சஷ்டி விரதங்களின் நோக்கும் போக்கும்
சஷ்டி என்பது அமாவாசை, பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஆறாம் நாள். சஷ்டி விரதம் ஆறுமுகனுக்கு மேற்கொள்ளப்படும் விரதம் ஆகும்.
அவன் முகம் ஆறு. அவன் கோணம் ஆறு. அவன் திருமந்திரத்தில் எழுத்துக்கள் ஆறு. ச ர வ ண ப வ. அவன் தாயார் ஆறு பேர்.அவன் படைவீடுகள் ஆறு. இப்படி ஆறு முகம் ஆறு என்ற எண்ணுக்குச் சொந்தக்காரன்.
சஷ்டி விரத்தில் கந்த சஷ்டி, கணபதி சஷ்டி, கயிலை சஷ்டி என்று பல சஷ்டி விரதங்கள் உண்டு.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
ஏழைத் தாய்மார் பேசும்போது வீட்டில் உணவு இல்லை என்பதை சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் (கரண்டியில்) வரும். என்பர். தற்காலத்தில் இந்த பசி, பட்டினி நிலைமைகள் தமிழகத்தில் இல்லை. கிருபானந்த வாரியார் இப் பழமொழிக்குத் தன் சொற்பொழிவில் புது விளக்கம் அளித்தார்.
சட்டி என்பது மண் சட்டி அல்ல. சஷ்டி. சஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் (உள்ளே இருக்கும் கருப் பை) குழந்தை வரும் என்றார். குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் மாதந்தோறும் சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை உண்டாகும்.
சஷ்தி வழிபாடு
வடநாட்டில் சஷ்தி என்றொரு பெண் தெய்வம் உண்டு. இவளை தேவயானை என்றும் சொல்வர். பிள்ளை வலி பவந்ததும் இவளை வணங்கிய பின்பே மருத்துவச்சி தன் சேவையைத் தொடங்குவாள்.
சஷ்தியின் வாகனமாக பூனை விளங்குகின்றது. குழந்தை பிறந்து 30 நாள் கழிதந்ததும் சஷ்திக்கு கருப்பு சேலை, கருப்பு வளையல் வாங்கி வைத்து திருஷ்டி கழித்து அவளை வணங்கி வந்தால் மட்டுமே குழந்தைக்கு ஆயுள் தோஷம் விலகும். தீர்க்காயுளோடு குழந்தை வாழும் என்ற நம்பிக்கையும் அங்கே விளங்குகின்றது.
இந்த வழிபாடு கந்தனுடன் தெற்கே வந்து சஷ்டி விரோதமாக மறு உருவம் பெற்றுள்ளது. சஷ்தி விரதம் சஷ்டி விரதம் ஆயிற்று.
கந்த சஷ்டி
சஷ்டி மாதந்தோறும் இரண்டு முறை வந்தாலும் ஆண்டுக்கொரு முறை ஐப்பசியில் வரும் வளர்பிறை சஷ்டி விரதம் கந்த சஷ்டி என்று அழைக்கப்படுகிறது. கந்தன் எனப்படும் இறைவன் முருகனின் வடநாட்டு வடிவம் ஆவான்.
கந்தன் எனப்படுபவன் தேவலோகத்தில் தேவர்களை காக்கும் பணியில் இருந்த ஸ்கந்தா என்ற பெயருடைய காவல் தெய்வம் ஆவான். தேவர்களுக்கு மூன்று அசுரர்கள் பெருந்தொல்லை கொடுத்த போது தேவேந்திரன் மூன்று அசுரர்களையும் அழிக்க தங்களின் காவல் தெய்வமான ஸ்கந்தாவை ஏவினான். ஸ்கந்தா அசுரர்களை அழித்த காரணத்தினால் அவனுக்கு தன் மகள் தெய்வயானையைக் திருமண பரிசாக வழங்கினான்.
சேயோன் (முருகன்)
தெற்கே குறிஞ்சித் திணையின் கடவுளாக சேயோன் வணங்கப்பட்டான். சேயோன் என்றால் சிறுவன்.இதனை 'சேயோன் மேய மைவரை உலகமும்' என்பது தொல்காப்பிய நூற்பா. முருகன் தமிழ் கடவுள். இவன் வள்ளியைத் தமிழ் அகத்தினை முறைப்படி களிறு தரும் புணர்ச்சி வழியே காதலித்து மணந்தான்.
முருகன் கந்தன் இணைப்பு
கிபி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு வடமொழித் தென்மொழித் தெய்வங்கள் ஒன்றிணைக்கப்பட்ட போது முருகனும் கந்தனும் ஒரே கடவுள் ஆயினர். முருகனுக்குப் பிறப்பு கதை என்று எதுவும் கிடையாது. முருகனும் வள்ளியும் காதலித்துத் திருமணம் செய்த கதை மட்டுமே நாட்டுப்புற வழக்கில் உண்டு. முருகு புனர்ந்தியன்ற வள்ளி என்று ஒரு தொடர் சங்க இலக்கியத்தின் நற்றிணை பாடலில் உள்ளது.
சரவணனின் பிறப்பு
ஆதியில் கந்தன் அக்கினி குமாரன். பின்னர் அவன் சிவபாலன் ஆனான்.
சப்தரிஷிகளின் மனைவியர் மீது காதல் கொண்ட அக்கினி தேவன் தன் ஆவல் நிறைவேறாமல் தவித்த போது அவனை ஒருதலையாகக் காதலித்து வந்த ஸ்வாஹா என்பவள் ஒவ்வொரு ரிஷி பத்தினியின் உடலிலும் புகுந்து அக்கினி தேவனின் ஆவலைப் பூர்த்தி செய்தாள். அவ்வாறு ஆறு ரிஷி பத்தினிகளின் உடலில் அவளால் போக முடிந்தாலும் ஏழாவது ரிஷி பத்தினியான அகலிகையின் உடலில் அவளால் புக முடியவில்லை. வசிட்டரின் மனைவி அகலிகை மாசுபடாமல் இருந்தாள்.
ஆறு ரிஷி பத்தினிகளிதமிருந்து ஆறு அக்கினி குஞ்சுகள் வெளிப்பட்டன. அவற்றை ஸ்வாகா நாணல் காட்டினுள் வைத்து வளர்த்தாள். அவன் சரவணன் என்று பெயர் பெற்றான். சரவணன் என்றால் நாணல் காடன் என்பது பொருள். அவன் படு முரடன். இந்திரனையே வம்புக்கு இழுத்தவன். இப்படி ஒரு கதை.
சிவபாலன் கதை
அடுத்த காலகட்டத்தில் அக்கினி குமரனாக இருந்த சரவணனை சிவ பாலனாக உயர்த்திய கதை தோன்றியது. வடமொழியில் எழுதப்பட்ட கந்தபுராணத்தில் இக்கதை காணப்படுகின்றது.
சிவன் வெகு காலம் யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்த போது நிஷ்டையைக் கலைக்கும்படி தேவர்கள் காம தேவனை வேண்டினர். அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி காம தேவன் தனது மலர் அம்புகளை சிவபெருமானின் மீது எய்தான்.. சிவபெருமான் கண் விழித்துப் பார்த்து கோபத்தில் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விட்டார்.
கோபம் தணிந்து காமம் பெருகிய நிலையில் சிவபெருமான் பார்வதியைக் கூடினார். அவருடைய சுக்கிலம் (உயிர் அணுக்கள்) நெருப்புத் துண்டங்களைப் போல வெப்பம் மிகுதியாக இருந்ததனால் பார்வதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கங்கை அதனை முன் வந்து ஏற்றுக் கொண்டாள். கங்கை உயிர் அணுக்களைத் தாங்கி குழந்தையாக தாமரை மலர்களில் உயிர்ப்பித்தாள். தாமரை மலர்களில் இருந்து அக்குழந்தைகளை எடுத்து கார்த்திகை பெண்டிர் என்ற அறுவர் வளர்த்தனர். பின்னர் பார்வதி அந்த ஆறு குமாரர்களையும் ஒன்றாக சேர்த்து ஆறுமுகம் கொண்ட கந்தனாக ஏற்றுக் கொண்டாள்.
அறு மீன் (plaeides)
கார்த்திகை பெண்கள் அறு மீன் என்ற பெயரில் வானத்தில் கார்த்திகை நட்சத்திரங்களாக இடம் பெற்றனர் என்று புராணம் சொல்கிறது. சிந்து சமவெளி எழுத்து குறிப்புகளை ஆராய்ச்சி செய்த அறிஞர் ஒருவர் முருகனை குறிக்க ஆறு மீன்கள் வரையப்பட்டிருப்பதாக விளக்குகிறார். இதுவே plaiedes எனப்படும் கார்த்திகை ந்டசத்திரம் என்கிறார்.
இன்னொரு சித்திரத்தில் ராஜ தோரணையுடன் ஒருவன் அமர்ந்திருக்க அவன் கால்களுக்குக் கீழே ஒரு பக்கம் மயிலும் ஒரு பக்கம் நாகமும் காணப்படுகிறது. இதனை இவ் அறிஞர் முருகன் என்று அடையாளம்.காண்கிறார்.
வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தில் வானத்தையும் ஒரு கடல் போல மக்கள் கருதினர். அங்கு தெரியும் நட்சத்திரங்களை விண்மீன் என்று அழைத்தனர், என்று இவர் மீன் வடிவத்திற்கு விளக்கம் அளிக்கிறார்.
சூரசம்ஹாரம்
பிரம்மனிடம் வரம் பெற்ற அசுரர்களான கஜமுகாசுரன் சிங்கமுகாசுரன் பத்மாசுரன் ஆகிய மூன்று அசுரர்களும் அவர்களின் தங்கை அயோமுகியும் தேவர்களை மிகுந்த துன்பத்துக்கு உள்ளாக்கினர்.
மேலும் இந்திர பதவியைத் தாங்கள் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திராணியையும் கவர்ந்து செல்ல முயன்றனர். ஆனால் இந்திராணி ஒரு மூங்கில் வனத்துக்குள் ஒளிந்து கொண்டாள். இந்திராணியை எவன் அடைகின்றானோ அவனுக்கே இந்திர பதவி என்ற நிலை இருந்ததனால் இந்திராணியை தன் தமையன் பத்மாசுரனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது அவன் தங்கை அஜோமுகி விரும்பினாள்.
இந்திராணியை வெளியே கொண்டு வரவும் அசுரர்களை ஒழிக்கவும் இந்திரன் தேவர்களின் காவல்காரனும் படைத்தளபதியுமான ஸ்கந்தனை அனுப்பினான். ஸ்கந்தன் முதலில் சூரப்தமனின் சகோதரர்களை அம்பு எய்து கொன்றான். பத்மாசுரன் கடலுக்குள் ஓடி ஒளிந்தான் பின்ப மாமரமாக உருமாறி நின்றான். அம் மாமரத்தை தன் அம்பால் இரண்டாகப் பிளந்த ஸ்கந்தனைப் பணிந்து அவனுடனே என்றைக்கும் இருக்கும் வரம் அருளும் படி பத்மாசுரன் வணங்கி நின்றான்.
முருகன் பத்மாசுரனுக்கு மனமிரங்கி வெட்டிய மரத்தின் ஒரு பகுதியை சேவலாகவும் இன்னொரு பகுதியை மயிலாகவும் உரு மாற்றினான். சேவலைத் தன் கொடியிலும் மயிலைத் தன் வாகனமாகவும் ஸ்கந்தன் ஏற்றுக் கொண்டான்.
விரதம் இருக்கும் முறை
ஸ்கந்தன் அசுரனை வதம் செய்த நாள் ஐப்பசி வளர்பிறை சஷ்டி திதி ஆகும். ஐப்பசி அமாவாசை அன்று தீபாவளி கொண்டாடப்பட்டு முடிந்ததும் மறுநாள் பிரதமை அன்று கந்த சஷ்டி விரதம் தொடங்கும். பக்தர்கள் ஆறாவது நாள் அன்று சூரசம்காரம் முடிந்ததும் உணவு உண்டு விரதத்தைநிறைவு செய்வர்.
விரதம் இருக்கும் ஆறு நாட்களும் சிலர் மா விரதம் சிலர் பழ விரதம் என்று அனுஷ்டிப்பார்கள். மா விரதம் இருப்பவர்கள் மாவால் செய்யப்பட்ட இட்லி, தோசை கொழுக்கட்டை போன்ற பொருட்களை மட்டும் ஆறு நாளும் சாப்பிடுவார்கள். சோறு சாப்பிடுவது கிடையாது. பழ விரதம் இருப்பவர்கள் பாலும் வாழைப்பழமும் மட்டும் சாப்பிட்டு ஆறு நாளும் பட்டினி கிடப்பார்கள். வேறு சிலர் அவல் பொரி பால் பழம் என்று இரண்டு வேளை சாப்பிட்டுக்கொண்டு ஒருவேளை மட்டும் எளிய அரசி உணவை உட்கொள்வார்கள்.
விரதம் இருக்கும் ஆறு நாட்களிலும் காலையில் வீட்டிலிருந்தால் குளித்து முடித்து முருகனை வணங்கி கந்த சஷ்டி பாராயணம் செய்யலாம். தெரிந்திருந்தால் அதனைச் சொல்லி இறைவனை வணங்கலாம் அல்லது ஒலிநாடாவில் கேட்டும் இறைவனை வணங்கலாம்.
கிராமங்களில் இருப்பவர்கள் பத்து இருபது பேர் எனக் குழுக்களாக அருகில் உள்ள முருகன் கோவிளுக்குப் போய் அங்கேயே ஆறு நாட்களும் தங்கி விடுவார்கள். ஆறு நாட்களும் கோவில் குளத்தில் குளித்துவிட்டு கோவில் வளாகத்திலேயே பட்டினி விரதம் மேற்கொள்வார்கள். காலையிலும் மாலையிலும் கோயிலில் நடைபெறும் பூஜைகளைக் கண்ணாரக் கண்டு களிப்பார்கள்.
திருச்செந்தூர்
முருகனின் அறுபடை விடுகளுள் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாக நடக்கும். அந்த கடலுக்குள் மகேந்திர மலை இருந்ததாகவும் அந்த மகேந்திர மலையின் மன்னனாக பத்மாசுரன் இருந்ததாகவும் கருதப்படுவதால் திருச்செந்தூர் நிஜத்தில் சூரசம்ஹாரம் நடந்த தலமாக நம்பப்படுகிறது. திருச்செந்தூரில் கடற்கரையில் சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தி காட்டப்படும்.
சிங்க முகமூடி அணிந்த ஒருவர் யானை முகமூடி அணிந்த ஒருவர் சிங்கமுகசுரனையும் கஜ முக அசுரனை போல் வந்து மிருக்கினின் அம்பால் தாக்கப்பட்டு சிங்கமுகத்தையும் யானை முகத்தையும் கீழே விழும் படி செய்வார்கள். பின்பு சூரபத்மன் போருக்கு வருவான் அவனையும் முருகன் தன் அம்பால் வீழ்த்துவார். கடல் அலையை விட மக்களின் தலைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
தற்காலத்தில் சிறு சிறு முருகன் கோவில்களில் கூட சூரசம்ஹாரம் நிகழ்ச்சி சிறப்பாக நிகழ்த்திக் காட்டப்படுகிறது. சூரசம்ஹாரம் என்பது கெட்டவனை அழித்து நல்லவர்களை வாழ வைக்கும் கதையாகும்.
புராணக் கதைகளில் தேவர்கள் நல்லவர்கள் என்றும் அசுரர்கள் கெட்டவர்கள் என்றும் காட்டப்படுவர். அல்லது தெய்வங்கள் தரம் தெரியாமல் வரம் கொடுத்து விட்டு துன்பத்துக்கு உள்ளார்கள். பிரம்மனுக்கும் சிவபெருமானுக்கும் புராணக் கதைகளில் வரம் கொடுத்து துன்பப்படுவது பாடுபொருளாக இருப்பதை பார்க்கின்றோம்.
தமிழகத்தில் கந்தன் வழிபாடு
பதினாறாம் நூற்றாண்டில் கந்தபுராணம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட போது கந்தனின் கதை பிரபலமாகி சிவபாலனாகவும் அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பனாகவும் வணங்கப்பட்டான். மெய்ஞானத்தின் கடவுளாக ஞானக்கடவுளாக ஆரம்பத்தில் கருதப்பட்டான்.
கார்த்திகேயன்/ சுப்பிரமணியன்
தமிழகத்தில் முதலில் போர்க் கடவுளாக வீரத்தின் விளைநிலமாக இருந்த முருகன் பின்னர் சூரசம்ஹார கதை இங்கு வந்து சேர்ந்ததும் தேவர்களின் தளபதியான கந்தனின் கதையில் பொருத்தமாக இணைகமபோட்டான்.
வடநாட்டுப் புராணக் கதைகள் கந்தனை கார்த்திகேயன் என்றும் அழைத்தன. கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட தனால் கார்த்திகேயன் எனப்பட்டான். மெய்ஞான வடிவமாக இருப்பதனால் சுப்பிரமணியன் (தூய்மையான ஒளி) என்ற பொருளில் அழைக்கப்பட்டான்.
மேனாட்டறிஞர்கள் கருத்து
வட மாட்டு கந்த வழிபாட்டுக்கு முன்பே தமிழகத்தில் முருகன் வழிபாடு சிறப்பாகவும் செல்வாக்கோடும் இருந்து வந்தது என்பதை நார்மன் கட்லர், ஃப்ரெட் கிளோதி போன்ற அறிஞர்கள் எடுத்துக் கூறினர். முருகன் பாடல்களை ஃபிரெட் குலோதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஜார்ஜ் எல் ஹார்ட்தும் அவர் மனைவி கௌசல்யா ஹார்ட்டும் முருகன் பாடல்களை ஆய்வு செயதனர். வள்ளி முருகன் திருமணமே முதல் தமிழ்க் காதல் திருமணத்தின் பதிவு என்றார் ஹார்ட். (மீனாட்சி சொக்கர் திருமணம் தமிழ் அகத்திணை இலக்கணத்துடன் பொருந்தி வரவில்லை). கார்த்திகேயன் காலத்தால் பிந்தியவன் என்பதும் முருகன் வீர யுகம் தொட்டு இருந்து வருகிறான் என்பதும் ஃபிரெட் கிளோதியின் ஆய்வு முடிவாகும்.
பௌத்தத்தில் முருகனும் நாகமும்
பௌத்த சமயத்தில் கந்தன் இந்திரனின் பொக்கிஷகதாரனாக வைத்துப் போற்றப்பட்டான். இந்திரனுக்கு வழிபாடு நடந்த பௌத்த விகாரைகளில் மடாலயங்களில் தங்கச் சிலைகளும் தங்க நகைகளும் ஏராளம் இருந்தன. அவர்கள் ரசவாத கலையில் வல்லவர்கள், அவர்கள் செம்பை பொன்னாக மாற்றத் தெரிந்தவர்கள், பொன்னால் ஆகிய பொருட்கள் நிறைய பௌத்தர்களின் பொக்கிஷத்தில் இருந்தன. அவற்றின் காவல் தெய்வமாக கந்தனும் வாசுகி, ரட்சகன், காலிங்கன், மணி பத்திரன், சராபதன், திருதராஷ்டிரன், கார்கோடகன், தனஞ்செயன் ஆகிய எட்டு நாகங்களும் இருந்தன. இக்காரணத்தினால்தான் இந்து சமயத்திலும் கந்தனின் காலடியில் நாகங்கள் இடம் பெற்றன.
வெளிநாட்டில் கந்தன்
வடகிழக்கு ஆசியாவிலும் சீனாவிலும் ஜப்பானிலும் கந்தன் வழிபாடு நடைபெறுகின்றது. அந்நாடுகளுக்கு பௌத்த சமயம் கந்தனை எடுத்துச் சென்றது.
சி -கந்தர், அலெக்ஸ்சாந்தர் போன்ற பெயர்களும் வீரர்களும் கந்தனின் மறு வடிவங்கள் தான். கிரேக்கர்கள் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை பஞ்சாப் வலிபியாக் கங்கை சமவெளியை அடைந்து இங்கு ஆட்சி செய்த வட நாட்டு மன்னர்களுடன் போரிட்டனட். யவனர்கள் எனப்பட்ட இவ்வெளிநாட்டினர் வடக்கிலும் தெற்கிலும் மன்னர்களுக்கு பாதுகாப்பு படையினராக் இருந்தனர்.
வேத, இதிகாசங்களில் கந்தன்
கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாபாரதத்திலும் கி.மு. நான்கு முதல் ஏழாம் நூற்றாண்டுக்குள் தோன்றிய இராமாயணத்திலும் கார்த்திகேயனின் பிறப்பு பற்றிய கதை காணப்படுகின்றது. ஆனால் இந்நூல்கள் கார்த்திகேயனை முழு முதல் கடவுளாக குறிப்பிடவில்லை.
முதலில் பௌத்த சமயமே கார்த்திகேயனைத் தங்களுடைய கடவுளர் குழுவில் ஒன்றாக வைத்துப் போற்றியது. பௌத்தம் இந்தியாவில் இருந்து விடைபெற்று வெளியேறிய போது கந்தனையும் தான் மதம் பரப்பிய தென்கிழக்காசியா, சீனா ஜப்பான் நாடுகளுக்கும் கொண்டு சென்றது.
கி.பி. ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய சமயப் புரட்சி தோன்றியது. சைவத்தில் கபாலிகம் பாசுபதம் போன்ற வீரசைவ உட்பிரிவுகள் தோன்றின. அதுபோல வைணவமும் தனி ஒரு சமயமாக தலையெடுத்தது. இக்காலகட்டத்தில் முருகன் விநாயகர் போன்ற தெய்வங்கள் இவ்விரண்டாலும் ஈர்க்கப்பட்டனர்.
முருகன் அல்லது கந்தன் சிவபாலனாகவும் இந்திரனின் மருமகனாகவும் இருந்தாலும் அவனுடைய மாமனாராக திருமாலும் சேர்க்கப்பட்டார். முருகனின் தாயார் பார்வதியின் தமையனாக திருமாலைக் இணைத்ததும் சைவ வைணவ ஒற்றுமைக்கு வழி வகுத்தது. முருகன் விநாயகர் வழிபாட்டுக்குரிய கௌமாரம் மற்றும் கானா பத்தியம் பிரிவுகளும்திருமாலின் மருமகன்களாக இவர்கள் மாறியதும் சைவ வைணவ சமயங்களுக்குள் கரைந்து போயின.
குமரனை பற்றி ரிக் வேதம் பாடல் ஒன்று (5.2) குறிப்பிடுகின்றது. சதபத பிராமணத்தில் கார்த்திகேயன் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. வேத நூலில் குமரன் என்பவனே அக்கினி வடிவமாகத்தான் வர்ணிக்கப்படுகின்றான். அவனது தாயாக உஷஸ் என்ற வைகறைப் பொழுதுக்குரிய தேவதையும் தந்தையாக புருஷன் எனப்படும் ஆதி தேவனும் சுட்டப்படுகின்றான். தைத்தரிய ஆரண்யகத்தில் கந்தனைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. சாந்தோக்ய உபநிஷத்தில் சரத்குமரரும் ஸ்கந்தனும் சகோதரர் என்ற குறிப்பு உள்ளது. இவ்வாறு வேதங்களில் குறிப்பிடப்படும் ஸ்கந்தனும் குமரனும் பின்னர் புராணங்களில் கந்தனாகி தெற்கே குமரனுடன் இணைந்து கந்தா கடம்பா கதிர் காலம் வேலா முருகா குமரா கார்த்திகேயா என்று பல பெயர்களில் அழைக்கப்படும் ஒரு கடவுளாக உருப்பெற்றனர்.
குமரனின் சிறப்பு
முருகன் அல்லது கந்தன் தகப்பனை விட புத்திசாலி, தன் பக்தர்களுக்கு முதலில் சோதனைகளைக் கொடுத்து பின்பு அவற்றைத் தீர்த்து வைத்து பெரும் மகிழ்ச்சியை தருவான், வள்ளி தெய்வானை என்று இரண்டு பெண்களை மணந்தவன், வள்ளி முருகனின் இடது கண்ணின் பக்கம் நிற்பதால் அவள் நீலோற்பல மலரை வைத்திருக்கின்றாள். நீலோற்பல மலர் சந்திரனைக் கண்டதும் மலரும். வலது கண் பக்கம் நிற்கும் தேவையான தாமரை மலரை கையில் வைத்திருப்பாள். ஏனெனில் முருகனின் வலது கண் சூரியன். சூரியனைக் கண்டு தாமரை மலரும்.
முருகனுக்கும் நெற்றிக்கண் உண்டு அது அக்கினி வடிவமாகும் என்று சிவபெருமானையும் முருகனையும் இணைக்கின்ற கதைகளும் பிற்காலத்தில் தோன்றின.
சிவனும் சேயோனும்
சிவன் என்றால் சிவப்பு நிறுத்தினன். சேயோன் என்றாலும் சிவப்பு நிறுத்தினன். சிவனின் இன்னொரு வடிவமே முருகன் என்பாரும் உளர். சிவபெருமானுக்கும் முக்கண் உண்டு. முருகனுக்கும் முக்கண் உண்டு..
சிவசக்தி வடிவான முருகன்
பழந்தமிழ் இலக்கியங்களில் செவ்வேள் என்று முருகன் அழைக்கப்படுவான்.
வேள் என்றால் தலைவன். அவன் குறிஞ்சி நிலத்தின் தலைவன் ஆவான் போர்த் தளபதியும் ஆவான் எனவே பக்தர்களின் அச்சத்தை போக்கும் சிவசக்தி வடிவமாக விளங்குகிறான். முருகனின் அறு கோணசக்கரத்தில் மேல் நோக்கி இருக்கும் முக்கோணம் சிவனையும் கீழ்நோக்கி இருக்கும் முக்கோணம் சக்தியையும் குறிக்கின்றது.
சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரத்துக்கு உரியவன் அறுகோண சக்கரத்தில் எழுந்தருளி இருப்பான். இதனால் முருகனை வணங்கினால் சிவனையும் பார்வதியையும் வணங்கிய பலன் கிடைக்கும். ஆண்டுக்கு ஒருமுறை பட்டினி கிடந்து குமரனை வணங்கினால் கேட்ட வரம் கிடைக்கும். குமரன் அழகன் இளையோன் என்று பலவகைகளிலும் குமரனும் முருகனும் கந்தனும் வணக்கத்திற்குரியவர்களாக விளங்குகின்றனர்
வளர்பிறை தேய்பிறை சஷ்டி விரதம்
ஆண்டுக்கு ஒருமுறை வரும் கந்த சஷ்டி மட்டுமல்லாது மாதந்தோறும் இரண்டு முறை வரும் வளர்பிறை தேய்பிறை சஷ்டி அன்றும் விரதம் இருக்கலாம். இதுவும் முருக வழிபாட்டுக்குரியதாகும். முருகனின் பேரருள் பெறவும் ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக இருப்பவர்களும் சஷ்டி விரதம் மாதம்தோறும் இரண்டு முறை இருந்து வரலாம்.
கந்த சஷ்டி விரதம் இருப்பதைப் போலவே அவரவர் உடல் நிலைக்கும் தொழிலுக்கும் ஏற்ற வகையில் குறைந்த அளவு உணவை உண்டு அதிக அளவில் இறைவனை வணங்கி வர சஷ்டி விரதம் நல்ல பலனை அளிக்கும்.
கபிலை சஷ்டி
புரட்டாசி தேய்பிறை சஷ்டி அன்று விரதம் இருந்து இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும். எனவே இதை கபிலை சஷ்டி என்பர். அன்று பசுமாட்டுக்கு உணவளிக்க வேண்டும். கபிலை என்பது மாட்டை குறைக்கின்றது. அதற்கு உணவு அளித்து சஷ்டி விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த விரதத்தின் போது பசு மாடுகளின் ரூபத்தில் இஷ்ட தெய்வங்கள் வந்து பக்தர்கள் தரும் உணவை உண்பதாக ஐதீகம்.
கணபதி சஷ்டி
கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை சஷ்டி கணபதிக்கு உரியதாகும். சங்கடகர சதுர்த்தி விரதம் இருப்பவர்களும் கார்த்திகை மாதத்தில் மட்டும் தேய்பிறை சஷ்டி அன்றும் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டு வரலாம்.
வளர்பிறை தேய்பிறை வேறுபாடு ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு திருமணம், குழந்தை பேறு, தொழில் விருத்தி, விருது பரிசு வேண்டுதல் போன்றவற்றிற்கு வளர்பிறை சஷ்டி அன்றும் பகை அழித்தல், நோய் நீக்குதல், மனக்கவலை போக்குதல் போன்றவற்றிற்கு தேய்பிறை சஷ்டி அன்றும் விரதம் இருந்து முருகனை வணங்கி வர எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |