திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்: பெருமையும் சிறப்பும் நிறைந்த திவ்ய தேசம்
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை நகரில் காவிரியின் மடக்கடையில் அமைந்துள்ள மிகவும் பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த வைணவ தலமாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களுள் இது 26ஆவது திருத்தலமாகும்.
மேலும் இது காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ் மிக்க பஞ்சரங்க தலங்களில் ஒன்றாகும். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயில், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் போன்ற பல்வேறு பேரரசுகளின் பங்களிப்புகளை பெற்று திராவிட கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு:
இக்கோயிலின் தல வரலாறு பல சுவாரஸ்யமான புராணக் கதைகளைக் கொண்டுள்ளது.
சந்திரனின் சாப விமோசனம்:
இத்தலத்தின் பெயர் சந்திரனுடன் தொடர்புடையது. ‘இந்து’ என்றால் சந்திரன் என்று பொருள். தட்சனின் சாபத்தால் காயரோக்கர் நோய்க்கு ஆளான சந்திரன், இத்தலத்தின் சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி பெருமலை நோக்கி தவம் இருந்து, சாப விமோசனம் பெற்றான். அதனால் இத்தலம் திருஇந்தளூர் என்னும் பெயர் பெற்றது.
ஏகாதசி விரத சிறப்பு:
அம்பரீசன் கதை: ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக அமைந்த தலம். அம்பரீசன் என்ற மன்னன் நூறாவது ஏகதசி விரதத்தை இங்கு முடிக்க விரும்பினார். அவனது தவ வலிமை கண்டு அஞ்சிய தேவர்கள் துர்வாச முனிவரிடம் முறையிட்டனர். முனிவர் அம்பரீசனுடைய விரதத்தை கெடுக்க எண்ணி, துவாதசி நேரத்தில் தாமதமாக நீராட சென்றார்.
துவாதசி நேரம் முடிவதற்குள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டியிருந்ததால், மன்னன் வேதியர்களின் ஆலோசனைப்படி பெருமாளை வேண்டி உள்ளங்கை தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்தான். இதனால் கோபம் அடைந்த துர்வாசர் ஒரு பூதத்தை ஏவி மன்னனை கொல்ல பணித்தார். அம்பரீசன் பெருமாளிடம் சரணடைய பெருமாள் பூதத்தை விரட்டி துர்வாச முனிவரையும் மன்னித்தருளினார்.
மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, பரிமள ரங்கநாதன் என்ற திருநாமத்துடன் இங்கிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த நிகழ்வு ஏகதசி விரதத்தின் பெருமையை நிலை நிறுத்துகிறது.
திருமங்கை ஆழ்வார்:
திருமங்கை ஆழ்வார் இத்தலுக்கு பெருமாளை பாடி மங்களாசாசனம் செய்ய வந்தார். திருமாலின் புகழழை தொடர்ந்து பாடுவதை கேட்டிருந்த பெருமாள், திருமங்கை ஆழ்வருடன் சற்று விளையாடி பார்க்க விரும்பினார். இதனால் அவரை புகழ்ந்து பாடாமல் சற்று ஊடல் கொண்டு விளையாடினார் என்று தல வரலாறு கூறுகிறது. ஆழ்வார் இங்கு 11 பாசுரங்களை பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.
தல அமைப்பு:
ஐந்து நிலை ராஜகோபுரம்: சுமார் 350 அடி நீளம் 230 அடி அகலமும் கொண்ட ஒரு பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. மூலவர் பரிமள ரங்கநாதன், சுமார் 12 அடி நீளமுள்ள பச்சை நிற கல்லில் வீர சயனக் கோலத்தில் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். வீர சயனம் என்பது ஒரு கையை தலைக்கு வைத்து மற்றொரு கையை நீட்டிப் படுத்திருக்கும் கோலம்.
பெருமானின் திருமேனி முழுவதும் சந்தனக் காப்பு பூசப்படுவதால் அவர் பரிமள ரங்கநாதர் அதாவது நறுமணம் நிறைந்தவர் என அழைக்கப்படுகிறார். தாயார் ஸ்ரீ பரிமள ரங்கநாயகி நாச்சியார் இங்கு தாயாராக தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.
கருவறை சிறப்புகள்:
கருவறையின் அமைப்பு மிகவும் விஷேசமானது. பெருமாளின் முகத்தைச் சந்திரனும், திருவடிகளை சூரியனும், நாபிக் கமலத்தை பிரம்ம தேவரும் பூஜிப்பதாகப் பல வரலாறுகள் கூறுகின்றன. பெருமானின் தலை அருகே காவிரியும், திருவடி அருகே கங்கையும் காட்சியளிக்கின்றன. கங்கையை விட காவிரி புனிதமானது என்ற சிறப்பை இத்தலம் பெறுகிறது. எமதர்மராஜனும் அம்பரீச சக்கரவர்த்தியும் இரவும் பகலும் பெருமாளை பூஜித்துக் கொண்டிருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்
விமானம் மற்றும் மண்டபங்கள்:
விமானம்: கருவறைக்கு மேலே வேதச் சக்கர விமானம் அமைந்துள்ளது. ராஜகோபுரம்: ஐந்து நிலைகளைக் கொண்ட கம்பீரமான கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். கருடன் மண்டபம் - கருட மண்டபத்தில் திருமாலின் பத்து அவதாரங்களும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மண்டபங்கள் - விஜயநகர நாயக்கர் காலப் பணிகளில் கட்டப்பட்ட மண்டபங்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன.
பிற சிறப்பம்சங்கள்:
தீர்த்தம்:
சந்திர புஷ்கரணி தீர்த்தம் அல்லது இந்து புஷ்கரணி.
கடை முழுக்கு:
ஐப்பசி மாதம் கடைசி ஞாயிறன்று மயிலாடுதுறையில் நடைபெறும் புகழ் பெற்ற கடை முழுக்கு அதாவது கடைசி நீராடல் விழாவின் போது, இத்தல பெருமாள் உள்ளிட்ட சிவா, விஷ்ணு கோயில்களின் தெய்வங்கள் காவிரியாற்றுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
பிரார்த்தனை:
ஏகாதசி விரதம் மேற்கொள்ள விரும்புபவர்கள் இத்தலத்தில் இருந்து விரதத்தைத் தொடங்கலாம். பெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுவது இங்கு வழக்கம்.
மற்ற சன்னதிகள்:
யோக நரசிம்மர், ராமன், ஆஞ்சநேயர், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. மாத வீதியில் பழமையான ஹயக்ரீவர் சன்னதி அமைந்துள்ளது.
திருவிழாக்கள்:
சித்திரை மாதம்: தமிழ் வருடப் பிறப்பையொட்டி சித்திரை மாதத்தில் பெருமாள் வீதி உலா புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆடி மாதம்:
ஆண்டாளின் பெருமையைப் போற்றும் வகையில், ஆடி மாதத்தில் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் பத்து நாட்களுக்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதம்:
கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி ஆவணி மாதத்தில் ஐந்து நாட்களுக்கு கண்ணன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். புரட்டாசி மாதம்: பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் புரட்டாசியில், தாயாருக்குரிய நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது. விழாவின் நிறைவாக, விஜயதசமி அன்று பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
ஐப்பசி மாதம்:
ஐப்பசி மாதத்தில் 10 நாட்களுக்கு துலா மகோற்சவம் (கடை முழுக்கு) கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதக் கடைசி நாளில், மயிலாடுதுறையில் உள்ள சிவன், விஷ்ணு ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் காவிரிக் கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
மார்கழி மாதம்:
மார்கழி மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்தில்தான் ஏகாதசி விரதம் சிறப்புப் பெற்றது என்ற பெருமையும் உண்டு. பங்குனி மாதம்: பங்குனி மாதத்தில் 10 நாட்களுக்குப் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
இது தவிர, தை மாதத்தில் மகர சங்கராந்தி உற்சவம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளும் இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் இந்த உற்சவங்களில் கலந்துகொண்டு பரிமள ரங்கநாதரின் அருளைப் பெறலாம்.
வழிபாட்டு நேரம்:
பொதுவாக, இக்கோயில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காகக் கீழ்க்கண்ட நேரங்களில் திறந்திருக்கும். இருப்பினும், திருவிழா காலங்களில் நேர மாற்றங்கள் இருக்கலாம்.
காலை: 6.30 மணி முதல் 11.30 மணி வரை மாலை: 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் வரலாற்றுப் பெருமையும், புராணச் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு அற்புதப் பயணத் திருத்தலமாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது.நீங்களும் ஒருமுறை சென்று பெருமாளின் அருளைப் பெற்று திரும்புங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







