மகாபாரதம்: வாழ்க்கையில் வெற்றி பெற அர்ஜுனனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை
மகாபாரதத்தில் அர்ஜுனன் தலைசிறந்த வீரன் என்று நாம் அறிந்திருப்போம். ஆனால் அவருடைய வீரமானது உடல் வலிமையில் மட்டும் இல்லாமல், மன வலிமையினாலும் தான் சிறந்து விளங்குகிறது.
இன்றைய காலகட்டங்களில் பலரும் அவர்களுடைய மன நிலையில் தெளிவு இல்லாமையால் தடுமாற்றம் அடைகிறார்கள். அதனால் அவர்கள் நிலை தடுமாறி செல்கிறார்கள். அப்படியாக மகாபாரதத்தில் அர்ஜுனன் வாழ்க்கையில் வெற்றி பெறவும், கடினமான காலங்களை கடந்து செல்லவும் நமக்கு கொடுக்கக்கூடிய முக்கியமான அறிவுரைகளை பற்றி பார்ப்போம்.

1. அர்ஜுனன் நமக்கு "பறவையின் கண்" என்கின்ற ஒரு வித்தையை கற்றுக் கொடுக்கிறார். இது அவருடைய குரு துரோணாச்சாரியார் கற்றுக் கொடுத்தது. அதாவது, பறவையை குறி வைக்கும் பொழுது பலர் அந்த பறவையை சுற்றி இருக்கக்கூடிய மரம், செடி, வானம் போன்றவை மீது அவர்களுடைய பார்வை செல்லும்.
ஆனால் நம்முடைய எண்ணமானது அந்த பறவையின் மீது மட்டும் இருக்கின்ற பொழுது நாம் அதை எளிதாக அடைந்துவிடலாம் என்கிறார். ஆக, ஒரு விஷயத்தை செய்யும் பொழுது அந்த விஷயத்தை செய்வதில் மட்டும் கவனம் செலுத்தி அதனால் வரக்கூடிய பலன்களை எதிர்பாராமல் இருப்பதும் நமக்கு வெற்றி கொடுக்கும் என்று உணர்த்துகிறது.
2. மனிதன் வாழ்க்கையில் ஒழுக்கத்தை முறையாக பின்பற்ற வேண்டும். ஒழுக்கமுடைய மனிதன் வாழ்வில் பெரிய பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் இந்த காலகட்டங்களில் ஒழுக்கத்தை பலரும் தவறான வழியில் புரிந்து கொள்கிறார்கள்.
ஒழுக்கம் என்பது நம்மை கட்டுப்படுத்தக்கூடியது என்று எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையில் ஒழுக்கத்தை நாம் பின்பற்றும் பொழுதுநாம் முழு சுதந்திரத்தை அடைகிறோம். நாம் எதைப் பற்றியும் கவலை பட தேவையில்லை. மனமானது சரியான பாதையில் செல்கின்றோம் என்ற அமைதியை பெற்று நல்ல உறக்கத்தையும் மன வலிமையையும் பெற்று தடுமாற்றம் இல்லாமல் வாழ்கிறது.

3.வாழ்க்கையில் சமயங்களில் நம் மனமானது மிகுந்த குழப்பம் அடைகிறது. அதேபோல் தான் அர்ஜுனனும் குருசேத்திர போரில் மிகுந்த கவலையும் அச்சமும் கொண்டான். அவ்வாறு பயம் வருவது இயல்பு என்றாலும் அதை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதில்தான் நம்முடைய வெற்றி இருக்கிறது.
இவ்வாறான நேரங்களில் மனம் குழப்பம் அடையும் பொழுது நிதானமாக அமர்ந்து யோசித்து ஒரு சரியான பாதையை தேர்ந்தெடுப்பது அவசியமாகும் என்பதை அர்ஜுனன் உணர்த்துகிறார். நாம் அமைதியாக ஒரு விஷயத்தை அணுகும் போது நிச்சயம் நமக்கு ஒரு தெளிவான பதில் கிடைக்கும் என்று அர்ஜுனன் தெளிவு படுத்துகிறார்.
4. மகாபாரத போரில் அர்ஜுனன் உடைய வெற்றியானது உடல் வலிமையை காட்டிலும் மன அடக்கத்தினாலும் வந்தது ஆகும். அதாவது ஒரு மனிதனுக்கு கோபம் பெருமை, பொறுமையின்மை ஆகியவை மனதை வலு இழக்க செய்யும். சரியான பயிற்சி எடுத்தவர்கள் முதலில் அவர்களுடைய எண்ணங்களை கட்டுப்படுத்தி வருகின்ற பிரச்சனையால் உணர்ச்சிவசப்படாமல், அதை சமாளிக்க முயல்கிறார்கள்.

இது இன்றைய காலகட்டங்களில் பெரும்பாலான இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும். சாதரண விஷயத்திற்கு கூட பலரும் மனச்சோர்வடைந்து விடுகிறார்கள். அவர்களை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடைய மனதை தயார் செய்து கொள்வது அவசியம் என்று அர்ஜுனன் சொல்ல கூடிய இந்த அறிவுரையானது மிகப் பொருத்தமாக இருக்கும்.
5. நம் வாழ்க்கையில் எதை செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்க வேண்டும். அர்ஜுனன் குருஷத்திரப் போரில் "நான் என்னும் அகங்காரத்தால்" போர் புரியவில்லை. ஆனால் தர்மத்தை நிலை நாட்ட அவர் போர் புரிந்தார்.
ஆதலால் நாம் செய்கின்ற செயலில் ஒரு காரணம் அமைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய செயல் சிறப்பாக தெளிவாக அமையும். இல்லையென்றால் நாம் பாதி வழியில் ஊக்கம் இழந்து காணப்படுவோம். சரியான முடிவு மட்டுமே நம்மை எந்த ஒரு இடத்திலும் தளர்வடைய செய்யாமல் நம்மை முன்னோக்கி நகர்த்திச் செல்லும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |