சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளைகளிலும் சுவாமியும் அம்பாளும் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ஆம் நாள் தேர் திருவிழாவான இன்று அதிகாலை கங்காள நாதர் பிச்சாடனராக திருவீதி உலா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள், விநாயகர் ஆகிய 3 சாமிகளும் ஊர்வலமாக வந்து 3 தேர்களிலும் தனித்தனியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
அதனை தொடர்ந்து 3 தேர்களும் ரத வீதியில் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தேரோட்டம் நடைபெற்றது.
மேலும் இன்று மாலை மண்டகப்படிக்கு தங்க பல்லக்கில் சுவாமி எழுந்தருளுகிறார்.
இரவு 12 மணிக்கு திருவிழாவிற்காக வந்த வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசுவாமி, மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி ஆகிய 3 குழந்தைகளும் தாய் தந்தையரிடம் இருந்து விடைபெறும் "சப்தாவர்ணம்" நிகழ்ச்சி நடைபெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |