பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட வேண்டுமா? திருப்புவனம் சிவபெருமானை தரிசனம் செய்தால் போதும்
பாண்டிய நாட்டில் உள்ள சிவாலயங்களில் 14 பாடல்கள் பாடப்பெற்ற தலங்களுள் நாயன்மார்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடப்பட்ட சிறப்புடைய தலமே திருப்புவனம். சிவபெருமான் செய்த 64 திருவிளையாடல்களுள் ஒன்றூம் இங்கு நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் மூவேந்தர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் வழிபட்ட இடமாகவும் திருப்புவனம் விளங்குகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்புவனம் புஷ்பனேஸ்வரர் கோயிலின் சிறப்பை முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் உள்ள புஷ்பவனேஸ்வரர் கோயில் ( பூவனநாதர் கோயில் அல்லது தீர்பூவனம் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது ) சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .
திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோயிலானது 7 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது . சிவன் புஷ்பவனேஸ்வரர் என்றும், அவரது மனைவி பார்வதி சௌந்தரநாயகி என்றும் இந்த தலத்தில் போற்றப்படுகின்றனர்.
மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்புவனம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்புவனம் செல்லலாம். திருப்புவனம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.
தல சிறப்புகள்:
நாயன்மார்களுள் முதன்மையானவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தர் இந்த தலத்திற்கு வருகை புரிந்தபோது வைகை ஆற்றை கடந்து மறுகரைக்கு செல்ல வேண்டும். ஆனால் வைகை ஆற்றில் இருந்த மணல் சிவலிங்கங்களாக அவருக்கு காட்சி அளித்ததால் அவற்றை மிதித்து செல்ல மனம் இல்லாமல் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார்.
ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க முடியாத வகையில் நந்தி மறைத்து கொண்டிருந்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார்.
நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து மூவரும் தேவாரம் பாடி தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்கப்படுகிறது.
தல அமைப்பு:
கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் கோயில் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சன்னதி தனிக்கோவிலாக ஒரு சிறிய கோபுரத்துடன் காணப்படுகிறது. பெரிய கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் உள்ளன.
ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. அதனை தொடர்ந்து மூலவரான புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் அருள்பாலிக்கிறார். லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன.
கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்னால் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் என அழைக்கப்படுகின்றன. கோயிலின் தலவிருட்சமாக பலாமரம் விளங்குகிறது.
மணிகர்ணிகை தீர்த்தம், வைகைநதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை கோயிலின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், சமயக்குரவர்கள் நால்வர், நாயன்மார் 63 பேர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவக்கிரகங்கள் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.
இறைவன் திருவிளையாடல்:
திருப்பூவணத்தில் பொன்னையாள் என்ற பெயருடைய பெண்ணொருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இறைவன் பூவணநாதர் மேல் மிகுந்த பக்தி கொண்டவளாக இருந்தாள். அவளுக்கு பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால் அதற்குரிய பண வசதி அவளிடம் இல்லை. தனது ஆசையை நிறைவேற்றித் தருமாறு இறைவனை வேண்டிக் கொண்டே இருந்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க திருவுளம் கொண்ட இறைவன் ஒரு சித்தராக அவள் முன் வந்தார்.
பொன்னையாள் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்தார். கிடைத்த தங்கத்தால் பூவணநாதரின் திருவுருவை வடிக்கச் செய்தாள்.
தங்கத்தால் உருவான சிலையின் அழகைக் கண்ட பொன்னையாள் அதைக் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளிய இடம் சற்றே பள்ளமானது. இன்றும் பூவணநாதரின் அந்த திருவுருவச் சிலையில் கன்னத்தில் முத்தக்குறி அடையாளம் இருப்பதைக் காணலாம்.
இறைவன் நடத்திய இந்த திருவிளையாடல் படலம் இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. சிவபெருமான் திருவிளையாடல் நடத்திய தலத்தினையும் நந்தியின் தலைசாய்ந்த நிலையையும் நீங்களும் ஒருமுறை கண்டு களித்து வாருங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |