2026: தமிழ் புத்தாண்டு அன்று தரிசிக்க வேண்டிய 3 முக்கியமான கோவில்கள்
தமிழ் மாதத்தில் முதல் மாதமான சித்திரை மாதத்தை நாம் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடி வருகின்றோம். அதாவது ஜோதிடத்தில் சூரிய பகவான் சித்திரை மாதம் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சரிப்பார்.
இந்த தினத்தை தான் நாம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றோம். அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெகு சிறப்பாக உலகம் எங்கிலும் இருக்கக்கூடிய தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த நாளில் நம் வீடுகளில் குடும்பங்களோடு சேர்ந்து இறை வழிபாடு செய்வதும் மந்திரங்களை பாராயணம் செய்வதும் மிகச் சிறந்த நல்ல பலன் கொடுத்தாலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் தரிசிக்க வேண்டிய முக்கியமான மூன்று கோவில்களை பற்றி பார்ப்போம்.

1. மதுரை மீனாட்சி அம்மன்:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தமிழகத்தில் மிகப்பெரிய ஆலயமாக கருதப்படுகிறது. சிவபெருமான் இங்குதான் அவருடைய 64 திருவிளையாடலையும் நிகழ்த்திருக்கிறார்.
ஆக தமிழ் புத்தாண்டு அன்று மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் வைர கிரீடம் அணிவிக்கப்பட்டு தங்கபாவாடை அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அவர்கள் காட்சி கொடுப்பார்கள். இதை காண்பது மிக மிக அரிதான ஒன்றாகும். இந்த அரிய அலங்காரத்தை காண்பது நமக்கு கோடி புண்ணியத்தை பெற்றுக் கொடுக்கும்.
2. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம்:
நினைத்தாலே முக்தி தரக்கூடிய அற்புதமான திருத்தலம் என்றால் அது திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் தான். தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கி விடுவார்கள்.
இந்த நாளில் அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கு நடைபெறுகின்ற அபிஷேகங்கள் பக்தர்களுடைய மனதை தூய்மைப்படுத்துவதோடு அவர்களுக்கு வாழ்க்கையில் சந்திக்கின்ற தோஷங்களை யாவும் நிவர்த்தி செய்கிறது. இந்த நாளில் கிரிவலம் செல்வதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்ற பாவச் சுமைகள் குறைந்து ஒரு புதிய தொடக்கம் அமைகிறது.

3. சென்னை வடபழனி முருகன் ஆலயம்:
சென்னையின் மையப் பகுதியில் இருக்கக்கூடிய வட பழனி முருகன் ஆலயம் நகர வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு அமைதியை கொடுக்கக் கூடிய ஒரு ஆன்மீக தலமாக இருக்கிறது. தமிழ் புத்தாண்டு அன்று முருகப்பெருமானுக்கு சந்தன காப்பு மற்றும் தங்க கவச அலங்காரம் செய்யப்படும்.
தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானுக்கு தரிசனம் செய்ய வருகை தருவார்கள். இந்த நாளில் முருகப்பெருமானை தரிசனம் செய்தால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி முழு ஆசீர்வாதம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |