ஆன்மீகப் புரிதல் என்பது எது?
ஆன்மீகம் என்பது உண்மையில் என்ன., உங்கள் ஆன்மாவை அல்லது உயிரை பற்றி தெரிந்து கொண்டு அதனை அதன் இயல்பு நிலையில் அணுகி அதன் மூலத்தை அடைவது தான்.
இதற்கு ஆயிரம் ஆயிரம் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன, கோடான கோடி புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன இருந்தும் முழுமையாக அனைவரும் ஆன்மிகவாதிகள் ஆகிவிட்டோமா? என்றால் இல்லை தான்.,
நாம் வாழும் இந்த அற்புதமான வாழ்க்கையின் அடிப்படை புரிதலில் இருந்து தான் ஆன்மீகம் ஆம்பிக்கிறது.
சிந்தனையாளர்கள் இந்த கோணத்தை அவரவர் ரசனைக்கு ஏற்ப அணுகுகின்றனர்.
திரு ரா.ரெஜித் குமார் அவர்களின் ஓம் முருகா புத்தகத்தில் ஓர் அழகான கதை சொல்லப்பட்டு இருக்கும்.
இந்த கதையை உங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு புரிதலை உங்களால் உணர முடியுமானால் நீங்கள் ஆன்மீகத்தில் பயணிக்க தகுதி படைத்தவர் என்று அர்த்தம்.
ஒரு மிகப்பெரிய கடலில் மிகக் கம்பீரமான ஒரு கப்பல் பயணிப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த மிகப் பெரிய கப்பலுக்குள் லட்சக்கணக்கான பெட்டிகள் இருக்கின்றன.
பெட்டிகள் முழுவதும் ஆப்பிள் பழங்களால் நிரப்பப்பட்டு உள்ளன.
அந்த ஆப்பிள் பழங்களுக்கு இந்த கப்பல் என்பது ஒரு வாகனம் ஆகும். இன்னும் சற்று உள்ளே சென்று கப்பலில் இருக்கக்கூடிய பெட்டிகளில் ஒரு பெட்டிக்குள் என்ன இருக்கின்றது என்பதைப் பார்த்தால் . அந்த பெட்டிக்குள் இருக்கக்கூடிய பழங்களில் ஒரு பழத்தில் இரண்டு புழுக்கள் உள்ளன.
இந்தப் புழுக்களுக்கு இந்த ஆப்பிள் தான் உலகம். அந்த புழுக்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் அந்த ஆப்பிள் பழத்திற்குள்ளேயே இருக்கின்றது.
ஒரு காலகட்டத்தில் அந்த புழுக்கள் பேச ஆரம்பிக்கின்றன. எப்பொழுதுமே அறிமுகங்களும் சிறு பேச்சுகளும் உரையாடலாக மாறும்.
உரையாடல்கள் படிப்படியாக விவாதங்களாகவும், விவாதங்கள் வாதங்களாகவும் மாறும். இங்குப் பேசத் தொடங்கிய இந்த இரண்டு புழுக்களும் தங்களில் யார் பெரியவர் என விவாதிக்கத் தொடங்குகின்றன.
விவாதம் என்றாலே அது சண்டையில் தான் முடியும். சண்டையிடும் புழுக்கள் ரத்தம் சிந்தி தன்னை உயர்த்தவராக காட்டிக்கொள்ள போராடுகிறது.,
இப்பொழுது நம் பார்வையைக் கொஞ்சம் விசாலமாக்கலாம். அந்தக் கப்பலில் கோடிக்கணக்கான ஆப்பிள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஏதோ ஒரு இடத்திற்கு இவை அனைத்தும் பயணமாகின்றன.
எங்கோ இருக்கும் யாரோ ஒருவரின் நோக்கத்திற்காக இந்த பழங்கள் அனைத்தும் பயணமாகிக்கொண்டிருக்கின்றன. இந்த பயணத்தின் நோக்கம் யாருக்கும் தெரியாது.
கப்பலில் வேலைசெய்பவர்கள், பழங்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் என யாருக்குமே தெரியாது.
இந்த சிக்கலான விவரங்கள் எதுவும் தெரியாமல், அந்த கப்பலில் உள்ள லட்சம் கோடி ஆப்பிள்களில் ஒன்றிற்குள் இருக்கும் இரண்டு புழுக்கள் முடிவில்லாத மற்றும் அர்த்தமற்ற சண்டையில் ஈடுபட்டிருக்கின்றன.
இப்பொழுது மூன்றாவதாக ஒரு புழு வந்தது, இந்த புழு மிகவும் அறிவாளி. அதாவது, இவ்வளவு பெரிய கப்பலின் பயணத்தில், தான் ஒரு சாதாரண புழு என்ற அறிவு அதற்கு இருந்தது. இதை ஞானமாக மலர்ந்த அறிவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வளவு புத்திசாலித்தனமான நுண்ணறிவைக் கொண்ட இந்த அறிவார்ந்த புழு. யார் பெரியவர் என்று வாதிட்டு தன்னுடைய நேரத்தை வீணடிக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? நிச்சயம் கிடையாது.
இந்த விழிப்புணர்வு தான் இந்த புழுவை ஆன்மீகவாதியாக்குகின்றது. இந்த விழிப்புணர்வு தான் இந்த சண்டையில் உள்ள அற்பத்தனத்தை மூன்றாவது புழுவிற்கு உணர்த்துகின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தக் கப்பலில் இன்னும் லட்சக் கணக்கான ஆப்பிள்கள் உள்ளன என்பதனையும், அதன் பயணம் ஒரு தெய்வீக சக்தியின் செயல் திட்டம் என்பதனையும் இந்த மூன்றாவது புழு அறிந்திருந்தது.
மேலும், இந்த பயணத்தின் நோக்கம் மற்றும் செயல் திட்டத்தை அறிந்து கொள்ளும் அளவிற்கு தனக்கு போதிய அறிவு இல்லை என்பதையும் அது தெரிந்துவைத்திருந்தது. என்னைப் பொறுத்தவரையில், இந்த எண்ணம் தான் ஆன்மீகம்.
இது போன்ற எண்ணங்கள் தான் நம் வாழ்வு மிக மிக எளிமையானது என்பதனை நமக்குப் புரியவைக்கின்றது. இது போன்ற சிந்தனைகள் தான் சாதாரண புழுக்களைச் சிறந்த புழுக்களாக மாறுவதற்கு ஊக்குவிக்கின்றன.
சிறந்த புழுக்கள், மற்ற புழுக்களின் முக்கியத்துவம் மற்றும் குறைகளைப் புரிந்துகொள்கின்றன. மொத்தத்தில், வாழ்க்கை எவ்வளவு பரபரப்பானதாக இருந்தாலும் இந்த சிறந்த புழுக்கள் சிறிய சிறிய விஷயங்களையும் மகிழ்வுடன் பாராட்டி, அனுசரித்து, வாழ்க்கையைக் கொண்டாடுகின்றன.
இவையே, வாழ்க்கையில் எது முக்கியம்? எதன் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதனையும் மற்ற புழுக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
மேலும், வாழும் காலத்திற்குத் தேவையான மகிழ்ச்சி மற்றும் நிம்மதியைப் பெறக் கூடிய மன தைரியத்தையும் பெறுகின்றன.
இதை தான் விழிப்புணர்வு என்று கூறுவர்., இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் நாம் எத்தனை சிறு புழு, நம்மை சுமந்து கொண்டு செல்லும் இந்த பூமி, இன்னும் அநேக நட்சத்திரங்கள் கோள்கள் இவையெல்லாம் எந்த அடிப்படையில் இயங்குகின்றன., இதற்கான ஆற்றல் எங்கிருந்து வருகின்றது, இத்தனை பிரம்மாண்டத்திற்கும் எது சக்தியாக இருக்கிறதோ அது தான் நமக்குள்ளும் இருக்கிறது என்ற உண்மையை புரிந்து கொள்வதற்கே எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டும்.
சிந்திப்போம்... உண்மையான ஆன்மீகம் இதுவே.
உண்மை என்றால் பிற்காலத்தில் வருபவர்கள் சரியாக யூகிக்க மாட்டார்கள் என்பதால் தான் வள்ளுவர் இதை மெய் பொருள் என்றார்.
மெய் பொருளை அறிவினால் தான் அறிய முடியும் என்பது தெரிந்து தான் அறிவே தான் தெய்வம் என்று தாயுமானர் கூறினார்.
நாமும் அறிவின் துணையுடன் மெய் பொருளை உணர்ந்து தெளிவோம்.
வாழ்க வளமுடன்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |