அழகிய வாழ்க்கையை உணர்த்தும் கந்தர் அனுபூதி

By Sakthi Raj Jun 23, 2024 09:30 AM GMT
Report
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
"சும்மா இரு, சொல்லற" என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!

இந்தப் பாடலின் அழகு யாரும் சொல்லி அறியவேண்டியது இல்லை!

அழகிய வாழ்க்கையை உணர்த்தும் கந்தர் அனுபூதி | Semman Magalai Tirudum Kanthar Anuputhi Murugan

விளக்கம்

குறவர் கூட்டத்திற்குத் தலைவனான 'செம்மானின்' மகளான வள்ளியைத் திருடி மணம் கொண்ட அந்த முருகப் பெருமான், பிறப்பும் இறப்பும் இல்லா அந்தப் பெருமான், எனக்கு உபதேசம் செய்தான். "சும்மா இரு. சொல் அற" என்றான். அந்த மாபொருள் ஒன்றும் விளங்கவில்லையே!" என்று பேசுகிறார் அருணகிரினாதர்.

'அம்மா பொருள் ஒன்றும்" என்ற தொடர் மிக அழகு! 'அம் மாபொருள்' என்று கொள்வதா? இல்லை, 'அம்மா! பொருள் ஒன்றும்' என்று கொள்வதா? தமிழிலே, இயலாமையைக் குறிக்கும்போதும், வியப்பினைக் குறிக்கும்போதும், 'அம்மா' என்ற தொடரை உபயோகப்படுத்துவது ஒரு மரபு.

அந்த மரபினை ஒட்டி இங்கே 'அம்மா' என்று விளிக்கப்பட்டதா? இல்லை, 'அம் மா பொருள்' என்று வியப்பினால் சுட்டப்பட்டதா? இரண்டுமே இங்கே பொருந்தும் என்றே தோன்றுகின்றது!

லட்சுமி தேவியின் அருள் பெற கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்

லட்சுமி தேவியின் அருள் பெற கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்

 

'அந்த மா பொருள் ஒன்றும், அம்மா! விளங்கவில்லயே' என்றுதான் அருணகிரியார் சொல்லியிருப்பார் என்று தோன்றுகின்றது!

'சொல் அற' என்ற பதமும் மிக வியப்புதான். வெறும் பேச்சு இன்றி இருத்தல் இல்லை இது. வாய்ப்பேச்சை மட்டும் இது குறிக்கவில்லை. மனத்தில் எழும் எண்ணங்களையும் சேர்த்தே குறிக்கிறது. மனதிலே எண்ணங்கள் தோன்றினால், சொல் எழும்.

சொல் அற்றுப்போவது என்றால், மனதிலே எண்ணங்களும் இல்லாமல் போவதுதான்! இப்படி, சொல் இன்றி, சொல் எழும் வித்தான் எண்ணங்கள் இன்றி, சும்மா இருத்தல் என்பது மிகவும் முயற்சி எடுத்து அல்லவா செய்யப்பட வேண்டியது!

'சும்மா இருத்தலுக்கு' எத்தனை முயற்சி வேண்டியிருக்கிறது! எத்தனை சாதனை செய்ய வேண்டியிருக்கிறது! இத்தனைப் பொருளும் அடங்கியிருப்பதால்தானோ என்னவோ அருணகிரினாதர், 'அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே' என்று சொல்லி விட்டார்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US