உலகின் மூன்றாவது உயரமான முருகன் சிலை எங்கு உள்ளது தெரியுமா?
வேலூர் மாவட்டத்தின் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்துள்ள மலைக்கோயிலே தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயில். வேலூர் மாவட்டத்தில் உள்ள புதுவசூர் கிராமத்தில் 500 அடி உயரம் கொண்ட குன்றின் மீது முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இயற்கை சூழலுடன் தேடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் அளித்து மகிழ்கிறார் தீர்த்தகிரி முருகப்பெருமான்.
தலத்திற்கான பெயர்க்காரணம் தெரியுமா?
கோயிலின் அடிவாரத்தில் உள்ள சுனையின் காரணமாகவே இந்த கோயிலுக்கு தீர்த்தகிரி என்னும் பெயர் வந்துள்ளது. ஆச்சரியமா இருக்கா? ஆம் இந்த பாறையின் அடியில் தானாக தோன்றிய சுனை நீர் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இதனால் தான் இந்த தலமும் தீர்த்தகிரி என அழைக்கப்படுகிறது.
(தீர்த்தம் + கிரி = புனித நீர் கொண்ட மலை). கிரி என்றால் மலை எனப்பொருள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த தீர்த்தம் மனதில் தோன்றும் பாவங்களையும் நோய்களையும் நீக்கும் சக்தி கொண்டது.
தல வரலாறு:
தீர்த்தகிரி முருகன் கோயில் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். சூரபத்மனை முருகன் வதம் செய்த கதை நாம் அறிந்ததே ஆகும். அவ்வாறு சூரபத்மனை வதம் செய்ய சென்ற முருகப்பெருமான் இந்த மலையில் சிறிது நேரம் இளைப்பாறியுள்ளார். அப்போது அவருடைய பாதச்சுவடுகள் இங்கு பதிந்ததாகவும் கூறப்படுகிறது. நீங்கள் அங்கே சென்றால் முருகப்பெருமானின் பாதச்சுவடுகளை கண்குளிர தரிசித்து வரலாம்.
தல அமைப்பு:
தீர்த்தகிரி முருகன் கோயிலின் மூலவர் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி மக்களுக்கு அருளாசி வழங்குகிறார். இங்கு, முருகப்பெருமானும், வள்ளி அம்மையும் சம உயரத்திலும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகிறார்கள். இதற்கான காரணமாக, முருகப்பெருமான் காதலிக்கு அளித்த மரியாதை எனக் கூறப்படுகிறது. இதனால் இங்கு அதிக அளவில் காதல் திருமணங்கள் நடைபெறுவதாக இங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.
கோயிலின் அடிவாரத்தில் செல்வ விநாயகர் சன்னதியு, மலை மீது வெங்கடாசலபதி பெருமாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பிகை, மற்றும் சைவ சமயக் குரவர்கள் நால்வர் சன்னதிகளும் அமைந்துள்ளன.
இங்கு நவக்கிரகங்களும் அவர்களுடைய வாகனங்களுடன் காட்சி அளிக்கின்றனர். தீர்த்தகிரி முருகன் கோயிலின் மேற்கே ஆலமரமும் கிழக்கே அத்திமரமும் தென்கிழக்கே அரசமும் உள்ளன. கோயிலின் தென்கிழக்கே தல விருட்சமான நாவல் மரம் உள்ளது.
உலகின் மூன்றாவது உயரமான முருகன் சிலை:
இந்த கோயிலின் மிக முக்கிய அம்சம், கோயிலில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான முருகன் சிலையே ஆகும். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த சிற்பியே, இங்கு பீடத்துடன் சேர்த்து 92 அடி உயரமுள்ள உலகின் மூன்றாவது உயரமான முருகன் சிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலை, மலையின் அழகுக்கு மேலும் ஒரு சிறப்பைச் சேர்க்கிறது.
திருவிழாக்கள்:
ஆடிக் கிருத்திகை மூன்று நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சஷ்டி, சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. பௌர்ணமி மற்றும் பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
தல அமைவிடம்:
தீர்த்தகிரி முருகன் கோயில் வேலூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பேருந்தில் செல்வதாக இருந்தால், சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் அடுத்துள்ள சத்துவாச்சேரிக்குப் பிறகு, வள்ளலார் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து கோயிலுக்கு செல்லலாம்.
ரயிலில் செல்வதாக இருப்பின், கோயிலுக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் காட்பாடி ஆகும். அங்கிருந்து உள்ளூர் பேருந்துகள் அல்லது ஆட்டோக்கள் மூலமாக கோயிலுக்கு செல்லலாம். தீர்த்தகிரி முருகன் கோயில் ஒரு ஆன்மீகத் திருத்தலம் மட்டுமல்ல, இயற்கை அழகையும், அமைதியையும் ஒருங்கே அனுபவிப்பதற்கு ஏற்ற ஒரு இடமாகும்.
மனநிறைவையும், நிம்மதியையும் தேடி வரும் பக்தர்களுக்கு தீர்த்தகிரி முருகன் கோயில் ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக, இங்குள்ள 92 அடி உயர பிரமாண்ட முருகன் சிலை, ஆன்மீகப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. முருகப்பெருமானை அண்டி வரும் பக்தர்களுக்கு தேவையான வரங்களை அள்ளி வழங்கும் தலமாகவும் உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







