ஆரத்தி தட்டில் பணம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ஆன்மீக ரகசியம் பற்றி தெரியுமா?
நம்முடைய இந்து மத கலாச்சாரத்தில் ஆரத்தி எடுப்பது என்பது காலம் காலமாக பின்பற்றி வரக்கூடிய ஒரு விஷயமாகும். இது ஒரு சம்பிரதாயமாகவும் கடைப்பிடித்து வருகிறோம். அதில் முக்கியமாக திருமணம், குழந்தை பிறப்பு போன்ற முக்கிய பயணங்கள் முடிந்து வீடுகளுக்கு திரும்பும்போது கட்டாயமாக அவர்களுக்கு ஆரத்தி எடுத்து அவர்களுடைய திருஷ்டியை கழித்த பிறகு அவர்கள் வீட்டுக்குள் வரச் செய்கிறார்கள்.
இந்த ஆரத்தி என்பது சமஸ்கிருத சொல்லாகும். சமஸ்கிருதத்தில் ஆராத்ரிகா என்பதிலிருந்து வந்தது. இதற்கு இருளை அகற்றுவது என்பது பொருள். மேலும் இவ்வாறு ஆரத்தி எடுக்கும் பொழுது தட்டுகளில் கட்டாயம் நம்மால் முடிந்த பணம் வைக்க வேண்டும்.
இதற்கு ஆன்மீக ரீதியாக பல அர்த்தங்கள் நிறைந்துள்ளது என்று சொல்கிறார்கள். அதாவது பகவத் கீதையில் கிருஷ்ணர் தானம் செய்வது ஒரு சிறந்த செயல் என்று குறிப்பிடுகிறார். அதனால் தான் ஆரத்தி எடுக்கும் பொழுது நாம் தட்டுகளில் பணம் வைக்கின்றோம்.
மேலும் கோவில் வழிபாடுகளில் சுவாமியின் தீபாரதனை தட்டுகளில் நாம் அர்ச்சனை வைப்பதும் உண்டு. காரணம் கோவில்களில் இருக்கும் அர்ச்சகர்கள் தங்களுடைய முழு பணியை சுவாமிக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்களை போற்றும் விதமாகவும் அவர்களுக்கு நன்கொடைகள் வழங்கும் விதமாகவும் நம் ஆரத்தி தட்டில் பணம் வைக்கின்றோம்.
மேலும் இவ்வாறு ஆரத்தி தட்டில் வைக்க கூடிய பணம் பசுவின் பராமரிப்பிற்கும் பயன்படுத்த வேண்டும் என்று சாஸ்திரங்களில் உள்ளது. அதாவது பசு நம்முடைய இந்து மதத்தில் கடவுளுக்கு இணையாக போற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
அதனுடைய நலனிற்காகவும் தான் ஆரத்தி தட்டில் சேரும் தொகையை ஒரு பகுதியில் பசுவிற்கு சேவைக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் இனி யாரேனும் நமக்கு ஆரத்தி எடுக்கிறார்கள் என்றாலும் கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பொழுதும், இறைவனுடைய தீபாரதனை தட்டுகளிலும் முடிந்த அளவு நம்முடைய காணிக்கை வைப்பதும் ஒரு சிறந்த பலனை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







