திருக்காஞ்சி வராக நதி காமாட்சி மீனாட்சி திருக்கோவில்
திருக்காஞ்சி என்னும் திருத்தலம் பாண்டிச்சேரி விழுப்புரம் சாலையில் வில்லியனூர் அருகே 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வராக நதிக்கரையில் வராக நதீஸ்வரர் கோவில் கொண்டு உள்ளார். அவருடன் அன்னை மீனாட்சி தனியாகவும் அன்னை காமாட்சி தனியாகவும் இரண்டு சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர்.
சங்கரனுக்கு ஆபரணமாக விளங்கும் சங்கராபரணி என்ற வராக நதியின் கரையில் இக்கோவில் இருப்பதினால் இறைவனின் பெயர் வராக நதீஸ்வரர் ஆகும்.
திருத்தலத்தின் பெருமை
வராக நதியின் கரையில் குபேரவர்மன், நாகேந்திரன், கேசவ வர்மன், கமலன், மங்களன், வியூக முனி போன்ற சித்தர்களின் சமாதி இருந்தது. இக்கோவிலின் வடகிழக்கு மூலையில் கங்காதர சாமிக்கும் சதாசிவ சாமிக்கும் அதிஷ்டானங்கள் இருந்துள்ளது.
கதை 1
எலும்பும் சாம்பலும்
பூவாக மாறின காசிக்கு தன் தந்தையின் அஸ்தியை எடுத்துச் சென்ற ஓர் அந்தணர் இத் திருக்காஞ்சித்தலத்தை வந்தடைந்த போது அஸ்தி கலயத்தில் இருந்த சாம்பல் அனைத்தும் மலர்களாக மாறி இருந்தது. அதைக் கண்டு வியந்து அவர் இத்தலத்தில் இருக்கும் இறைவனை வணங்கி மகிழ்ந்தார்.
எலும்பாய் கிடந்தவள் பூவாய் மாறிய இதே கதை பூம்பாவை வரலாறு என்ற பெயரில் மதுரை அருகே உள்ள புஷ்பவனநாதர் கோயில் கொண்டிருக்கும் திருப்பூவனம் கோவிலுக்கும் சொல்லப்படுகிறது. இக்கோவில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது.
அங்குத் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து இறந்தவருக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கின்றனர்.. எனவே இத்தலத்தில் நீத்தார் கடன் நிறைவேற்றுவது மறைந்தோரின் ஆத்தும சாந்திக்கு வழிவகுக்கும். இதனால் காசி, ராமேஸ்வரம் என திருத்தலயாத்திரை செல்பவர்களும் திருக்காஞ்சி வந்து வராகநதிச்வரரை வணங்கிச் செல்கின்றனர்.
கோயில் அமைப்பு
வராத நதீஸ்வரர் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். அன்னை காமாட்சி தெற்கு நோக்கியும் மீனாட்சி தனியாக கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். மிகப்பெரிய ஸ்ரீ விநாயகர் தனி சன்னிதியில் விமானத்துடன் கோயில் கொண்டு உள்ளார். பரிவாரத் தெய்வங்களான முருகப்பெருமான், விஷ்ணு, துர்க்கை, பைரவர், லட்சுமி வராகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள் ஆகியோர் உபசன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர்.
வெள்ளம்
வராக நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் நதிக்கரையில் இருந்த இக்கோயிலின் பல பகுதிகள் ஜீவ சமாதிகளும் அதிட்டானங்களும்) அழிந்து விட்டன. சிவலிங்கமும் தண்ணீரில் மூழ்கி விட்டது.
ஆயினும் ஒரு ஐயர் மட்டும் தொடர்ந்து வெள்ளத்தில் எதிர்நீச்சல் அடித்து நீந்தி வந்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்த திரும்பினார். எனவே சிவலிங்கம் மட்டும் காப்பாற்றப்பட்டது. மற்ற கோயில் பகுதிகள் புதிதாகக் கட்டப்பட்டன.
வழிபாடுகளும் திருவிழாக்களும்
சிவலிங்கத்தின் சிறப்பு திருக்காஞ்சியில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் ராஜராஜ சோழன் மற்றும் அவன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கங்கைகொண்ட சோழபுரம் கோவில்களில் காணப்படும் சிவலிங்கம் போல சோடச லிங்கமாக பதினாறு பட்டைகளுடன் கூடியதாக விளங்குகிறது.
இந்த லிங்கத்தை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்தார் என்றும் கூறுகின்றனர். அமாவாசை அன்றும் சிவலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. சிவனுக்கு உகந்த வில்வம் இங்குத் தலவிருட்சமாக விளங்குகின்றது
அம்மனின் சிறப்பு
திருக்காஞ்சி திருக்கோவில் அம்மனுக்கு உகந்த கோவிலாக இருப்பதனால் இங்கு பௌர்ணமி பூஜை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நவராத்திரி நாட்களில் அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விஜயதசமி அன்று அம்மன் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு கிளம்புவாள் .
அம்மன் வழிபாடு
அம்மனுக்குரிய ஆடி மாதத்தில் இக்கோயிலில் அவளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடிப்பூரத்தன்று தேரோட்டம் நடைபெறும். இத்தேரோட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.
அடுத்ததாக அம்மனுக்கு வளையல் உற்சவம் நடைபெறும். பக்தர்கள் அம்மனுக்கு வளையல் வாங்கி வந்து படைப்பார்கள். ஆடிப் பூரத் திருநாளில் மட்டும் அம்மனுக்கு சுமார் ஒரு லட்சம் வளையல்கள் காணிக்கையாக வந்து சேரும். பின்பு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.
நதியின் சிறப்பு
வராக நதி வடக்கு நோக்கி பாயவதால் கங்கை என்று பெயர் சூட்டிப் புகழ்கின்றனர். புதுச்சேரி அருகே கடலை நோக்கிக் கிழக்காக திரும்பி செல்லும் இந் நதி திசை மாறி வடக்கு நோக்கி பாய்ந்து திருக்காஞ்சிக்கு வந்து பின்பு கிழக்கு நோக்கி கடலுக்குச் செல்கின்றது. இந் நதியை கொழுஞ்சி ஆறு, வராக நதி, சங்கராபரணி நதி , செஞ்சி ஆறு என்று பலவாறு அழைக்கின்றனர்.
முன் வரலாறு
1.திருக் காஞ்சி கோயிலில் ரிஷிகளின் அல்லது துறவிகளின் சமாதிகள் இருந்த தகவல் இக்கோவில் புத்த துறவிகளின் பழைய மடாலாயம் என்பதை உறுதி செய்கிறது.
2.காஞ்சி என்ற பெயர் பௌத்தர்களின் பல்கலைக்கழகம் இருந்த இடத்தில் பெயர். ஏழாம் நூற்றாண்டில் போதிதர்மர் சீனாவுக்கு போய் பௌத்த சமயத்தை அங்குப் பரப்பிய போது உத்துகளின் வரி வடிவத்துக்கு காஞ்சி என்று பெயரிட்டார். காஞ்சிபுரத்தில் நாளந்தா போன்ற பெரிய புத்த பல்கலைக்கழகம் இருந்தது. அங்கு வெளிநாட்டு பௌத்த துறவிகள் வந்து தங்கிப் படித்தனர்.
3.பௌத்த மடாலயங்களில் பெண் புத்தரான தாரா தேவிக்கு சந்நிதி உண்டு. இந்திரனுக்கு லிங்க பானம் வழிபடு பொருளாக இடம் பெற்றது. . தாரா பிற்காலத்தில் அம்மனாக வணங்கப்பட்டாள். கோயிலில் உள்ள அம்மன் சிலைகளுக்கும் மியுசியங்களில் உள்ள தாராவின் செப்புத் திருமேனிகளுக்கும் வேறுபாடு கிடையாது. தாராவை புத்தர்களின் தாயாக போற்றி வணங்கினர்.
சைவ எழுச்சிக்கு பிறகு தாரா, அம்மன் என்று பெயர் மாற்றம் பெற்று மீனாட்சியம்மன் , காமாட்சியம்மன் என்று வணங்கப்பட்டாள். காம யட்சி என்ற பெயரில் வெறும் அவுடை வழிபாடாக பௌத்தர்கள் காஞ்சிபுரத்தில் கோயில் கட்டி வழிபட்டனர்.
இவ்வாறு ஐந்து காமக்கோட்டங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றுள் ஆளுடைய நாச்சியார் காமக்கோட்டம் பெண்ணரசி மீனாக்ஷிக்கு உரியது. மீனாட்சி, காமாட்சி, நீலாயதாட்சி, திருமங்கலக்குடி மங்களேஸ்வரி, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி போன்றவர்கள் இணைத் தெய்வமாக சிவலிங்கம் இருந்த போதிலும் இன்றும் தனிப் பெண் தெய்வங்களாகச் சிறப்பிடம் பெற்றுள்ளன.
4. இயற்கை (ஒளி) வழிபாட்டின் தொடர்ச்சியாக பௌத்தர்கள் முக்கியத்துவம் கொடுத்த பௌர்ணமி பூஜை (கிரி வலம்) மனிதப் பிறப்புக்குரிய பெண் தெய்வங்களுக்கு உரியது. இங்கு காமாட்சியும் மீனாட்சியும் பெண் தெய்வங்களாகத் தனித்தனி சந்நிதியில் இருந்து தன் மக்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
5. இத்திருக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிநாயகர் பௌத்த விநாயகரின் தொடர்ச்சி ஆவார். கௌதம் புத்தரை பௌத்தர்கள் சிறந்த நாயகன் என்ற பொருளில் விநாயகர் என்று அழைத்தனர்.
சென்னை மியூசியத்தில் உள்ள பௌத்த செப்புத் திருமேனிகளில் நாயகர் மற்றும் விநாயகர் என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கௌதம் புத்தருக்கு சிலை வைக்க தொடங்கிய போது மிக பெரிய சிலைகளை யானை முகத்துடன் வைத்தனர்.
பின்னர் மனித முகத்துடன் வைக்கத் தொடங்கினர். அசோக மாமன்னர் முதன் முதலாக புத்தருக்கு சிலை வைத்த போது வெள்ளை யானை ஒன்று கருப்பையில் இருந்து வெளிவருவதை போன்று வைத்தார். காரணம், புத்தரின் தாயார் கருவிற்றிருந்த காலத்தில் அவர் வயிற்றுக்குள் பேரொளியுடன் ஒரு வெள்ளை யானை புகுவது போல் கனவு கண்டார்.
எனவே அந்த வெள்ளை யானை வெளியே வருவது போல் அசோகர் சிலை வைத்தார். அன்று முதல் யானை முகம் என்பது ஞானத்தின் குறியீடாக கௌதம் புத்தரைக் குறித்தது. ஆரம்பத்தில் யானை முகமும் மனித உடலும் கொண்ட பெரிய சிலைகளை புத்தருக்கு வைத்து வணங்கினர்.
பின்பு 12ஆம் நூற்றாண்டில் அக்கினி புராணத்தில் புத்தர் பெருமாளின் கடைசி அவதாரமாக போற்றப்பட்டார். திருக்காஞ்சி கோயிலில் பெரிட விநாயகர் தனியாக விமானத்துடன் கோயில் கொண்டிருப்பது இக்கோயில் பழைய புத்தர் கோயில் என்பதை குறிக்கின்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |