மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
முருகப்பெருமானின் 7ஆம் படை வீடான மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கோவையை அடுத்த மருதமலையில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
அந்தவகையில், இந்த ஆண்டிற்க்கான தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி இன்று அதிகாலை கோ பூஜை செய்யப்பட்டு கோவில் நடைதிறக்கப்பட்டது.
பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமிக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முன் மண்டபத்தில் தைப்பூச திருவிழாவுக்கான சேவல் பொறித்த கொடியேற்றுவதற்கான சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜைகள் அனைத்தும் முடிந்ததும் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான சேவல் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
தேரோட்டத்தையொட்டி அதற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
கொடியேற்றத்தை யொட்டி விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து சுவாமிக்கு திருவீதி உலா நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி அன்னவாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. மேலும், மாலை 4 மணிக்கு வேள்வி பூஜை நடக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |