிரம்மதேவன் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை நோக்கி தவம் இருந்து வரம் பெற்ற மாதம் புரட்டாசி மாதமாகும்.
பிரம்மதேவன் செய்த வழிபாட்டின் தொடர்ச்சி தான் பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாதம் நடக்கும் பத்து நாள் திருவிழா அல்லது பிரம்மோற்சவம் ஆகும்.
உஞ்ச விருத்தி விரதம்
புரட்டாசி சனிக்கிழமை தோறும் உஞ்சவிருத்தி விரதம் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு அனுஷ்டிக்கப்பட்டது.
திருநாமம் தீட்டப்பட்ட வெண்கலச் செம்பை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று வெங்கட்ராம கோவிந்தா என்று கோவிந்தன் கோஷமிட்டு அவ்வீட்டு மகளிர் தரும் அரிசியையும் பச்சைக் காய்கறிகளையும் காசுகளையும் பிச்சை வாங்கிக்கொண்டு வருவர்.
அவற்றைக் கொண்டு சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்ற சித்திராண்டங்களைச் சமைத்து பெருமாளுக்கு வடை மாலை சாத்தி ஒரு சிலரை வீட்டிற்கு அழைத்து அன்னதானம் விட்டு மாவிளக்கு ஏற்றி துளசி தீர்த்தம் வைத்து பெருமாளை வணங்குவார்கள்.
உஞ்சவிருத்தி முடிந்து சமைத்து சாமிக்கு தளிகை இடும் வரை அந்த அந்த வீட்டில் இருப்பவர்கள் பச்சை தண்ணீர் கூட அருந்தக் கூடாது இதனால் இவ்விரதத்தை நிர் ஜல விரதம் என்று அழைப்பார்கள்.
தற்காலத்தில்
தமிழகத்தில் இப்போது உஞ்சவிருத்திக்கு யாரும் போவது இல்லை. விரதம் இருந்து தளிகை (படையல்) போடுகின்றனர்.
துளசி தீர்த்தம் குடித்து விரதத்தைத் தொடங்கவேண்டும். விரதம் இருக்கும்போது நாலாயிரத் திவ்ய பிரபந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம் விஷ்ணு புராணம் போன்றவற்றை சொலலலாம்.
ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபிக்கலாம். மதியம் எமகண்டம் வருவதற்கு முன்பே சாமிக்கு தளிகை இட்டு விட வேண்டும் அதன் பின்பு காக்கைக்கு சோறு வைக்க வேண்டும்.
காக்கை சோறு உண்டதும் வீட்டில் இருப்பவர்கள் கோவிந்தா கோஷம் போட்ட பிறகு சாப்பிடலாம். விரதம் இருப்பவர்கள் எளிய உப்பில்லாத உணவு சாப்பிட வேண்டும். .
விரதம் இருப்பவர்கள் அன்று ஒரு பொழுது உணவு மட்டுமே சாப்பிடவேண்டும். மாலையில் பெருமாள் கோவிலுக்கு போய் எள் தீபம் அல்லது நெய் தீபமிட்டு எம்பெருமானை வணங்கி வர வேண்டும். இரவு உணவு உட்கொள்ள கூடாது. துளசி திர்ட்ஜ்தம் மட்டும் குடிக்கலாம்.
ஏன் அசைவம் கூடாது?
புரட்டாசி மாதம் வான் நிகழ்வில் மிகவும் முக்கியமான மாதம் ஆகும்.
இம்மாதத்தில் சூரியன் நேர் கிழக்கில் இருந்து உதிக்கின்றான். சூரியனின் உச்சவெப்பக் கதிர்கள் பூமியைத் தாக்கும்.
சித்திரை மாதத்தின் வெப்பம் புரட்டாசி மாதத்தில் இருக்கும். காற்று இருப்பதால் வெப்பம் தெரியாது. ஆனால் புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகம் இருக்கும்.
நூறு டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகும். பூமியில் இருந்து அதிக உஷ்ணம் வெளியேறும் காலமாதலால் மனிதர்களுக்கு தோல் வறட்சி, அதிக வியர்வை, வயதானவர்களுக்கு இதயத்துடிப்பு குறைதல், ஜீரண சக்தி குறைதல் போன்ற விளைவுகள் ஏற்படும்.
புரட்டாசியில் அதிக வெப்பம் காரணமாக உண்ட உணவு ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும். அசைவ உணவுகளை உண்பதால் ஜீரண உறுப்புகள் சோர்வடையும். உண்ட உணவு ஜீரணம் ஆகாது.
நான்கு மணி நேரத்திற்குள் உணவு ஜீரணமாகவில்லை என்றால் அதுவே நோயாக மாறிவிடும். எனவே புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருப்பது உடம்புக்கு நல்லது.
கோயிலுக்குச் செல்லுதல்
புரட்டாசி மாதத்தில் திருமலை திருப்பதி கோவிலுக்கு அதிகமான வைணவ பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம்.
புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், வீட்டுக்கு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு தீவிர பக்தர்கள் தினமும் செல்வார்கள்.
மற்றவர்கள் சனிக்கிழமை அன்று செல்வார்கள் அதுவும் இயலாதவர்கள் மாதம் ஒருமுறை குறிப்பாக மூன்றாம் சனிக்கிழமை அன்று விசேஷ நாள் என்பதால் அன்றைக்கு மட்டும் சென்று பெருமாளை வணங்கி வருவர்.
ஏழைக்கு இரங்கும் எம்பிரான் வைணவத்தில் இரண்டு நெறிகள் உண்டு. ஒன்று பத்தி நெறி இன்னொன்று பிரபத்தி நெறி.
ஒரு நெறியில் மனிதன் இறைவனைப் பற்றிக் கொள்வான். அது குட்டி குரங்கு தாய்க் குரங்கின் அடிவயிற்றைப் பற்றி கொண்டு இருப்பது போல என்பர். தாய் குரங்கு எங்கு சென்றாலும் குட்டி குரங்கு தான் அதன் வயிற்றைப் பற்றி கொள்ளுமே தவிர தாய்க்குரங்கு தனது குட்டியை அழைத்துக் கொண்டு செல்லாது.
இன்னொரு நெறி இறைவன் பக்தனைப் பற்றிக் கொள்ளும் நெறியாகும். பூனை தன் குட்டியைப் பாதுகாப்பாக கொண்டு வைப்பதற்கு அதன் பின்னங்கழுத்தைப்.
பற்றித் தூக்கிச் செல்வது போல என்பர். எம்பெருமான் தனக்குப் பிரியமான பக்தர்களை ஆபத்திலிருந்து நீக்கி பாதுகாப்பான இடத்தில் வைப்பார்.
தன்னுடைய பக்தர்களுக்கு உரிய கௌரவத்தையும் மரியாதையையும் கொடுப்பதில் பெருமாளுக்கு நிகர் வேறு எந்த தெய்வமும் கிடையாது.
குயவனின் பக்தி
திருப்பதி மலை அடிவாரத்தில் பீமன் என்றொரு குயவன் தினமும் பெருமாளை தன் மனதுக்குள் சேவித்து வந்தான். அவனுக்கு மலை மீது ஏறி போய் வணங்கி வர நேரம் கிடையாது. காரணம் அவன் அந்த ஊரின் மட்பாண்டத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருந்தான்.
ஒரு நாள் அவன் நாம் மலைக்குப் போய் பெருமாளைச் சேவிப்பது இந்த ஜன்மத்தில் நடக்காது, எனவே பெருமாளை இங்கே கொண்டு வரலாம் என்று அந்த எளியவன் நினைத்தான். உடனே தான் மண்பாண்டம் செய்ய வைத்திருந்த களிமண்ணில் பெருமாளைச் செய்து வைத்தான்.
பின்பு பூசை செய்வதற்காக அவனுக்கு நந்தவனங்களில் தேடிப்போய் பூப்பறிக்க நேரம் கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம் என்று இருப்பவன் அவன், எனவே மட்பாண்டம் செய்து மிஞ்சி கிடந்த களிமண் துணுக்குகளை எடுத்து சிறிய சிறிய பூக்களாக செய்து அவற்றைக் கோர்த்து பெருமாள் கழுத்தில் மாலையாக அணிவித்தான்.
தமிழ் மன்னர் தொண்டைமான்
பெருமாளும் குயவனும் சினேகமாக பக்திபூர்வமாக இருந்து வரும் காலகட்டத்தில் திருமலை திருப்பதி கோவிலை கட்டிய தமிழ் மன்னர் தொண்டைமான் பெருமாளைச் சேவிக்க திருமலைக்குச் சென்றார்.
அவர் தான் அனுப்பிய தங்க புஷ்ப மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படாமல் மண்ணாங்கட்டி மாலைகள் அணிவித்திருப்பதைப் பார்த்தார்.
உடனே பட்டரிடம் விசாரித்தார். பட்டர் 'நான் தாங்கள் அனுப்பிய மாலையை தான் அணிவித்தேன் அது எப்படி மண்ணாக மாறியது என்று எனக்கு தெரியவில்லை பிரபு' என்றார்.
எளிவந்த பிரான் (சௌலப்யம்)
மன்னருக்குக் கோயில் பணியில் இருந்த அனைவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. ஒன்றும் சொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பினார்.
அன்று இரவு அவர் கனவில் பெருமாள் காட்சி கொடுத்து 'என்னுடைய பக்தன் பீமன் அன்றாடம் எனக்கு அணிவிக்கும் களிமண் பூ மாலைகளே எனக்குப் பிரியமானவை' என்றார். உண்மையை உணர்ந்த மன்னரின் அவருடைய அகங்காரம் ஒழிந்தது.
இறைவனை வணங்குவதற்கு தங்கம் தேவையில்லை தங்கமான மனம் ஒன்றே போதும் என்பதைப் புரிந்து கொண்டார்.
குயவனின் பக்தியைச் சிறப்பிக்கும் வகையில் அவன் வனைந்து தரும் மட்பாண்டத்திலேயே திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு தினந்தோறும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
தானத் தர்மத் திருநாள்
ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் தான தர்மத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் மனித நேயத் திருநாளாக விளங்குகிறது.
உஞ்சவிருத்திக்குச் சென்று வெங்கட்ராமா கோவிந்தா என்ற கோவிந்த கோஷம் போட்டு தர்மம் வாங்கி வருகிறவர்களில் சிலர் கிடைத்த பணத்தை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கோ அல்லது திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தி விடுகின்றனர்.
ஆனால் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு உஞ்சவிருத்தியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பெருமாளுக்கு தளிகை இடுவர். எளியவர்களுக்கு தானம் செய்வார். தர்மத்தில் பெற்றதை தானமாக வழங்கும் நன்னாள் புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.
உணவின் மகத்துவம்
தெருவில் வசிப்போர், நோயாளிகள், உடல் ஊனமுற்றவர்கள், அனாதை குழந்தைகள் ஆதரவற்ற பெண்டிர் ஆகியோருக்கு புரட்டாசி சனிக்கிழமை அன்று தர்மம் செய்வது வழக்கமாகும்.
ஆக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் பக்தர்கள் தாம் பட்டினி கிடப்பதோடு மற்றவர்களின் பட்டினியை உணர்ந்து அவர்களின் பசியையும் தீர்க்கின்றனர்.
புரட்டாசி சனி விரதம் என்பது தான் ஒரு பொழுது உண்டு இருவேளை பட்டினி கிடந்து வயிற்றைக் காயப் போடுவதும் பட்டினி கிடப்போருக்கு உணவளிப்பதும் என்று உணவின் மகத்துவத்தை இவ் உலகுக்கு உணர்த்துகின்றது.
லங்கனம் பரமபதம்
லங்கனம் பரமபதம் என்பது பெரியோர் வாக்கு. பட்டினி கிடந்தால் பரமபதம் செல்லலாம் என்பது இதன் பொருள்.
எனவே இவ் உலகின் எல்லா மதங்களும் ஒரு ஆண்டுக்கு 30, 40 நாட்கள் பட்டினி இருப்பதை சமய நெறி முறையாகவும் ஆரோக்கியத்தின் வழிகாட்டியாகவும் கொண்டுள்ளது. ஒருவன் பட்டினி கிடக்கும் போது அவன் உடல் சுத்தம் ஆகின்றது.
அவன் உடலின் கழிவுகள் வெளியேறி உடல் சுத்தமாகும் போது அவ் உடல் லேசாகிறது. அப்போது மனமும் லேசாகிறது. அவனுக்குள் இருந்து வந்த உடல் உபாதைகள் குறைய குறைய மன அழுத்தமும் குறைகிறது. எண்ணங்கள் பரந்துபட்டு விரிவடைகின்றன.
தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை அவன் அகலக் கண் திறந்து பார்க்கின்றான். மற்றவர் படும் கஷ்டங்களை அவன் உணர்கின்றான். இறைவன் தனக்குக் கொடுத்திருக்கும் செல்வங்கள் தனக்கு மட்டுமே உரியவை அல்ல அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற பொது நலஉணர்வு அவனுள் தோன்றுகிறது.
தான் ஒரு புரவலனாக இருந்து ஏழை எளியவரை ஆதரிக்க வேண்டும் என்ற உன்னதமான மனிதத் தத்துவத்தை உணர்ந்து கொள்கின்றான். இதற்கு அவன் மனமும் உடம்பும் லேசாக இருக்க வேண்டும்.
சனியின் பலன்
உடம்பு கனத்துக் கிடந்தால் மண்டைக் கனமும் உண்டாகும். செல்வம் கனத்துக்கிடந்தால் சீரிய சிந்தனைகள் பிறப்பது கடினம்.
சனி பகவானின் தரும் பலன்களில் சில மனிதரின் அகம்பாவத்தை, செல்வச் செருக்கை ஒடுக்குதல், ஒருவனை எளியவனாக ஆக்குதல், பிறரது கஷ்டங்களை உணர்த்துதல் ஆகியன. புரட்டாசி சனி விரதத்தில் பட்டினியின் கடுமை புரியும்.
எனவே ஒரு ஆண்டுக்கு நான்கு ஐந்து சனிக்கிழமைகளாவது இரண்டு வேளை பட்டினி கிடந்து ஒரு பொழுது உண்டு இறைவன் நாமத்தை ஜெபித்து துளசி தீர்த்தம் மட்டும் குடித்தபடி இருக்கும்போது அவனுக்கு பசியின் அருமை புரியும்.
உடல் உழைப்பின் பெருமை தெரியவரும். இதை சனி பகவான் அனுபவத்தின் மூலம் விரதம் இருப்பவருக்கு கற்றுக் கொடுப்பார்.
மா விளக்கு ஏற்றுதல்
மா விளக்கு நாட்டுப்புற தெய்வ வழிபாடுகளில் குறிப்பாக மாரியம்மன் வழிபாட்டில் காணப்படும். வைதிக சமய வழிபாடுகளில் காண்பதரித்து.
இவ் விரதத்தில் மாவிளக்கு வைக்கும் பழக்கம் உண்டு. மா விளக்கு என்பது தன்னைத்தானே எரித்துக் கொள்கின்ற சுய தியாகத்தின் வெளிப்பாடு. சரணாகதித் தத்துவத்தை குறிக்கின்றது.
விசுவாமித்திரர் கதை
இறைவனின் அருளைப் பெற ஒரு முனிவர் தன் இரண்டு கால், இரண்டு கை, ஒரு தலை ஆகியவற்றைத் திரியாக கொண்டு விளக்கேற்றி இறைவன் முன்பு அக்கினியாக எரிந்தார். அதன் பின்பு இறைவன் அவருக்கு காட்சி அளித்தான் கேட்ட வரம் கொடுத்தான் என்பது விசுவாமித்திரர் பற்றிய புராணக்கதை..
வடிவும் குயிலியும்
பௌத்த மடாலயங்களில் வாழ்ந்த துறவிகள் பொதுநலம் கருதித் தன் உடம்பில் எண்ணெய்த் துணியைச் சுற்றிக்கொண்டு நெருப்பு வைத்துக் கொள்வதுண்டு.
நம் தமிழக விடுதலை வரலாற்றில் வடிவு, குயிலி போன்ற ஓடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் உடம்பு முழுக்க நெய் பூசி வாயில் திரி ஏற்றி வெள்ளையர்களின் வெடிகுண்டுக் கிடங்குக்குள் குதித்து தன்னையும் எரித்து அங்கிருந்த வெடிகுண்டுகள் அனைத்தையும் வெடித்து சிதறடித்து அவர்களை நிராயுதபாணிக்களாக்கி ஓடவிட்டனர்.
சரணாகதித் தத்துவம்
தன் உடம்பில் நெருப்பு வைத்துக் கொண்டு தன் இன்னுயிரைத் தியாகம் செய்வது பௌத்த துறவிகளிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட உயிர்த் தியாகம் முறை ஆகும்.
இதன் குறியீட்டு வடிவமே (symbolic representation) மா விளக்கு என்னும் சரணாகதித் தத்துவமாகும். தனது அகம்பாவத்தை எரித்து பக்தன் தன்னையே முழுமையாக எம்பெருமானின் திருப்பாதத்தில் அர்ப்பணிக்கின்றான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |