தினம் ஒரு திருவாசகம்
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே
வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும்பும் அடியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
விளக்கம்
இறைவனால் அவரின் அடியவர்களுக்கு கிடைக்கும் பேரின்ப நிலையை இப்பாடல் எடுத்துரைக்கிறது. வானுலகில் உள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மேலான மெய்ப்பொருளே!
உன்னுடைய அடியவர்கள் எளியவர்களாயினும் அவர்களுக்காக இந்த மண்ணுலகுக்கு வந்து வாழச் செய்தவனே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்தவனே.
பரம்பரையாக உனக்கு தொண்டு செய்யும் அடியவர்களாகிய எங்களின் கண்களுக்கு, காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பைத் தருகின்ற தித்திக்கின்ற தேனே! பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யும் தொண்டர்களின் எண்ணத்துள் நிறைந்தவனே!
உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! எம்பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக! விண்ணுலகத் தேவர்களாலும் அணுக முடியாத இறைவன், தன்னுடைய அடியவர்கள் எளியவர்களாயினும் தானே முன்வந்து அருளுவான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |