பெருமாள் கையில் இருக்கும் சங்கு சக்கரம் பின்னால் இருக்கும் உள்ளார்ந்த தத்துவம்
பெருமாள் என்றாலே அவருடைய சங்கு சக்கரமும் சேர்ந்து தான் நினைவுக்கு நம் வரும். அப்படியாக பெருமாள் கைகளில் இருக்கக்கூடிய சங்கு சக்கரம் பின்னால் இருக்க கூடிய உள்ளார்ந்த தத்துவம் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
பெருமாள் கைகளில் இருக்கக்கூடிய சங்கு, சக்கரம் மனித வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய தத்துவமாக உள்ளது. அதாவது சங்கு (பாஞ்சசன்யம்) என்பது கருணையின் சின்னமாக இருக்கிறது. பாஞ்சசன்யம் எனும் சங்கில் இருந்து வெளிவரும் நாதம் "ஓம்" என்கின்ற ஒலியில் இருக்கும்.
இது ஐம்புலன்களை அடக்கும் சக்தி கொண்டது. மேலும், மகாபாரதம் போர்க்களத்தில் போர் தொடங்கும் முன் ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்சசன்யம் சங்கை ஊதினார். அந்த நாதம் என்ன சொல்கிறது என்றால் தர்மம் எந்த நிலையிலும் தோற்று போகாது என்கிறார்.

எவ்வளவு பெரிய சூழ்ச்சிகள் செய்தாலும் இறுதியில் தர்மமே ஜெயித்தாகும் என்பதை அந்த சங்கு நமக்கு உணர்த்துகிறது. அதனால் இங்கு மனிதர்கள் தவறு செய்யும் பொழுது இறைவன் மிகவும் அன்போடு அவர்களுக்கு தங்கள் செய்வது தவறு என்று ஒரு வாய்ப்பை அளிக்கிறார். அதாவது மனசாட்சியாக நம்முள் செயல்படுகிறார். அதுவே சங்கின் தத்துவமாக இருக்கிறது.
பெருமாள் கையில் இருக்கக்கூடிய சக்கரமானது நீதியின் சின்னம் (சுதர்சன சக்கரம்) ஆகும். இந்த சுதர்சன சக்கரம் என்பது அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட கூடிய தெய்வீக ஆயுதமாகும். புராணங்களில் அரக்கர்கள் அளவுக்கு மீறி ஆணவம் கொண்டு அவர்கள் மூவுலகையும் துன்புறுத்தும் நேரத்தில் நாராயணன் சக்கரத்தை ஏந்தி தீமையை அழிப்பதற்கு வருகிறார்.
அதாவது நமக்கு சக்கரம் சொல்ல கூடிய செய்தி என்னவென்றால் பிரபஞ்சத்தில் தவறு செய்யக் கூடியவர் எந்த நிலையிலும் தப்பிக்க முடியாது. நீதிக்கு முன் எல்லோரும் சமம் என்று அவர் சொல்லுகிறார். மேலும் ஆண்டாள் திருப்பாவையில் “சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்” என்று பாடுகிறாள்.

இதற்கு காரணம் கிருஷ்ணன் ஒரே நேரத்தில் கருணை கொண்டுவராகவும், நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் விளங்குகிறார். ஆக, கிருஷ்ண பகவான் ஒரு மனிதனை அன்போடும் கண்டிப்போடும் சேர்த்து ஒரு நல்ல மனிதனாக மாற்றுகிறார். இறைவன் ஒருபொழுதும் மனிதர்களை தண்டிக்க விரும்பவில்லை.
அவர் மனிதர்கள் செய்யும் தவறுகளில் இருந்து திருத்திக் கொள்ள வேண்டும் அவர்களை இன்னும் சிறந்த மனிதராக உயர்த்த விரும்புகிறார். அதனால் தான் ஒரு கையில் கனிவும் இன்னொரு கையில் கண்டிப்புடனும் நமக்கு பெருமாள் காட்சி கொடுக்கிறார்.
ஒரு மனிதனை தர்மத்தின் வழி நடத்துவது தான் சங்கு சக்கரத்தின் உண்மையான நோக்கமாகும். முடிவாக சங்கு கருணையையும் சக்கரம் நீதியையும் மனிதருக்கு உணர்த்துகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |