புரட்டாசி சனிக்கிழமை விரதமும் வீட்டில் மாவிளக்கு பூஜையின் மகிமைகளும் சிறப்புகளும்
எவர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் பெருமாளை வழிபாடு செய்ய தொடங்குகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் தர்மத்தை நோக்கிய பயணத்தை செய்கிறார்கள் என்று அர்த்தம். மேலும் பெருமாள் மிக சிறந்த ஆசிரியர் ஆவார்.
அதாவது வாழ்க்கையில் அவர் அவர் செய்த துன்பத்தையும், புண்ணியத்தையும் அவர்களுக்கே கொடுத்து நன்மை தீமையை உணரச் செய்பவர். அதனால் தான் பெருமாளை வழிபாடு செய்தால் அவர் நம்முடைய பாவத்தை மன்னித்து புண்ணியத்தை அருள்வார் என்று பக்தர்கள் தேடித்தேடி வழிபாடு செய்கிறார்கள்.
மேலும், அவர் அருளிய பகவத் கீதையில் மாதங்களில் நான் மார்கழி ஆகின்றேன் என்கிறார். அந்த மார்கழி மாதத்திற்கு இணையான மாதம் தான் இந்த புரட்டாசி மாதம். இந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் பெருமாளை அனுதினம் வழிபாடு செய்து அவருடைய அருளை பெறுவதற்கான ஒரு மிகச்சிறந்த நாளாகும்.

அதிலும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். ஒருமுறை நாரதர் சத்திய லோகத்தில் தங்கி இருந்தார். அந்த நேரத்தில் பிரம்மாவைப் பார்த்து நாரதர் "கலியுகத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான மற்றும் மிகச் சிறந்த விரதம்" எது என கேட்கிறார்.
பிரம்மா சொல்கிறார், கலியுகத்தில் மிக முக்கியமான விரதங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு இருக்க கூடிய புரட்டாசி சனிக்கிழமை விரதம் ஆகும். பிறகு அன்று முதல் பூலோகத்தில் மக்கள் இந்த விரதத்தை பின்பற்ற தொடங்கினார்கள். இந்த புரட்டாசி சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து துளசி இலைகளை நீரில் போட்டு பருகி விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
அதோடு பெருமாளுக்கு புலியோதரை சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் என நெய்வேத்தியங்கள் படைத்து வழிபாடு செய்யவேண்டும். மேலும், சிலர் புரட்டாசி மாதம் முழுவதும் இந்த விரதத்தை கடைப்பிடிப்பார்கள். இந்த விரதம் இருப்பதால் நமக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கிறது.
அவ்வாறு செய்யும் பொழுது முக்கியமாக நமக்கு ஏதேனும் கிரக தோஷங்கள் இருந்தால் அவை விலகுகிறது. அதோடு குடும்பத்தில் எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சினைகள் இருந்தாலும் அவை பெருமாளின் அருளால் விலகி நமக்கு செல்வம் சேரும்.

அதோடு நினைத்துநிறைவேற மற்றும் குடும்ப பிரச்சினைகள் விலகவும், தீராத நோய்கள் தீரவும், இவை அனைத்தும் விலக திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி சனிக்கிழமை அன்று மாவிளக்கு ஏற்றி வழிபாடும் செய்வார்கள்.
இதற்காக கட்டாயம் திருப்பதி சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை இந்த வழிபாட்டை நம் வீடுகளிலே செய்யலாம். இதற்காக பச்சரிசி மாவு எடுத்துக்கொண்டு அதில் வெல்லம், இளநீர் சேர்த்து பிசைந்து கொண்டு வாழை இலை மீது அகல் விளக்கு போல் செய்து நெய் விட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
பிறகு மலர்கள் கொண்டு மாவிளக்கை அலங்கரித்து தேங்காய், வாழைப்பழம் வெற்றிலை பாக்கு வைத்து வழிபட செய்ய வேண்டும். பெருமாளுடைய நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி பெருமாளுக்கு உரிய மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யும் போது திருப்பதியில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதி நம் வீட்டிற்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |