குடும்ப விழாவும் கோயில் கொடையும் நடக்கும் சொரிமுத்து அய்யனார் கோவில்
மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காரையாறு நீர்த்தேக்கத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையே சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானதாகும். பாபநாசத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கோயிலைக் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் என்றும் அழைப்பார்கள். அய்யனாரை சாஸ்தா என்றும் அழைக்கின்றனர்.
முருகனுக்கு அறுபடைவீடு விநாயகருக்கு அறுபடை வீடு பெருமாளுக்கு நவதிருப்பதி என்பது போல அய்யனாருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அவற்றில் முதலாவது சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகும். குளத்துப்புழை, அச்சன்கோவில், பந்தளம், சபரிமலை, ஆரியங்காவு ஆகிய இடங்களில் இருக்கும் சாஸ்தா கோவில்களும் அறுபடை வீடுகள் ஆகும். சபரிமலையில் கட்டப்பட்ட சாஸ்தா கோவிலை விட இக்கோவில் மிகவும் பழமையானது. மேலும் சபரி மலை மணிகண்டன் இத்தலத்தில் இளம்வயதில் போர் பயிற்சி பெற்றார். எனவே இக்கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கேரளப் பகுதியில் இவரை சாஸ்தா என்கின்றனர். தமிழ்நாட்டில் அய்யனார் என்று அழைக்கின்றனர். சொரிமுத்து அய்யனார் கோவிலில் காலை உச்சி மாலை இரவு என்று நான்கு வேளையும் பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.
ஐயனாரின் தோற்றப் பொலிவு
சொரிமுத்தையனார் ஒரு கையை முழங்கால் மீது நீட்டி ஒரு கையில் தாமரை மலர் ஏந்தி அமர்ந்த காலத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றார். அருகில் பூரணா தேவியும் புஷ்கலா தேவியும் உள்ளனர். கிழக்கு பார்த்த கருவறையில் சொரிமுத்து அய்யனார் ஏழுந்தருளியுள்ளார். சந்நிதி முன்பு யானை, குதிரை வாகனங்கள் நிற்கின்றன.
மகாலிங்க சாமி
சொரிமுத்து அய்யனார் சன்னதிக்கு வடக்குப் பக்கம் கிழக்குப் பார்த்த நிலையில் தனிக் கோயிலில் லிங்க ரூபத்தில் மகாலிங்க சாமி உள்ளார். எதிரே நந்தி வாகனம் உள்ளது.
சங்கிலி பூதத்தார்
இவர் அய்யனாருக்கு தெற்கே வடக்குப் பார்த்த சன்னதியில் கையில் தண்டம் ஊன்றி நின்ற கோலத்தில் அகத்திய முனிவருடன் உள்ளார்.
கதை ஒன்று
அகத்தியர் கதை
சொரிமுத்து அய்யனார் கோவிலிலும் அகத்தியர் தென் பகுதியை நிமிர்த்த இங்கு வந்து போன கதை கூறப்படுகின்றது. அவர் இத்தலத்தில் வந்து நின்ற போது பூமி சமமானது. அடர்ந்த வனப் பகுதியில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு
சொரிமுத்து அய்யனார் கோவில் கோவில் முன் மண்டபத்தில் வைரவர் சன்னதி உள்ளது. அதற்கு எதிரே நாய்க்கு தனி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பலாவடி பேச்சி இருக்கின்றாள். இங்கு எழுந்தருளியிருக்கும் அய்யனார் பூரண புஷ்கலா உடனுறை சொரிமுத்து அய்யனார் ஆவார். இங்கே தென்புறத்தில் சங்கிலி பூதத்தாருக்கும் அகத்தியருக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன. மணி முழுங்கி மரம் என்று அழைக்கப்படும் இலுப்பை மரம் தலவிருட்சம் ஆகும்.
துணைத் தெய்வங்கள்
சொரிமுத்து அய்யனார் கோவிலில் பொம்மக்கா திம்மக்கா உடன் கூடிய பட்டவராயன் சாமிக்கு தனிச் சன்னதி உண்டு. பெரிய தளவாய் மாடசாமி, கரடி மாடசாமி, தூசி மாடசாமி ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கச மாடத்திக்கு ஒரு சன்னதி உண்டு. பலாவடி பேச்சி மணி முழுங்கி மரத்தடியில் இருக்கிறார். பிரம்ம ராட்சசி அம்மன் பேச்சியம்மன் சுடலைமாடசாமி ஆகியோரும் இங்கு உள்ளனர்.
படையலில் இரண்டு வகை
கோவிலின் வட பகுதியில் ரத்தப் பலி கொடுக்கப்படுகின்றது. தென்பகுதியில் சிவலிங்கம், சாஸ்தா ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. அங்கு சைவ உணவே படையலாக படைக்கப்படுகின்றது. இதனை ஆசாரப்படையல் என்கின்றனர்.
சொரிமுத்து பெயர்க் காரணம்
ஒரு காலத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக மழை இன்றி கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர் ஆடி அமாவாசை அன்று இங்கே எழுந்தருளியிருக்கும் சாஸ்தாவுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து வணங்கினால் மாதம் மும்மாரி பொழியும் என்றார். அவர் நீர் சொரிந்து வணங்கியதால் சாஸ்தா சொரிமுத்து அய்யனார் என்று அழைக்கப்படுகிறார். அன்று அகத்தியர் வணங்கிய சொரிமுத்து அய்யனார் கோவில் காலப்போக்கில் மண்மூடிப் போய்விட்டதால் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் புதிய கோவில் கட்டப்பட்டது.
சுயம்புலிங்கம்
இத் திருத்தலம் பாண்டிய நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையே வாணிகம் நடைபெற்ற முக்கிய சந்தைப் பகுதியாகும். இரு நாட்டு பொருட்களும் இங்கே விற்கப்படும். ஒருநாள் விற்பதற்காக கொண்டுவரப்பட்ட பொதுமாடுகளின் காலடி பட்டு ஒரு இடத்தில் இரத்தம் பெருகியது. உடனே அந்த இடத்தை அகழ்ந்து பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் கிடைத்தது. இதுவே இப்போது கருவறையில் இருக்கும் மகாலிங்க சுவாமி ஆகும்.
துணைத் தெய்வங்களின் சிலைகள்
சொரிமுத்து அய்யனார் சிலையுடன் சங்கிலி பூதத்தார் சிலை மற்றும் துணைத் தெய்வங்களாக இருக்கும் அனைவருடைய சிலைகளும் புதையுண்டு இருந்தன. அவற்றையும் அகழ்ந்து எடுத்து அவற்றிற்குத் சன்னதிகள் அமைத்தனர்.
கதை 2
சங்கிலி பூதத்தார் கதை
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஒவ்வொரு பொருளாக வரிசையாக வந்தது. அமிர்தம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஆலகால விஷம், கற்பக விருட்சம், மகாலட்சுமி, காமதேனு, பசு இப்படி வரிசையாக பொருட்கள் வந்தபோது சில பூதகணங்களும் வந்தன. அந்த பூதகணங்களின் தலைவராக சங்கிலி பூதம் வெளியே வந்தார். அவர் கையில் அமிர்த கலசத்துடன் தோன்றியதால் அவரை அமிர்தபாலன் என்று அழைத்தனர்.
சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை தான் வசிக்கும் கைலாய மலையின் காவலனாக நியமித்தார் சங்கிலி பூதமும் கைலாய மலையை கவனமாக காவல் காத்து வந்தது. ஒரு நாள் சிவபெருமான் இரவில் வீடு திரும்ப காலதாமதம் ஆகியதால் பார்வதி தேவி பூலோகத்திற்கு போய் சிவபெருமானை அழைத்துக் கொண்டு வா என்று சங்கிலி பூதத்துக்கு ஆணையிட்டார். சங்கிலி பூதத்தார் பூலோகம் வந்து வந்து சிவபெருமானைத் தேடினார். அப்போது அவ்வழியாக வந்த சிவபெருமானைப் பார்த்து விட்டார் உடனே சிவபெருமான் தன்னிடம் 'என் பேச்சைக் கேட்காமல் என் உத்தரவை மீறி கைலாயத்தை காவல் காக்காமல் அப்படியே விட்டு விட்டு ஏன் வந்தாய? என்று கேட்பாரோ என்ற அச்சத்தில் அங்கே கிடந்த பாம்பு சட்டைகள் போய் புகுந்து கொண்டார்.
சிவபெருமான் சங்கிலி பூதம் பாம்பு சட்டைக்குள் புகுந்து கொண்டதை தன் ஞான திருஷ்டியால் அறிந்துகொண்டார். 'ஏய் சங்கிலி பூதமே இனி நீ கைலாயம் காக்க வேண்டாம். பூலோகத்திற்கு வந்து விட்டாய் அல்லவா! இங்கிருக்கும் மக்களைக் காவல் காத்து நிற்பாயாக' என்று கட்டளையிட்டு விட்டு கைலாயம் சென்றார். சிவபெருமானின் கட்டளைப்படி சங்கிலி பூதத்தார் பூலோகத்தில் மக்களைக் காவல் காத்து வருகின்றார்.சங்கிலி பூதத்தாருக்குப் பர்வதமலை, திருச்செந்தூர், திருக்குறுங்குடி, திருநெல்வேலி என பல இடங்களில் சந்நிதிகள் உண்டு.
பட்டவனார் கோயில்
முத்துப் பட்டர் என்ற ஐயர் சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த பொம்மக்கா திம்மக்கா என்ற சகோதரிகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். சகோதரிகள் இருவரும் தம் தந்தையார் வாலை பகடையிடம் அனுமதி பெறுமாறு கூறினர். இவர்களின் தந்தையாரை சந்தித்து முத்து பட்டர் கேட்டதற்கு அவர் 'எங்களைப் போல ஆடு மாடு மேய்க்க வேண்டும். இறந்து போன மாட்டின் தோலை உரித்து செருப்பு தைத்தல் கமலை தைத்தல் போன்ற எங்கள் குலத்துக்குரிய தொழில்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு நீ செய்தால் உனக்கு என் இரண்டு பெண்களையும் திருமணம் செய்து தருவேன்' என்றார். முத்து பட்டரும் செய்வதாக சம்மதித்து இவ்வேளைகளை இவர் வீட்டில் இருந்து செய்து வந்தார் இவர் வேலைகளில் சிறப்பாக இருப்பதை பார்த்து பின்பு வாலை பகடை தன் இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார்.
முத்துப்பட்டன் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரது மாடுகளைச் சிலர் கவர்ந்து சென்றனர். உடனே இவர் அவர்களுடன் போரிட்டு மாடுகளை மீட்டு தன் காயத்திள் இருந்து வடிந்த இரத்தத்தை ஒரு நீர் நிலையில் குனிந்து கழுவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கோழை அவரை முதுகில் குத்திக் கொன்று விட்டான். முத்துப்பட்டர் இறந்ததும் அவர் மனைவி திம்மக்கா பொம்மக்கா இருவரும் உடன்கட்டை ஏறி உயர்நீத்தனர். எனவே முத்து பட்டருக்கும் இங்குத் தனிக் கோவில் வைத்து வழிபடுகின்றனர்.
பட்டவராயனுக்கு செருப்பை காணிக்கையாக செலுத்துகின்றனர். கிடாவெட்டி பொங்கல் எடுதலும் உண்டு.
தலவிருட்சம்
சொரிமுத்தையனார் கோவிலில் இலுப்பை மரம் தலவிருட்சம் ஆகும். இதில் மணி கட்டிவிடும் பழக்கம் உள்ளது. கட்டி விடப்பட்ட மணிகள் நாளடைவில் மரத்துக்குள்ளேயே அமிழ்ந்து விடுவதால் இதனை மணி முழுங்கி மரம் என்கின்றனர். மணி முழுங்கி மரத்தின் அடியில் பல சாமி சிலைகள் உள்ளன. அவை விநாயகர், பூதத்தார், மாடசாமி, பட்டவராயர், பிரம்ம ராட்சசி ஆகியவை.
எழுத்து ஆதாரங்கள்
சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ள பெரிய சத்திரத்தை பெரியசாமி தேவர் என்பவர் 1824 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 23ஆம் நாள் கட்டினார் என்று கல்வெட்டு தகவல் உள்ளது. இக்கோவிலை நிர்வகித்து வரும் சிங்கம்பட்டி ஜமீன்தார் சாமிதுரை அவர்களின் தாயார் சிவனாயி அம்மாள் சிவனாயி அம்மாள் சொரி முத்து அய்யனார் கோவிலுக்கு நிறைய கொடைகள் வழங்கியுள்ளார்.
சொரி முத்து அய்யனார் கோயிலில் 1950 ஆம் ஆண்டு பிச்சாண்டி ஆசாரி மூலமாக புதிய மணி செய்து மாட்டி உள்ளனர். அதற்கு முன்பு 1932 ஆம் ஆண்டு ஒரு மணி மாட்டப்பட்டது. அதை 1950இல் அகற்றி விட்டனர். 1900 ஆவது ஆண்டு ஆனி மாதம் 30ஆம் நாள் நிறை பௌர்ணமி அன்று வள்ளலார் ஜீவசமாதி அடைந்தார் என்று தகவளையும் இங்கேயுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.
வில்லுப்பாட்டு கதை
சொரிமுத்து அய்யனார் கோயில் கொடையில் வில்லுப்பாட்டு மற்றும் மகுடம் இசைக்கின்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். வில்லுப்பாட்டுப் பாடுகின்றவர்கள் சொரிமுத்து அய்யனார் வரலாற்றை புராணக் கதையாக்கிப் பாடுவார்கள். தென் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்கு கோவிலுக்கு வில்லுப்பாட்டு கதையை தலபுராணம் போல போல மக்கள் நம்புகின்றனர். அய்யனார் கதையில் சாஸ்தாவும் கலந்துவிடுவார் .
அய்யனார்-சாஸ்தா-ஹரிஹரபுத்திரன்
சங்க காலத்திற்கு முன்பே ஆசீவக மெய்யியல் தமிழகத்தில் தோன்றியது. அதனைத் தோற்றுவித்த மற்கலி நாதருக்கு அய்யனார் என்ற பெயரில் சிலை வைத்தனர். அறிவின் குறியீடாகக் கொண்டு சிலை யானை சிலையையும் அய்யனார் முன்பு வைத்தனர். அசோக மாமன்னர் ஆசிவகர் தலைக்கும் ஒரு பொன் என்று அறிவித்து 18 ஆயிரம் பேரைக் கொன்று குவித்த பிறகு ஆசிவகம் முற்றிலுமாக மறைந்து விட்டது. ஆசிவகம் என்ற ஒரு மெய்யியல் நடைமுறையில் இருந்ததைக் காப்பியங்களில் காணப்படும் விவாதங்களின் வழியாக அறிகின்றோம். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாஷம் என்ற அறிஞர் ஆசீவக மெய்யியல் குறித்து ஒரு ஆங்கில நூல் எழுதியுள்ளார்.
காப்பிய காலத்தில் செல்வாக்குடன் இருந்த ஆசிவகம் பின்பு மெல்ல மறைந்தது. அடுத்து பௌத்தம் தென் மாநிலங்கள் இடையே அதிவேகமாக பரவியது. இங்கிருந்த மற்கலி நாதர் (ஐயனார்) மற்றும் யானை சிலைகள் கௌதம புத்தரின் வடிவாகக் கருதப்பட்டு சாத்தன் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சாத்தன் அல்லது அய்யனார் சிலைகள் நீர் நிலைகளை ஒட்டி அமைக்கப்பட்டன. யோகப் பட்டி அணிந்து குத்துக்காலிட்டு அமர்ந்த கோலத்திலும் ஒரு காலை மடித்து மறு காலைத் தொங்கவிட்டு செண்டாயுதம் தரையில் ஊன்றி அமர்ந்த கோலத்திலும் சிலைகள் வைக்கப்பட்டன. அய்யனார் அல்லது சாத்தன் சைவ சாமியாகவே இன்றும் உள்ளது. இரத்தப்பலி கிடையாது.
பக்தி இயக்கக் காலத்தில் சமண பௌத்த சமயங்களின் செல்வாக்கு மறைந்து சைவ வைணவ சமயங்கள் செல்வாக்கு பெறத் தொடங்கின இக்காலகட்டத்தில் மக்கள் பெருவாரியாக வணங்கி வந்த அய்யனார் அல்லது சாத்தன் என்னும் தெய்வம் சைவ வைணவக் கலப்புத் தெய்வமாக புதிய கதை கூறப்பட்டது. சமஸ்கிருத ஒலியில் சாத்தன் சாஸ்தா என்று மாற்றப்பட்டான். புதிதாகத் தோன்றிய ஹரிஹர புத்திரன் கதை இதற்கான ஆதாரமாக விளங்கியது.
வீர யுகத்தில் நடுகல் நட்டு வணங்கி வந்த வீரனை அதற்கு அடுத்த காலகட்டத்தில் ஐயன் என்று அழைத்தனர். கல் வழிபாடு சிலை வழிபாடாக உருமாறியது. வீரன் கோயில்கள் அய்யனார் கோவிகளாக மாறின என்று என்று கோ சசிகலா தன்னுடைய அய்யன் சமூகமும் வளர்ச்சியும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக அய்யனார் வழிபாடு பல மாற்றங்களை சந்தித்து வளர்ந்து வந்துள்ளது.
சாஸ்தா கதை
மனுவும் சதருபையும் மனித குலத்தின் முதல் ஆணும் பெண்ணும் ஆவர். அவர்களுக்குப் பிறந்தவர் காசிப முனிவர். இவருக்கு திதி அதிதி என்று இரண்டு மனைவிகள். திதிக்கு பிறந்தவர்கள் அசுரர்களாயினர். அதிதிக்குப் பிறந்தவர்கள் தேவர்களாகினர். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகை உணர்வுடன் இருந்தனர்.
தேவர்கள் இந்திரலோகத்தை கைப்பற்றினர். இதற்குத் தலைவனாக இந்திரன் இருந்தான். ஒரு நாள் துர்வாச முனிவர் இந்திரனைக் காண இந்திரலோகத்திற்கு வந்தார். அவர் பராசக்தியின் அருள் பிரசாதமான மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவனும் அந்த மாலையைக் கண்டு கொள்ளாமல் தனது வெள்ளை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். மாலையைச் சுற்றி வண்டுகள் மொய்த்ததால் யானையின் கண் பக்கமாக வண்டுகள் ரீங்காரித்தன. அதனால் ஆத்திரமடைந்த ஐராவதம் தன் தலையின் மீது இருந்த பூமாலையைத் தட்டி விட்டு காலால் மிதித்தது. பராசக்தியின் மாலை யானைக் காலால் மிதிபட்டதைக் கண்ட துர்வாசர் இந்திரனைப் பூலோகத்திற்கு போகும்படி சபித்தார். ஐராவதம் தன் நிறத்தை இழந்து கருப்பாகி காட்டில் திரியட்டும் என்றார்.
இந்திரன் இல்லாத தேவலோகம் நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடந்தது. இதுவே தக்க தருணம் என்று உணர்ந்த அசுரர்களின் தலைவன் மலக்கன் இந்திரலோகத்தின் தலைநகரான அமராவதியைக் கைப்பற்றினான். தேவர்கள் அவனிடம் அடிமைகள் ஆயினர். நரை, திரை, மூப்பினால் அவதிப்பட்டனர். அவர்களின் துன்பம் காணப் பொறுக்காமல் பெருமாள் அவர்களுக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். 'பாற்கடலை கடையுங்கள். அமிர்தம் கிடைக்கும். அதை நீங்கள் உட்கொண்டால் மரணமில்லா பெருவாழ்வு பெறுவீர்' என்றார்.
இந்திரன் பூலோகத்திற்குச் சென்றதால் தங்களின் வலிமையும் வனப்பும் இழந்து சோர்ந்து போயிருந்த தேவர்கள் பெருமாள் காட்டிய வழியில் அசுரர்களை நைச்சியமாக ஏமாற்றி உங்களுக்கும் அமிர்தம் தருகிறோம் என்று பொய் சொல்லி வஞ்சகத்தால் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து ஆளுக்கு ஒரு புறம் நின்று மந்திர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்தனர். தாங்களே அமிர்தத்தை உட்கொண்டனர். இதற்கு பெருமாளும் மோகினி அவதாரத்தில் வந்து உறுதுணை புரிந்தார்.
மோகினியின் அழகைக் கண்ட சிவபெருமான் மோகினியுடன் இணைந்ததில் பிறந்தவர் தான் ஹரிஹர புத்திரன் ஆன சாஸ்தா. இக்கதை அய்யனார் என்ற சாஸ்தாவுக்கு சொல்லப்படுகின்ற புராணக் கதை ஆகும்.
கோயில் கொடை
தென் மாவட்டங்களில் கோயில் விழாக்களை கொடை என்று அழைப்பார்கள். ஐயனாரைக் குலதெய்வமாக கொண்ட மக்கள் எந்த ஊரில் இருந்தாலும் கொடைமககு வந்துவிடுவர். அனைவரிடம் இருந்தும் கோயில் கோடைக்கு தலைக்கட்டு வரி வசூலிக்கப்படும். பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். குடும்பங்களின் கூடுகை, சந்திப்பு நடைபெறும். திருமணங்கள் முடிவாகும். குடும்ப விழாவும் கோவை விழாவும் சேர்ந்தே நடைபெறும்